×

கல்லீரல் சிகிச்சையில் புதுமை!

நன்றி குங்குமம் டாக்டர் மருத்துவ சிகிச்சைகள் அடுத்தகட்ட பாய்ச்சலில் நவீனமடைந்திருக்கின்றன என்பதற்கான உதாரணம் இது. கல்லீரல் மாற்று சிகிச்சையில் வழக்கமாக நடைபெறும் முறை என ஒன்று உண்டு. தானம் அளிப்பவரின் உடலில் இருந்து அறுவை சிகிச்சை செய்து, தானம் பெற வேண்டியருக்குண்டான பகுதியை வெட்டி எடுப்பார்கள். இதில் பல நடைமுறை சவால்கள் தானம் அளிப்பவருக்கு உண்டு; டாக்டர்களுக்கும் உண்டு. ஆனால், லேப்ராஸ்கோப்பி முறையிலான புதிய முறை இதிலிருந்து பெரிய நன்மை தருகிறது. இதுகுறித்து விளக்குகிறார் கல்லீரல் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் செந்தில்நாதன். ‘‘ஒருவருக்கு கல்லீரல் பாதிப்பு வருவதற்குப் பலவிதமான காரணங்கள் உள்ளன. அவற்றில் ஹெப்படைட்டிஸ் போன்ற கிருமிகள், மதுப்பழக்கம், உடல் பருமன், மருத்துவர் அறிவுரை இல்லாமல் தாங்களாகவே மருந்துகளை உட்கொள்ளல், புற்றுநோய் போன்றவற்றை முதன்மை காரணங்களாக சொல்லலாம்.; பச்சிளம் குழந்தைகளுக்குப் பிறவியிலேயே கல்லீரல் பாதிப்பு வரலாம். 3, 4 மாத குழந்தைகளுக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யலாம். ஒரு சில குழந்தைகளுக்குப் பிறக்கும்போதே கல்லீரலில் ஏதேனும் பிரச்னை காணப்படும். ஆனால், ஆறேழு வயதாகும்போதுதான் அந்தப் பிரச்னை வெளிப்படத் தோன்றும். அவர்களுக்கும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளலாம். இவ்வாறு சர்ஜரி மூலம் கல்லீரலை மாற்றுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என்பது மருத்துவத்துறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைகளில் மிகவும் சவாலான ஒன்றாகும். ஆனால், பிழைக்க மாட்டார்கள் என்ற நிலையில் இருப்பவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மட்டும்தான் இறுதியான, உறுதியான சிகிச்சை. கல்லீரல் பாதிப்பு சிரோசிஸ், புற்றுநோய் வந்துவிட்டால் நோயாளிக்கு அறுவை சிகிச்சை தேவை என்பதைக் கண்டுபிடிக்க, Mild Scale, Child Scale எனப் பல அளவீடுகள் உள்ளன. இவற்றின் மூலம் ஒருவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு தகுதியானவர் என்பதை உறுதி செய்த பின்னர், அந்நோயாளிக்கு ஆலோசனை மூலமாக டிரான்ஸ்பிளான்ட் சர்ஜரி செய்ய வேண்டிய கட்டம் வந்துவிட்டது என்பதைப் புரிய வைப்போம். அவருக்குத் தேவையான உறுப்பை, இறந்தவரின் உடல் அல்லது வாழும் குடும்ப உறுப்பினரிடம் இருந்து தானமாகப் பெறுவோம். இறந்தவர் உடலில் இருந்து உறுப்புக்களைத் தானமாகப் பெறுதல் என்பது முழுக்கமுழுக்க அரசாங்கம் சார்ந்தது. நோயின் தாக்கத்தின் அடிப்படையில் முன்னுரிமை தரப்படும். ஒன்றிரண்டு உறுப்புகள்தான் இந்த முறையில் தானமாக கிடைப்பதால், இதற்காக பதிவு செய்து காத்திருக்கும் நோயாளிகள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி வருகிறது. இதனிடையே உறுப்பிற்காக காத்திருக்கும் நோயாளியின் உடல்நிலை மேலும் பலவீனமடையலாம். பலவீனம் அதிகரிக்க அதிகரிக்க அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொள்ள முடியாது. இந்த சூழ்நிலையில் வாழும் கொடையாளிகளிடமிருந்து ஒரு பகுதி கல்லீரல் பெறப்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்வது ஒன்றுதான் ஆயிரக்கணக்கான நோயாளிகளை காப்பாற்ற இருக்கும் ஒரே வழி. இந்த கல்லீரல் கொடை அறுவை சிகிச்சையால் ஆண், பெண் என யாருக்கும் கல்லீரல் கொடையால் எந்த விதமான பாதிப்பும் வராது. தற்போது மருத்துவ துறையில் ஏராளமான நவீன வசதிகள் உள்ளன. எனவே, பயப்படத் தேவையில்லை. லேப்ராஸ்கோப்பி என்கிற நுண்துளை சர்ஜரி முறையில் தழும்பு வெளியே தெரியாது. உடலுறுப்பைத் தானம் செய்ய முன் வருபவர்களுக்கு ரத்தம், கல்லீரல் மற்றும் இதயம் ஆகியவற்றை முழுமையாகப் பரிசோதிப்போம். அதனடிப்படையில் டோனர் தகுதியானவரா என்பதை முடிவு செய்வோம். சில நேரங்களில் நாங்களே உறுப்பு தானம் செய்ய வருபவரை நிராகரித்து விடுவோம். இதற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலாவது அந்நபர் 18 வயதைக் கடந்தவராகவும், 60 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். 18-லிருந்து 50 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால் பொருத்தமாக இருக்கும். இதயப் பிரச்னை, சிறுநீரக பாதிப்பு போன்ற பெரியபெரிய நோய் இருக்கக்கூடாது. உடல் எடை அளவுக்கு அதிகமாக இருக்கக் கூடாது. ஒருவேளை தானம் செய்வோருக்கு உடல் எடை கூடுதலாக இருந்தால், எடையை குறைத்த பின்னர்தான் உறுப்பை தானமாகப் பெற முடியும். அவ்வாறு பெறப்படும் கல்லீரல் நோயாளிக்குப் பொருத்தமாக இருப்பது அவசியம். தானம் செய்பவர் உடலில் 30% கல்லீரல் மீதம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வாழும் ஒருவர் கல்லீரலின் ஒரு பகுதியை தானம் கொடுத்தால் ஒன்றரை அல்லது இரண்டு மாதங்களுக்குள் கொடையாளியின் உடலில் கல்லீரல் பழைய நிலைக்கு முழுமையாக வளர்ந்துவிடும்.அவர்களுக்கு வயிற்றில் பெரிய தழும்பு ஏற்படும். பல நேரங்களில் திருமண வயதில் இருக்கும் பெண்களுக்கு இதனால் சமூகப் பிரச்னைகள் வரக்கூடும். முக்கியமாக கணவன் வீட்டில் எந்த மாதிரியாகவும் பிரச்னைகள் வரலாம். இளம் பெண்கள் தந்தை போன்ற நெருங்கிய உறவுகளுக்குக் கல்லீரல் தானம் செய்ய முன்வரும்போது ஓப்பன் அல்லது லேப்ராஸ்கோப்பி சர்ஜரி என எதுவாக இருந்தாலும், மருத்துவர்கள் நன்றாக செய்துவிடுவார்கள். பெரிய தழும்பாக இருந்தால் வலியும் அதிகமாக காணப்படும். மருத்துவமனையில் தொற்று ஏற்பட்டு சீழ் பிடிக்கும் வாய்ப்பும் உள்ளது. பெரிய தழும்பாக இருந்தால் குடலிறக்கம் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு. ஆனால், லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலம் உறுப்பு தான அறுவை சிகிச்சை செய்யப்பட்டால், நான்கைந்து நாட்களுக்குள் உடல்நிலை தேறி வீட்டுக்கு சென்று விடலாம். லேப்ராஸ்கோப்பி சர்ஜரி செய்வதால் உடலின் புறத்தோற்ற அழகு எந்த வகையிலும் பாதிக்காது. முக்கியமாக, தழும்பு போன்ற அறிகுறிகள் கொஞ்சமும் வெளியே தெரியாது. குடலிறக்கம் போன்ற பின்விளைவுகள் ஏற்பட வாய்ப்பு இல்லை. இது மாதிரி பலவிதமான நன்மைகள் இந்த சர்ஜரி மூலம் கிடைக்கும்’’ என்கிறார்.குடலியல் அறுவை சிகிச்சை நிபுணர் சுவாமிநாதன் இதுகுறித்து சமீபத்தில் மேற்கொண்ட ஓர் அனுபவத்துடன் நம்மிடம் பேசினார். ‘‘சமீபத்தில் சென்னையில் இருக்கும் எங்களுடைய ஜெம் மருத்துவமனைக்கு, ஆபத்தான கட்டத்துடன் வந்த ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்க நேர்ந்தது. அவருக்கு அவரின் கல்லீரல் மருந்து, மாத்திரைகளால் குணப்படுத்த முடியாத அளவுக்கு End Stage Liver Disease என்ற கல்லீரல் நோயின் இறுதிக்கட்ட நிலைக்கு வந்துவிட்டது. ஆரம்பத்தில் நோயாளியின் உறவினர்கள் மருந்துகள் மூலம் அவரைக் குணப்படுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால் முடியவில்லை. அவர் நோயிலிருந்து மீண்டு உயிர் வாழ வேண்டுமென்றால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைதான் ஒரே வழி என முடிவு செய்தோம். இந்த மாற்று அறுவை சிகிச்சையை மேற்கொள்ள, முதற்கட்டமாக மூளைச்சாவு அடைந்தவரின்(Cadaver Transplant) உடலில் இருந்து கல்லீரல் எடுத்து பொருத்த அவரின் பெயர் பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், உடனே கல்லீரல் கிடைக்கவில்லை. அந்த சமயத்தில், அவருடைய உடல்நிலை மோசமாக தொடங்கியது. உடனே அறுவை சிகிச்சை செய்தால்தான் உயிர் பிழைக்க முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு அவர் சென்றுவிட்டார். அவரைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நோயாளியின் நெருங்கிய உறவினர்களான(முழு ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள்) பெற்றோர், மனைவி, மகள், மகன், தம்பி ஆகியோரிடமிருந்து கல்லீரலை தானமாகப் பெற முடிவு செய்யப்பட்டது. இந்த முயற்சிக்கு அவருடைய மனைவி முதலில் ஒத்துழைப்பு தர முன் வந்தார். அவர் இதய நோயாளி என்பதால், எங்களுடைய முதல் முயற்சியே தோல்வியில் முடிந்தது. ஆனாலும் எங்களுடைய முயற்சியைத் தொடர்ந்தோம். இந்த நிலையில் 19 வயதான மகள் முன் வந்தார். மனைவியைவிட மகள் இந்த அறுவை சிகிச்சைக்கு மிகவும் பொருத்தமானவராக இருந்தார். அதேவேளையில் இளம் வயது, படிப்பு, திருமணம் முதலான எதிர்கால வாழ்க்கை போன்றவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டி இருந்தது. முக்கியமாக இவ்வளவு பெரிய அறுவை சிகிச்சையை இவரால் தாங்க முடியுமா என்ற ஐயம் மருத்துவர்கள் அனைவருக்கும் தோன்றாமல் இல்லை. கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை லேப்ராஸ்கோப்பி சர்ஜரி மூலம் செய்யலாம் என்று முடிவெடுத்தோம். அவரது குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியுடன் முழு சம்மதம் தெரிவித்தனர். ஏனென்றால், அது ஓப்பன் சர்ஜரி கிடையாது. பெரிதாக அறுக்க வேண்டியது இல்லை. காயமோ, தழும்போ ஏற்படாது. நிறைய நாள் ஓய்வு தேவைப்படாது. அதனைத் தொடர்ந்து நித்யாவின் வலது மற்றும் இடது பக்க ஈரல் அமைப்பு எவ்வாறு உள்ளது என்பதை பரிசோதித்தோம். அதில் லேப்ராஸ்கோப்பி சர்ஜரி செய்வதற்கேற்ற சாதகமான முடிவுகள் எங்களுக்குக் கிடைத்தன. இந்த அறுவை சிகிச்சை ஜப்பான், சீனா, தைவான் ஆகிய நாடுகளில் பிரபலம். நமது நாட்டில் இன்னும் பிரபலமாகவில்லை. நுண்துளை சிகிச்சை(Laparoscopy) மிகவும் சவாலான விஷயம். கல்லீரலை சரியான அளவில் வெட்டி எடுத்து பொருத்த வேண்டும். இதற்கு சரியான மருத்துவ உபகரணங்கள் தேவை. கல்லீரல் தானம் செய்த பெண் அறுவை சிகிச்சை முடிந்த அடுத்த நாளே நடக்க தொடங்கினார். மூன்றாம் நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இப்போது சுறுசுறுப்பாகவும் இயல்பாக உள்ளார்’’ என்கிறார். கல்லீரல் கொடையாளி நிவேதாவிடம் பேசினோம்…;‘‘12-ம் வகுப்பில் பயாலஜி படித்தேன். அதனால் உறுப்பு தானம் பற்றிய அடிப்படையான விஷயங்கள் ஓரளவுக்குத் தெரியும். அப்பாவுக்குக் கல்லீரல் தானம் கொடுப்பது முடிவானதும், இணையதளத்தில் தேடிப்பார்த்து இன்னும் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். தந்தையின் உடல் நிலைதான் முக்கியம். எனவே, எத்தகைய பாதிப்புகள் வந்தாலும், தானம் கொடுப்பதில் உறுதியாக இருந்தேன். இதற்காக முழு உடற்பரிசோதனை செய்தார்கள்.எக்ஸ்-ரே, ஸ்கேன் எடுத்தார்கள். என்னுடைய உடல்நிலை நன்றாக இருந்த காரணத்தால் மருத்துவ குழுவினர் இந்த அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தனர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபோது வலி அவ்வளவாக இல்லை. ஆபரேஷனுக்குப் பிறகு 2 நாள் வலி இருந்தது. அதுவும் நாளடைவில் சரியாகிவிட்டது. மருத்துவமனையில் இருந்தபோது வெறும் திரவ உணவுதான் சாப்பிட்டேன். ட்ரிப்ஸ் ஏற்றினார்கள். இப்போது முழு ஆரோக்கியத்துடன் உள்ளேன். கல்லீரல் இயங்குவதற்காக மருந்து கொடுத்துள்ளார்கள். தையல் போடப்பட்டு உள்ளதால் ஒரு மாதம் வரை வெயிட் தூக்கக் கூடாது. வேகமாக நடக்க கூடாது. காரம், எண்ணெய் சாப்பிடக்கூடாது என அறிவுறுத்தி உள்ளனர்’’ என்கிறார்.தொகுப்பு : விஜயகுமார்படங்கள்: ஜி.சிவக்குமார்

The post கல்லீரல் சிகிச்சையில் புதுமை! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kumkum ,Dinakaran ,
× RELATED போட்டோ ஏஜிங்… இது வெயிலால் வரும் முதுமை!