×

தமிழகத்தில் 1100ல் 600 மட்டுமே திறப்பு: தியேட்டர்களில் ரசிகர் கூட்டம் இல்லாததால் காட்சிகள் ரத்து

சென்னை:  தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த ஏப்ரல் 26ம் தேதி முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன. 4 மாதங்களுக்கு பிறகு 50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, நேற்று முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. தமிழகத்தில் 1,100 தியேட்டர்கள் உள்ளன. அதில் 600 தியேட்டர்கள் மட்டுமே நேற்று திறக்கப்பட்டன. . திறக்கப்பட்ட தியேட்டர்களில் கூட்டம் வரும் என எதிர்பார்த்த நிலையில் நேற்று பெரும்பாலான தியேட்டர்களில் 15 சதவீதம் முதல் 10 சதவீத ரசிகர்களே வந்தனர். பல தியேட்டர்களில் அந்த கூட்டமும் இல்லாததால் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. கடந்த ஏப்ரலில் ஏற்கனவே ஓடிக்கொண்டிருந்த தனுஷ் நடித்த கர்ணன், கார்த்தி நடித்த சுல்தான், சந்தானம் நடித்த பாரீஸ் ஜெயராஜ் உள்பட சில சிறு பட்ஜெட் படங்களும் நேற்று முதல் மீண்டும் திரையிடப்பட்டன. புதிதாக ரிலீசான இந்தி, தெலுங்கு, ஹாலிவுட் படங்களும் சில தியேட்டர்களில் திரையிடப்பட்டது. ஏற்கனவே கொரோனா பாதிப்பு காரணமாக, கடந்த ஆண்டு 8 மாதங்கள் வரை தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. கடந்த நவம்பரில் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. மீண்டும் கொரோனா காரணமாக, இந்த ஆண்டு ஏப்ரல் முதல் தியேட்டர்கள் மூடப்பட்டதால், சினிமா ரசிகர்கள் பலர் ஓடிடி பக்கம் தங்களது கவனத்தை திருப்பியுள்ளனர். தமிழ் உள்பட பல புதிய படங்கள் கடந்த ஓராண்டில் ஓடிடியில் வெளிவந்துவிட்டன. அந்த படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் இருந்தது. இதனால் கடந்த நவம்பரிலிருந்து ஏப்ரல் வரை தியேட்டர்கள் திறக்கப்பட்டிருந்தபோதும் பல படங்கள் தோல்வி அடைந்தன. கொரோனா பயத்தால் தியேட்டருக்கு வரும் ரசிகர்களின் கூட்டமும் குறைந்துவிட்டது. அதேபோன்ற சூழல் காரணமாக, நேற்றும் தியேட்டர்களில் பார்வையாளர்களை பார்க்க முடியவில்லை. தியேட்டர்களில் ரசிகர்களுக்கு இலவச மாஸ்க் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பல தியேட்டர்களில் அதுபோல் வழங்கவில்லை. மேலும் தியேட்டர் ஊழியர்கள் பலர் மாஸ்க் இல்லாமல் பணியில் ஈடுபட்ட காட்சிகளும் பார்க்க முடிந்தது. பல மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால், பல தியேட்டர்களில் பராமரிப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளவில்லை என்றும் ரசிகர்கள் புகார் கூறினர். சென்னையை போல் மதுரை, சேலம், நெல்லை, கோவை, திருச்சி உள்பட தமிழகம் முழுவதும் திறக்கப்பட்ட சில தியேட்டர்களில் நேற்று நாள் முழுவதும் கூட்டம் இல்லை. பெரிய நடிகர்களின் புதிய படங்கள் வந்தால் மட்டுமே நம்பிக்கை ஏற்படும் என தியேட்டர் அதிபர்கள் எதிர்பார்க்கின்றனர்….

The post தமிழகத்தில் 1100ல் 600 மட்டுமே திறப்பு: தியேட்டர்களில் ரசிகர் கூட்டம் இல்லாததால் காட்சிகள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...