×

காங்கயம் அருகே துணிகரம்: அரிசி ஆலை அதிபர் மகனை கடத்தி 3 கோடி பறிப்பு: 4 பேர் கைது 1.9 கோடி மீட்பு

திருப்பூர்: காங்கயம் அருகே அரிசி ஆலை உரிமையாளர் மகனை கடத்தி ரூ. 3 கோடி பணம் பறித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், காடையூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (53). காங்கயம் பகுதியில் அரிசி ஆலை மற்றும் திருமண மண்டபம் நடத்தி வருகிறார். இவரது மகன் சிவபிரதீப் (22) பெங்களூருவில் பிபிஏ படித்து முடித்துவிட்டு அரிசி ஆலையை கவனித்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் 1 மணியளவில் அரிசி ஆலையில் இருந்து தனது இனோவா காரில் டிரைவர் சதாம் உசேனுடன் காடையூரில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வீரசோழபுரம் ரோட்டில் சிவபிரதீப்பின் காரை, டாடா சுமோ கார் ஒன்று வழி மறித்து நிறுத்தியது. அதிலிருந்து இறங்கிய 7 பேர் சிவபிரதீப்பிடம் தங்களை போலீஸ் என அறிமுகப்படுத்தி கொண்டனர். பின்னர் சிவபிரதீப்பின் இனோவா காரில் 6 பேர் ஏறி அவரையும் டிரைவரையும் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை பகுதிக்கு கடத்தி சென்றனர். வழியில் அவர்களது செல்போன்களை பறித்து சுவிட் ஆப் செய்துள்ளனர். பின்னர் அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் டாடா சுமோவை சிறுமலைக்கு எடுத்து வந்தார்.இந்நிலையில் சிவபிரதீப்பை நீண்ட நேரம் காணாததாலும், போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டதாலும் ஈஸ்வரமூர்த்தி பல்வேறு இடங்களில் தேடினார். சில மணி நேரம் கழித்து ஈஸ்வரமூர்த்தியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், ‘‘உனது மகன் சிவபிரதீப்பை நாங்கள் கடத்தி வந்துள்ளோம். உடனடியாக திண்டுக்கல் வந்து ரூ. 3 கோடி கொடுக்காவிட்டால், சிவபிரதீப்பை கொன்று புதைத்து விடுவோம்’’ என கூறிவிட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.  இதனால் பதறிய ஈஸ்வரமூர்த்தி உறவினர்கள் உதவியுடன் 2000, 500 ரூபாய் நோட்டுக்கள் அடங்கிய ரூ.3 கோடியை 2 டிராவல் பேக்கில் எடுத்துக்கொண்டு காரில் திண்டுக்கல் சென்றுள்ளார். அங்கிருந்து மீண்டும் அந்த தொலைபேசி எண்ணிற்கு அழைத்தபோது அவர்கள் திண்டுக்கல் அவதார் செராமிக்ஸ் கம்பெனி அருகில் வரக்கூறியுள்ளனர். உடனடியாக அவர் அங்கு சென்றுள்ளார். அப்போது கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவர் மட்டும் டாடா சுமோ காரில் வந்து ஈஸ்வரமூர்த்தியிடம் ரூ. 3 கோடி அடங்கிய 2 டிராவல் பேக்கையும் பெற்றுக்கொண்டார். பின்னர் இனோவா காருடன் சிவபிரதீப் மற்றும் டிரைவர் சதாம் உசேன் ஆகியோரை அதே பகுதியில் விட்டுவிட்டு மற்றவர்கள் தப்பி சென்று விட்டனர். அவர்களை ஈஸ்வரமூர்த்தி காங்கயத்திற்கு அழைத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இது குறித்து சிவபிரதீப் காங்கயம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், எஸ்பி செஷாங் சாய்க்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து டிஎஸ்பி குமரேசன் தலைமையில் 3 இன்ஸ்பெக்டர்கள், 8 சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 50 போலீசார் அடங்கிய 6 தனிப்படை அமைத்து கும்பலை தேடி வந்தனர். இந்நிலையில், தனிப்படையினர் சிசிடிவி கேமிரா காட்சிகளை வைத்தும், ஈஸ்வரமூர்த்தியின் செல்போனிற்கு வந்த தொலைபேசி எண்ணை வைத்தும் விசாரணை நடத்தினர்.  அப்போது கடத்தல் கும்பல் மதுரையில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. மதுரை சென்ற தனிப்படை போலீசார் நேற்று காலை 6 மணியளவில் கடத்தல் கும்பலை சேர்ந்த 3 பேரை சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும் ஒருவரை கிருஷ்ணகிரியில் பிடித்தனர். பின்னர் அவர்களை திருப்பூர் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் மதுரை மாவட்டத்தை சேர்ந்த அகஸ்டியன் (45), விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை சக்திவேல் (37), பாலாஜி (38), கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பசீர் (32) என்பது தெரியவந்தது. சக்திவேல், பாலாஜி இருவரும் அரிசி ஆலையில் கடந்த 7 மாதங்களாக கிரேன் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்துள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வேலையில் இருந்து நின்றுவிட்டனர். ஈஸ்வரமூர்த்தியிடம் நிறைய பணம் இருப்பதை அறிந்த இருவரும் அவரது மகன் சிவபிரதீப்பை கடத்தினால் கோடிக்கணக்கில் பணம் பறிக்கலாம் என திட்டம் தீட்டியுள்ளனர். கடந்த 1 மாதத்திற்கு முன்பு மதுரையை சேர்ந்த அகஸ்டியன், பசீர் மற்றும் 3 பேர் இவர்களுக்கு அறிமுகமாகியுள்ளனர். அவர்களிடம் இது குறித்து கூறியதும் அகஸ்டியன் கடத்தல் திட்டத்தை வகுத்து கொடுத்துள்ளார். அதன்படி கடந்த 15 ம் தேதி திருப்பூருக்கு டாடா சுமோவில் வந்த அகஸ்டியன், பசீர், சக்திவேல், பாலாஜி மற்றும் 3 பேர் காங்கயம் பகுதியில் உள்ள லாட்ஜில்ஒரு வாரமாக தங்கியிருந்து சிவபிரதீப் அலுவலகம் மற்றும் வீட்டிற்கு செல்லும் நேரத்தையும், எந்த பகுதியில் வைத்து கடத்தலாம் என்றும் வேவு பார்த்துள்ளனர். அதன் பின்னரே கடந்த 22 ம் தேதி இனோவா காரில் சென்ற டிரைவர் சதாம் உசேனுடன் சேர்ந்து சிவபிரதீப்பை கடத்தி பணம் பறித்தது தெரியவந்தது. 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ரூ. 1.9 கோடி, டாடா சுமோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேற்கு மண்டல ஐஜி பாராட்டு: மேற்கு மண்டல ஐஜி சுதாகர் கூறுகையில், தகவல் கிடைத்த 2 மணி நேரத்தில் தனிப்படையினர் வேட்டையை தொடங்கினர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்த போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறோம். இந்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகள் பெரிதும் உதவியாக இருந்தது என்றார்.’கடத்தல் கும்பல் தலைவன் அகஸ்டியன்’இந்த கடத்தலில் கைதான அகஸ்டியன் மதுரை மாநகர பகுதியில் உள்ள பிரபல தொழிலதிபருக்கு சொந்தமான வீட்டில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து பணம், நகை கொள்ளையடித்து சென்றுள்ளார். இதுகுறித்து மதுரை மாநகர போலீசார் விசாரித்து வருகின்றனர். இவர்தான் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்டுள்ளார். ‘ஆங்கில பட கடத்தல் காட்சிகளை வைத்து திட்டம்’கைதாகியுள்ள சக்திவேல், பாலாஜிக்கு குறைந்த அளவில் வருமானம் வந்துள்ளது. இருவரும் நிறைய ஆங்கில படங்களை பார்த்துள்ளனர். அதில் பணத்திற்காக ஆட்களை கடத்தி பணம் பெறும் வழிமுறையை பார்த்துள்ளனர். இதேபோல் கடத்தி பணம் சம்பாதிக்கலாம் என முடிவு செய்து அரிசி ஆலை உரிமையாளர் மகனை கடத்தும் திட்டம் குறித்து அகஸ்டியனிடம் கூறியுள்ளனர்.’1 கோடியுடன் தலைமறைவு’கடத்தல்  கும்பலில், சென்னையை சேர்ந்த சையது, மதுரையை சேர்ந்த பாலன், நத்தம்  பகுதியை சேர்ந்த ஜாபர் சாதிக் என 3 பேர் 1 கோடி பணத்துடன் தப்பிவிட்டனர். இவர்களை  தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்….

The post காங்கயம் அருகே துணிகரம்: அரிசி ஆலை அதிபர் மகனை கடத்தி 3 கோடி பறிப்பு: 4 பேர் கைது 1.9 கோடி மீட்பு appeared first on Dinakaran.

Tags : Venture ,Gangayam ,Tirupur ,Kangayam ,Gangaim ,Dinakaran ,
× RELATED காங்கயத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் மலர் தூவி மரியாதை