×

கீழடி அருகே அகரத்தில் தங்கக்காதணி கண்டெடுப்பு

திருப்புவனம் : கீழடி அருகே அகரம் அகழாய்வு தளத்தில் பழங்கால தங்கக்காதணி கண்டறியப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடி, அகரம், கொந்தகை, மணலூர் ஆகிய இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கீழடி, கொந்தகையில் தலா எட்டு குழிகள் தோண்டப்பட்டுள்ளன. அகரத்தில் இருந்து உறைகிணறுகள், பானைகள், செங்கல் கட்டுமானம், புகைபிடிப்பான் கருவி, விலங்கு உருவ பொம்மை, தலையலங்காரத்துடன் கூடிய பெண் பொம்மை உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன. தற்போது காதுகளில் அணியும் தங்க அணிகலன்கள் கண்டறியப்பட்டுள்ளன. ஒரு அணிகலன் அறுங்கோண வடிவிலும், நடுவில் ஒரு துளையும் அதனை இணைப்பதற்கு வசதியாக குச்சி போன்ற அமைப்புடனும் உள்ளது. மற்றொரு அணிகலன் தங்க குண்டுபோல் காணப்படுகிறது. இரண்டு அணிகலன்களையும் கோர்த்து கழுத்தில் அணியும் மணியாகவோ, காதணியாகவோ அக்கால பெண்கள் அணிந்திருக்கலாம் என கருதப்படுகிறது. செப்டம்பர் மாதத்துடன் அகழாய்வு பணிகள் முடிவடைய உள்ளதால் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. கீழடி அகழாய்வில் தற்போது அகரம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி வருகிறது. அகழாய்வாளர்கள் கூறுகையில், ‘‘அகரம் தளத்தில் வீரராகவன் காசு எனப்படும் தங்கக்காசு கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது. எனவே அகரம் ஒரு வணிக நகராக திகழ்ந்ததற்கு சான்றுகள் கிடைத்து வருகிறது. வணிகர்களை கவர்வதற்காக வண்ண பொம்மைகள் தயாரித்தவர்கள் தங்களை அடையாளப்படுத்த முத்திரை உள்ளிட்டவை பயன்படுத்தியிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. கார்பன் டேட்டிங் ஆய்விக்கு பின்னர் முழுவிவரங்கள் தெரிய வரும்’’ என்றார்….

The post கீழடி அருகே அகரத்தில் தங்கக்காதணி கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Agarat ,Keezadi ,Tiruppuvanam ,Akaram ,Sivagangai District ,Geezadi ,Akarat ,
× RELATED திருப்புவனம் பேரூராட்சியில் தேர்தலில் 8 ஆயிரம் பேர் வாக்களிக்க வரவில்லை