×

காரியாபட்டி- கள்ளிக்குடி சாலையில் துவரை பயறு பிரிப்பு பணியால் விபத்து அபாயம்: அதிகாரிகள் கவனிப்பார்களா?

காரியாபட்டி: காரியாபட்டி- கள்ளிக்குடி சாலையில் துவரை பயிறு பிரிப்பு பணியால் வாகனஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. காரியாபட்டியில் இருந்து திருமங்கலம் தாலுகா மருதங்குடி, மொச்சிகுளம் ஆகிய பகுதிகளில் நடப்பு ஆண்டில் பெய்த மழையால் மானாவாரி நிலங்களில் அதிகளவில் துவரை பயிர் செய்யப்பட்டு, தற்போது அறுவடை நடந்து வருகிறது. அறுவடை செய்யப்பட்ட துவரை செடிகளை கிராமங்களில் உள்ள களங்களில் போட்டு பயறுகளை பிரிக்காமல் மெயின்ரோட்டில் போட்டு பிரித்தெடுத்து வருகின்றனர். குறிப்பாக கள்ளிக்குடி, காரியாபட்டி மெயின் ரோட்டில் துவரை செடிகளை மலைபோல் குவித்து வைத்து பயறுகளை பிரித்து வருகின்றனர். வாகனங்கள் செடியின் மீது ஏறி செல்லும் போது, செடியில் இருந்து பயறு தனியாக பிரிக்கப்படுகிறது. பின்பு அதை சுத்தம் செய்து விற்பனைக்கு எடுத்து செல்கின்றனர். இதற்கான வேலை செய்ய ஆட்கள் கிடைக்கவில்லை என்று கூறும் விவசாயிகள், அவ்வாறு ஆட்கள் கிடைத்தாலும் அதிகளவில் கூலி கேட்கப்படுகிறது என்கின்றனர். இவ்வாறு ரோடுகளில் பரப்பப்படும் துவரை செடிகளின் மீது லாரி, பஸ் போன்ற பெரிய வாகனங்கள் சிரமமின்றி சென்று விடுகின்றன. ஆனால் கார், டூவீலர் போன் சிறிய வாகனங்கள் செல்லும் போது கடும் சிரமமடைவதுடன், விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. மேலும் பயறு பிரிக்கப்பட்ட பின்பு துவரை மார்களை ரோட்டின் ஓரமாக குவித்து வைத்து அதற்கும் தீ வைத்து விடுகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி போவதுடன், தீ பரவி அக்கம்பக்கம் தீப்பிடிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் சாலையில் துவரை பயிறு பிரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகனஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post காரியாபட்டி- கள்ளிக்குடி சாலையில் துவரை பயறு பிரிப்பு பணியால் விபத்து அபாயம்: அதிகாரிகள் கவனிப்பார்களா? appeared first on Dinakaran.

Tags : kariyapatti ,kallukudi road ,Kariyapatti- ,Kallakkudi road ,Karyapatti ,Dwaru ,Dinakaran ,
× RELATED காரியாபட்டி கல்குவாரியை மூட வலியுறுத்தி கிராம மக்கள் மறியல் போராட்டம்