×

டோக்கியோ ஒலிம்பிக் 2021; வெளிநாடுகளை சேர்ந்த பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை: ஜப்பான் அரசு அறிவிப்பு

டோக்கியோ: டோக்கியோவில் வரும் ஜூலையில் துவங்க உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் வெளிநாடுகளை சேர்ந்த பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என்றும், பல நாடுகளில் கொரோனா பரவல் மீண்டும் துவங்கியுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்று வரும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. கடந்த 2016ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. அட்டவணைப்படி 2020ம் ஆண்டு ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன.ஆனால் ஒட்டுமொத்த உலகையே கொரோனா வைரஸ் புரட்டி போட்டது. இதனால் கடந்த 2020ம் ஆண்டு உலக மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டது. கல்வி, வேலை, விளையாட்டு உள்ளிட்ட அனைத்து செயல்களும் கொரோனா பரவலால் நிறுத்தப்பட்டு, மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இதனால் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டு தள்ளி வைக்கப்பட்டது. டோக்கியோவில் வரும் ஜூலை 23ம் தேதி முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. ஆகஸ்ட் 24ம்தேதி முதல் செப்.5ம் தேதி வரை பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் வெளிநாடுகளை சேர்ந்த பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. மேலும் துவக்க விழாவில் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றும் நிகழ்ச்சியும், இந்த முறை பார்வையாளர்கள் இல்லாமல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஜப்பானின் செய்தி ஏஜென்சியான கியூடோ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘’முழு அளவில் ஸ்டேடியம் பார்வையாளர்களால் நிரம்பி இருக்க வேண்டும். ஆரவாரமாக ஒலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தற்போதைய சூழ்நிலை அதற்கு அனுமதிக்கவில்லை. பல்வேறு நாடுகளில் புதிய வகை கொரோனா பரவி வருகிறது. இதனால் ஜப்பான் மக்களின் பாதுகாப்பு கருதி, வெளிநாடுகளை சேர்ந்த பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளோம். தவிர அதிக எண்ணிக்கையில் வெளிநாடுகளை சேர்ந்த நபர்கள் ஜப்பான் வருவதை இந்நாட்டின் மக்களும் விரும்பவில்லை. இதற்காக பிரத்யேகமான நடத்தப்பட்ட சர்வேயில், வெளிநாடுகளை சேர்ந்த பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டாம் என 77 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். அனுமதிக்கலாம் என 18 சதவீத மக்களே தெரிவித்துள்ளனர். எனவே பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இந்த முடிவு  எடுக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்கள் வந்தால், அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அதற்கான மருத்துவ வசதிகளை பெரிய அளவில் செய்ய வேண்டும். தற்போதைய நிலையில் இந்தப் பணிகளை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளோம். மேலும்  புகுஷிமாவில் ஒலிம்பிக் ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி, எவ்வித ஆரவாரமும் இல்லாமல் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் ஒலிம்பிக் ஜோதியை ஏற்ற உள்ள விளையாட்டு வீரர் உட்பட நிர்வாகிகள் சிலரே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post டோக்கியோ ஒலிம்பிக் 2021; வெளிநாடுகளை சேர்ந்த பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை: ஜப்பான் அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tokyo Olympics 2021 ,Japan Government ,Tokyo ,Olympic ,Paralympic games ,Dinakaran ,
× RELATED 2 நாளில் ஆளை கொல்லும் ஜப்பானில் பரவும் தசையைத் தின்னும் பாக்டீரியா