×

கொடநாடு விவகாரத்தில் எந்த பழிவாங்கும் நோக்கமும் இல்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

சென்னை: கொடநாடு விவகாரத்தில் எந்தவித பழிவாங்கும் நோக்கமோ, அரசியல் நடவடிக்கையோ கிடையாது என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். சட்டப்பேரவை வளாகத்தில் நேற்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழறிஞர் தேவநேயப் பாவாணரின் பேத்தி வறுமையில் வாடுவதாக செய்தி சமூக ஊடகங்களில் பெருமளவில் பரவியது. முதல்வர் இந்த செய்தியை பார்த்து உடனே என்னை அழைத்து, பாவாணர் பேத்திக்கு வேண்டிய உதவிகள் செய்திட வேண்டும் என உத்தரவிட்டார். அந்தவகையில், தமிழ் ஆட்சிமொழி மற்றும் வளர்ச்சித் துறை சார்பில் அவரை நேரில் அழைத்து அவர்களுக்கு உரிய உதவிகள் செய்வதற்கும், வேலைவாய்ப்பு பெற்று தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழறிஞர்களின் குடும்பம் எந்த காலத்திலும் வறுமைக்கு வந்துவிடக்கூடாது என்பதில் முதல்வர் உறுதியாக இருக்கிறார். தமிழ் அறிஞர்களின் குடும்பத்தில் ஏற்படும் இடர்பாடுகளை கலையும் பணிகளை தமிழ் வளர்ச்சித்துறை தொடர்ந்து செய்யும். கொடநாடு விவகாரத்தில் முரண்பாடுகளின் மொத்த உருவமாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி உள்ளது. சட்டப்பேரவையில் இதுதொடர்பாக விவாதிக்கக்கூடாது என்று முதலில் அவர் தெரிவித்தார். பின்னர், பேரவையில் இதுதொடர்பான விவாதத்தை முன்னெடுப்பது உறுப்பினர்களின் உரிமை என கூறுகிறார். முதன்முதலில் இந்த பிரச்னையை சட்டமன்றத்தில் எழுப்பியதே அதிமுகவினர் தான். இதை வேறு யாரும் சட்டமன்றத்தில் கொண்டுவரவில்லை. ஆனால், இப்போது அதை சட்டமன்றத்தில் விவாதிக்கக்கூடாது என்கிறார்கள். கொடநாடு பங்களாவில் நடந்தது சாதாரண சம்பவம் கிடையாது. கொலை, கொள்ளை நடந்துள்ளது. கொடநாடு எந்த அளவிற்கு முக்கியமானது என ஜெயலலிதாவே கூறியுள்ளார். ஜெயலலிதா இருக்கும் காலத்தில் கொடநாடு பங்களாவில் ஒரு தலைமைச் செயலகமே இயங்கியுள்ளது. அப்படிப்பட்ட இடத்தில் நடந்த உண்மைகளை தெரியப்படுத்த வேண்டும் என்று அதிமுக தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், இது முக்கியமான விஷயம் கிடையாது என ஜெயக்குமார் கூறுகிறார். ஜெயக்குமாருக்கு வேண்டுமானால் இது முக்கியமான விஷயமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அதிமுக தொண்டர்களுக்கு இது முக்கியமான விஷயமாக இருக்கிறது. ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷன் குறித்தும் அதிமுக தொண்டர்கள் தொடர்ந்து கேட்டு வருகிறார்கள். எனவே, ஜெயக்குமார் பேசுவது வேடிக்கையானது. விசாரணை உரிய முறையில் நடக்கிறது. குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை பெற்று தர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். நீதிமன்றத்தின் விதியின்படியே விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் எந்தவித பழிவாங்கும் நோக்கமோ, அரசியல் உள்நோக்கமோ கிடையாது. இவ்வாறு கூறினார்….

The post கொடநாடு விவகாரத்தில் எந்த பழிவாங்கும் நோக்கமும் இல்லை: அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kodanadu ,Minister Thangam ,Southern State ,Chennai ,Tamil ,Development ,Minister ,Thangam Thannarasu ,Koda Nadu ,Minister Thangam Thannarasu ,
× RELATED கோடநாடு எஸ்டேட்டில் ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி!