×

பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ்

டோக்கியோ: பாரா ஒலிம்பிக் போட்டியின் மகளிர் டேபிள் டென்னிஸ் ஒற்றையர் கிளாஸ்-4 பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட, இந்தியாவின் பவினா பென் படேல் தகுதி பெற்றார். இந்த தொடரின் அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலமாக குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் வெல்வதை அவர் ஏற்கனவே உறுதி செய்திருந்த நிலையில், பரபரப்பான அரையிறுதியில் நேற்று சீன வீராங்கனை ஸாங் மியோவுடன் மோதினார். இருவரும் பல்வேறு தொடர்களில் ஏற்கனவே மோதிய 11 முறையும் ஸாங் மியோவே வென்று ஆதிக்கம் செலுத்தியிருந்ததால், கடும் நெருக்கடியுடனேயே பவினா களமிறங்கினார். அதற்கேற்ப முதல் செட்டில் அதிரடியாக விளையாடிய ஸாங் 11-7 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். எனினும், உறுதியுடன் போராடிய பவினா அடுத்த 2 செட்களையும் 11-7, 11-4 என கைப்பற்றி பதிலடி கொடுக்க ஆட்டத்தில் அனல் பறந்தது. 4வது செட்டில் தொடக்கத்தில் இருந்தே புள்ளிகளைக் குவித்து முன்னேறிய சீன வீராங்கனை 11-9 என வெற்றியை வசப்படுத்த, இருவரும் 2-2 என சமநிலை வகித்தனர்.இதைத் தொடர்ந்து, 5வது மற்றும் கடைசி செட் ஆட்டம் கடும் இழுபறியாக அமைந்தது. அதில் விடாப்பிடியாக விளையாடி ஸாங் மியோவை திணறிடித்த பவினா 7-11, 11-7, 11-4, 9-11, 11-8 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 34 நிமிடங்களுக்கு நீடித்தது. பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் பைனலுக்கு தகுதி பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையும் பவினா வசமானது.இந்த வெற்றியால், குறைந்தபட்சம் வெள்ளிப் பதக்கம் கிடைப்பதை உறுதி செய்துள்ள அவர், தங்கப் பதக்கத்துக்காக இன்று உலகின் நம்பர் 1 வீராங்கனை யிங் ஜோவுடன் இன்று மோதுகிறார். மன உறுதியின் மறு பெயர்!குஜராத் மாநிலம், மெஹ்சனா மாவட்டத்தில் உள்ள சந்தியா கிராமத்தை சேர்ந்தவர் பவினா பென் படேல் (34 வயது). இவரது தந்தை ஹஸ்முக்பாய் படேல் சிறிய பெட்டிக்கடை ஒன்றை நடத்தி வருகிறார். பவினா 12 வயது சிறுமியாக இருந்தபோது போலியோ நோய் தாக்கியதால் கால்கள் வலுவிழந்தன. எனினும், மனம் தளராமல் வாழ்க்கை போராட்டத்தை தொடர்ந்த அவர், சக்கரநாற்காலியில் அமர்ந்தபடி டேபிள் டென்னிஸ் விளையாட பயிற்சி பெற்றார். 13 ஆண்டுகளுக்கு முன் டேபிள் டென்னிஸ் மட்டையை கையிலெடுத்தவர், இன்று பாரா ஒலிம்பிக் தங்கப் பதக்கத்துக்காக களமிறங்குவது பவினாவின் மன உறுதிக்கான சான்றாக மட்டுமல்லாது வெகுமதியாகவும் அமைந்துள்ளது.  எதிர்பார்க்கவே இல்லை!‘நான் இங்கு வந்தபோது, எதைப்பற்றியும் யோசிக்காமல் 100 சதவீத திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று மட்டுமே நினைத்தேன். அதை செயல்படுத்த முடிந்தால், நிச்சயம் பதக்கம் வெல்ல முடியும் என்றும் நம்பினேன். இதே தன்னம்பிக்கையுடனும், ஒட்டுமொத்த இந்தியாவின் ஆசிகளோடும் விளையாடி தங்கப் பதக்கத்தை முத்தமிடுவேன்’ என்கிறார் பவினா….

The post பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் appeared first on Dinakaran.

Tags : Para Olympic Table Tennis ,Tokyo ,Para Olympics ,India ,Bavina ,Para Olympic ,Dinakaran ,
× RELATED பழநி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் தரிசனம்