×

காபூல் விமான நிலையம் அருகே 2 மனித வெடிகுண்டு தாக்குதல்: குழந்தைகள் உட்பட 50 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க, காபூல் விமான நிலையம் அருகே தீவிரவாதிகள் நடத்திய 2 மனித வெடிகுண்டு தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறி வரும் வாய்ப்பை பயன்படுத்தி, தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். இதனால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது. ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு மக்கள் அங்கிருந்து உயிர் பிழைத்தால் போதும் என தப்பியோடுகின்றனர். இதனால், தலைநகர் காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகிறது.இந்த விமான நிலையம் 5,800 பேர் கொண்ட அமெரிக்க படையினரால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அங்கிருந்து இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்பட பல்வேறு நாடுகள் ராணுவ விமானங்கள் மூலம் மக்களை மீட்டு வருகின்றன. அதே நேரம், விமான நிலையத்தின் வெளிப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் முழுவதுமாக கொண்டு வந்துள்ள தலிபான்கள், மக்கள் யாரும் அவர்களை கடந்து விமான நிலையத்துக்குள் செல்வதை தடுக்க தாக்குதல் நடத்துகின்றனர். சில நாட்களுக்கு முன் அவர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, தலிபான்களின் அச்சுறுத்தலால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியாகினர். இந்நிலையில், காபூல் விமான நிலையம் அருகே தீவிரவாதிகளால் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட இருப்பதாக அமெரிக்காவும், பிரிட்டனும் நேற்று காலை முதல் தொடர்ந்து எச்சரித்து வந்தன. ஆப்கானிஸ்தானின் பாதுகாப்பு நிலவரம் தற்போது மோசமாக இருப்பதால், மக்கள் தங்களை பத்திரமாக பாதுகாத்து கொள்ளும்படி அறிவுறுத்தின. விமான நிலைய பகுதியில் இருந்து வெளியேறும்படி எச்சரித்தன. ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்ளிட்ட நாடுகள், காபூலுக்கு விமானங்களை அனுப்புவதை நிறுத்தின. இந்நிலையில், காபூல் சர்வதேச விமான நிலையம் அருகே நேற்றிரவு அடுத்தடுத்து இரண்டு மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், முதல் வெடிகுண்டு விமான நிலையத்தின் அபே கேட் பகுதியிலும், அடுத்த குண்டு பாரோன் ஓட்டல் அருகேயும் வெடித்தன. இதில், குழந்தைகள், பெண்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அமெரிக்க வீரர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆனால், இந்த பலி எண்ணிக்கையை அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை. இந்த தாக்குதல் பலி மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.ஐஎஸ் தீவிரவாதிகள் மீது சந்தேகம்: அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ‘ஆப்கானிஸ்தானில் தலிபான்களை விட ஐஎஸ் தீவிரவாதிகம் மிகவும் கொடூரமாக உள்ளனர். அவர்கள்தான் காபூலில் மனித வெடிகுண்டு தாக்குதலை நடத்தி உள்ளனர் என உறுதியாக நம்புகிறோம்,’ என்றனர். தலிபான்கள் செய்தி தொடர்பாளர் ஜபைதுல்லா முஜாகித் கூறுகையில், “தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானை தீவிரவாத தாக்குதலுக்கான தளமாக பயன்படுத்த தலிபான் ஒருபோதும் அனுமதிக்காது,’ என்று கூறினார்….

The post காபூல் விமான நிலையம் அருகே 2 மனித வெடிகுண்டு தாக்குதல்: குழந்தைகள் உட்பட 50 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Kabul airport ,Kabul ,Afghanistan ,Dinakaran ,
× RELATED பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை...