×

வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு: 7 மாணவர்கள் முதலிடம்

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக  தரவரிசை பட்டியலை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி நேற்று வெளியிட்டார். இதில், சேலம், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 7 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண் பெற்று தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளனர். இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 12 இளமறிவியல் பாடப்பிரிவுகள் வழங்கப்படுகிறது. இந்த கல்வி ஆண்டு 6 ஆயிரத்து 980 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.  மொத்தம் 39 ஆயிரத்து 489 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. நடப்பாண்டில், அரசின் 7.5 சதவீதம் இடஒதுக்கீடில் 408 இடங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தரவரிசை பட்டியலில் 200-க்கு 200 மதிப்பெண்களை 7 பேர் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளனர். ஈரோடு, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த தலா 2 பேர் மற்றும் சேலம், ராமநாதபுரம், தர்மபுரி சேர்ந்த தலா ஒருவர் முதலிடம் பிடித்துள்ளனர். 199.5 மதிப்பெண்களை 14 பேரும், 199 மதிப்பெண்களை 3 பேரும், 195 மதிப்பெண்களுக்கு மேல் 513 பேர் எடுத்து உள்ளனர். கடந்த ஆண்டு 161 மாணவர்கள் 195 மதிப்பெண்ணுக்கு மேல் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவ படிப்புக்கான முதல் கட்ட கவுன்சலிங் முடிந்த பிறகு வேளாண் பல்கலைக்கழக கவுன்சலிங் நடைமுறை துவங்கும். கவுன்சலிங் ஆன்லைனில் நடத்தப்படும். சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நேரடியாக நடத்தப்படும். மேலும், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் கவுன்சலிங் தொடர்பாக யூடியூப் மூலம் தவறான தகவல் வெளியிட்டு வரும் தனியார் வேளாண் கல்லூரி பேராசிரியர் மீது  நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலை சார்பில் வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டும் மாணவர்கள், பொதுமக்கள் நம்ப வேண்டும். யூடியூப் சேனல்களில் வரும் தகவல்களை நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்….

The post வேளாண் பல்கலை தரவரிசை பட்டியல் வெளியீடு: 7 மாணவர்கள் முதலிடம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Geethalakshmi ,Tamil Nadu ,University ,Salem, Erode ,
× RELATED கோவை மருத்துவமனையில் தொழிலாளி...