×

பொன்னாரை திட்டமிட்டு தவிக்க விடுவதாக தாமரை நிர்வாகிகள் பேசிக்கொள்ளும் கதையை சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தந்தத்தை கோட்டை விட்டு தண்டனைக்கு தயாராகும் அதிகாரி குழுவே, அதிர்ச்சியில் இருக்கிறதாமே…’’ வனத்துறை தகவலை சொன்னார் பீட்டர் மாமா.‘‘மாங்கனி மாவட்டத்துல இரண்டு யானை தந்தங்களை விற்க முயன்ற கும்பலை வனத்துறையின் சிறப்பு தனிப்படை அதிகாரிகள் பொறி வைத்து பிடிச்சாங்க. கோவை மாவட்ட அதிகாரிகள் இங்கு வந்து, தொடர்புடைய 5 பேரை மடக்கியதுடன், 2 தந்தங்களையும் பறிமுதல் செய்திருக்காங்க. இந்த விவகாரத்தில உள்ளூர் வன அதிகாரிகள், கோட்டை விட்ட சம்பவம் உயர் அதிகாரிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்காம். இரண்டு மாத காலமாக அந்த தந்தங்களை விற்க அக்கும்பல் ஏற்பாடு செய்து வந்ததும், அதனை உள்ளூர் வன பாதுகாப்பு படை அதிகாரிகளால் எப்படி கண்டுபிடிக்க முடியாமல் போனது என்ற சந்தேகம் வலுத்து இருக்காம். அதிலும் பிடிபட்ட நபர்களில் மேட்டூரை சேர்ந்த ஒருவர், ஏற்கனவே தந்த கடத்தல் வழக்கில் சிக்கியவராம். அவரை கூட பாலோ செய்யாமலும், தந்தம் பற்றி தெரிந்துகொள்ளாமலும், குற்றவாளிகளை பிடிக்க முடியாமலும் முக்கிய பொறுப்பில் இருக்கும் 2 அதிகாரிகளுக்கு உயர் அதிகாரிகளிடம் இருந்து செம டோஸ் விழுந்திருக்காம். விளக்கம் கேட்டு விரைவில் நோட்டீஸ் போக உள்ளதாம். அது தவிர, விரைவில் அந்த 2 பேரையும் வேறு இடத்திற்கு மாத்திருவாங்கனு வன ஊழியர்கள் பரபரப்பா பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘காக்கிகள் கண்ணை மூடினா, குற்றவாளிகள் கண் முழித்துக் கொள்வார்கள் என்பதற்கு ஒரு உதாரணத்தை சொல்லுங்க பார்ப்போம்…’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கிரிவலம் மாவட்டத்துல அதிகமா வருவாய் ஈட்டித் தர்ற தொழில் நகரமாக செய்யாறு இருக்குது. இந்த நகரத்துல குற்றசம்பவங்கள தடுக்குறதுக்காக கடந்த 8 வருஷத்துக்கு முன்னாடி, தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்புல சிசிடிவி கேமரா பொருத்தினாங்க. அதுக்கு அப்புறமாக, எஸ்பி, டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்கள்னு பல பேர் டிரான்ஸ்பர் ஆகியிருக்காங்க. ஆனா சிசிடிவி கேமரா திறப்பு விழாவை நடத்த எந்த காக்கிகளுமே முன்வரலையாம். இப்படியே நாட்கள் நகர, நகர, சிசிடிவி கேமராக்கள் அனைத்துமே காட்சிப்பொருளாக மாறிடுச்சாம். அப்புறம், ஒட்டுமொத்த கேமராக்களும் நாளடைவுல திருட்டும் போயிடுச்சு. செய்யாறு காக்கிங்களும் இதை கண்டுக்கவே இல்லையாம். அதுக்கு காரணம், மூன்றாவது கண்ணான சிசிடிவி கேமரா இருந்தா, திருட்டு, கடத்தல்னு குற்றவாளிங்க சீக்கிரமா சிக்கிக்குவாங்க, நம்ம பொழப்பு நடக்காது, மேலதிகாரிகளுக்கும் பதில் சொல்லணும்னு கேமரா திட்டத்தை காற்றில் பறக்கவிட்டுட்டாங்களாம். அதையும் மீறி, வியாபாரிங்க, தங்களோட நிறுவனங்கள், கடைகளுக்கு முன்னாடி கேமராக்களை வெச்சிருக்காங்க. இரவு நேரத்துல மணல் கடத்துற கும்பல், எங்கே நம்ம வண்டி இந்த கேமராவுல சிக்கிடுமோன்னு, இரவோடு, இரவா கேமராக்களை உடைச்சிடுறாங்களாம். இப்படி உண்மைய படம்போட்டுக்காட்டுற மூன்றாவது கண்ணை, காக்கிங்களே மூடி மறைச்சிருக்காங்களாம். இதுக்கு அப்புறமாவது, செய்யாறு நகரத்துல சிசிடிவி கேமராவை பொருத்தி குற்றச்சம்பங்களை தடுக்க மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்கணும்னு உண்மையான விசுவாசமான காக்கிகள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.‘‘மாஜி அமைச்சரின் அடியாட்கள், அரசு அதிகாரிகளை மிரட்டுவது எந்த வகையில் நியாயம்…’’ என்று கவலைப்பட்டார் பீட்டர் மாமா. ‘‘மதுரை புறநகர் மாவட்டப் பகுதியான திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி தாலுகாவில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் கடன் வழங்கப்பட்டுள்ளது. கடன் பணத்தை வழங்கியதில், வட்டார மேற்பார்வையாளர்கள் இரண்டு பேர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. மாவட்ட அதிகாரியின் விசாரணையில், முறைகேடு உறுதி செய்யப்பட்டு 2 அலுவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த தொகுதி, அதிமுக முன்னாள் அமைச்சர் தொகுதி என்பதால், அதிமுகவினர் தலையிட்டு 2 பேரின் சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் என மாவட்ட அதிகாரிக்கு நெருக்கடி கொடுத்து மிரட்டுகிறார்களாம். அதிமுக தொகுதி என்பதால், நாங்கள் சொல்வதைத் தான் இங்குள்ள அதிகாரிகள் கேட்டு நடக்க வேண்டும் என அதிமுகவினர் மிரட்டுகின்றனராம். இதனால், அரசின் திட்டத்தை செயல்படுத்துவதில் அதிகாரிகள் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனராம்…’’ என்றார் விக்கியானந்தா.‘‘தமிழகத்தில் தாமரைக்காக உழைத்த பொன்னாருக்கு, பொன்னாடை போர்த்தி கவுரவிக்கும் பதவியை கொடுக்க வேண்டாமா… இன்னும் எவ்வளவு நாள் தான் இப்படி ஒதுக்கி வைப்பாங்க என்று அவரது அடிபொடிகள் பேசிக்கிறாங்களாமே, உண்மையா…’’ என்றார் பீட்டர் மாமா.‘‘தமிழகத்தை சேர்ந்த தாமரையின் மூத்த தலைவர்களுக்கு கவர்னர் பதவி கொடுத்து அக்கட்சி தலைமை அலங்கரித்து வருகிறது. ஏற்கனவே தெலங்கானா, புதுச்சேரினு மாநிலத்தின் முக்கிய பதவியை அலங்கரிக்கிறாங்க. இப்போது, தாமரையின் மூத்த தலைவருக்கு மணிப்பூரை அலங்கரிக்கும் பதவி கொடுத்து இருக்காங்க… அதை தமிழக தாமரை தலைவர்கள் அனைவரும் பஞ்சமில்லாம வரவேற்கிறாங்க. ஆனால், தமிழகத்தின் எல்லை மாவட்டத்தை சேர்ந்தவரும் தாமரை கட்சிக்கு உழைத்தவருமான பொன்னானவரை கட்சி தலைமை கண்டுக்கொள்ளவில்லை என்ற விரக்தி, அவரின் தொண்டர்களின் மனதில் புழங்குதாம். டெல்லி தாமரை தலைமை பொன்னானவரை ஒதுக்குதோ என்று அந்த ஊரில் பேசிக்கிறாங்க. சமீபத்தில் குமரி மாவட்டத்துக்கு வந்த தாமரை மாஜி தலைவர்… பொன்னை நாங்க கைவிட மாட்டோம்னு சொன்ன அடுத்த சில நாட்கள்ல மணிப்பூர்ல தமிழகத்தை சேர்ந்தவருக்கு முக்கிய பதவி கொடுத்து இருப்பதை பார்த்தால்… எங்கள் தலைவரை ஒதுக்கி வைக்கிறது உறுதியாகுதே என்கின்றனர் அடிபொடிகள். இதனால் தொண்டர்கள் மனச்சோர்வுடன் இருக்கிறார்களாம். மாவட்டத்துக்கு உள்ளேயே போஸ்டர் அடிக்கும் போது படத்தை போடாமல் விட்டு விடுகிறார்கள். மாவட்டத்திலேயே முக்கியத்துவம்  இல்லை. இதில் கட்சி தலைமை என்னத்த செய்ய போகிறது என்ற விரக்தியில் பொன்னார்  உள்ளதாக பேசப்படுகிறது. தற்போதெல்லாம் பெரும்பாலான கட்சி நிகழ்ச்சிகளுக்கு  செல்வது இல்லை. அப்படியே சென்றாலும் கூட யாரிடமும் எதுவும் பேசாமல்  அமைதியாகவே பொன்னார் வந்து விடுகிறாராம்…’’ என்றார் விக்கியானந்தா.  …

The post பொன்னாரை திட்டமிட்டு தவிக்க விடுவதாக தாமரை நிர்வாகிகள் பேசிக்கொள்ளும் கதையை சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Tamarai ,Ponnar ,Peter Mama ,Mangani ,
× RELATED திருவண்ணாமலை மகிளா கோர்ட் பரபரப்பு...