×

வறுமையிலும் தளரவில்லை… சாதிக்க துடிப்பு…தக்கலை பஸ்நிலையத்தில் அமர்ந்து ஆன்லைன்தேர்வு எழுதிய மாணவர்-செல்போன் உதவி செய்த நண்பர்

தக்கலை :  தக்கலை பஸ் ஸ்டாண்ட் நடைபாதையில் இளைஞர் ஒருவர் பேப்பர்களை விரித்து அதில் ஏதோ அவசரம் அவசரமாக எழுதிக்கொண்டிருந்தார். இதனை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்துச் சென்றனர். இவர் இப்படி அவசரமாக  என்ன எழுதுகிறார் என்ற கேள்வி பலர் மனதில் எழுப்பினாலும் அவரிடம் யாரும் கேட்கவில்லை.அங்கு சென்று பார்த்த போது இளைஞர் ஒருவர் பல்கலைக்கழக தேர்வை எழுதிக் கொண்டிருந்தார்.  அவர் தேர்வு எழுத வசதியாக அவருடன் பயின்ற கல்லூரி நண்பர் ஒருவரும் வந்திருந்தார். அவரிடம் கேட்ட போது,  கருங்கல் அருகே உள்ள விழுந்தயம்பலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி அரிசந்திரன் மகன் ரமேஷ் (29) என்று தெரிய வந்தது. இவருடைய இரண்டு சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகளுக்கு திருமணமான நிலையில் வறுமையிலும் வயதான நிலையிலும் பெற்றோர் பனிரெண்டாம் வகுப்பு வரை ரமேஷை படிக்க வைத்துள்ளனர். பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ரமேஷ் தமிழ் மொழி மீது கொண்ட பற்றால் தன்னை பி.ஏ. தமிழ் பட்ட படிப்பில் சேர்க்க தனது பெற்றோர் மற்றும் சகோதர சகோதரிகளிடம் உதவி கேட்டுள்ளார். ஆனால் யாரும் உதவி செய்ய முன் வராத நிலையில் தனது நண்பர்களின் உதவி மற்றும் சிறு சிறு வேலைகள் செய்து சேமித்து வைத்திருந்த பணம் மூலம் நாகர்கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்து பி.ஏ தமிழ் மூன்று வருட பட்ட படிப்பை முடித்தார்.தொடர்ந்து எம்.ஏ தமிழ் படிக்க போதிய பொருளாதார வசதி இல்லாத நிலையில் மீண்டும் கூலி வேலைக்கே சென்றுள்ளார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அதே கல்லூரியில் எம்.ஏ தமிழ் மேற்படிப்பிற்கு சேர்ந்து படிப்பை தொடர்ந்துள்ளார். இரண்டு ஆண்டுகள் முடிந்த நிலையில் முதலாமாண்டு முதல் செமஸ்ட்டரில் ஒரு பாடத்தில் தோல்வி அடைந்தார். அந்த பாட பிரிவை தேர்வு எழுதி வெற்றி பெற முயற்சி செய்த போது கொரோனா காலம் இவருக்கு தடையாக இருந்தது. ஆன்லைன் மொபைல் வசதியும் இல்லாத நிலையில் பலரிடம் உதவியும் கேட்டுள்ளார். இந்நிலையில் அரியர் தேர்வை ஆன் லைனில் எழுதலாம் என  அறிவிக்கப்பட்டு அதற்கான தேதி வெளியானது. இது குறித்து கேள்விப்பட்ட ரமேஷ் தேர்வு கட்டணத்தை செலுத்தியுள்ளார். ஆண் லைன் தேர்வு நேற்று நடைபெற்றது. அதற்கான ஸ்மார்ட் போன் மற்றும் இணைய வசதி தன்னிடம் இல்லாத நிலையில் நேற்று  தக்கலை வந்த ரமேஷ் முட்டைக்காடு பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவரை தேடி கண்டுபிடித்து அவர் மூலமாக கேள்வி தாள்களை பதிவிறக்கம் செய்தார். பின்னர் தக்கலை பேருந்து நிலைய நடைபாதையிலேயே அமர்ந்து நண்பரின் செல்போன் உதவியுடன் பரபரப்பாக ஆன் லைன் தேர்வை எழுதினார். இது குறித்து அவரிடம் கேட்ட போது, தமிழில் முனைவர் பட்டம் பெறுவதே நோக்கம் என உருக்கமாக தெரிவித்தார்….

The post வறுமையிலும் தளரவில்லை… சாதிக்க துடிப்பு…தக்கலை பஸ்நிலையத்தில் அமர்ந்து ஆன்லைன்தேர்வு எழுதிய மாணவர்-செல்போன் உதவி செய்த நண்பர் appeared first on Dinakaran.

Tags : Takkalai ,station ,Thakkalai ,
× RELATED தக்கலை அருகே பைக் விபத்தில் மெக்கானிக் பலி