×

மயிலாடி உழவர் சந்தை இன்று முதல் மீண்டும் செயல்படுகிறது: 60 கடைகளுடன் புனரமைப்பு

நாகர்கோவில்:  மயிலாடியில் 60 கடைகளுடன் புனரமைக்கப்பட்ட உழவர் சந்தையை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று காலை திறந்து வைக்கிறார். விவசாயிகள்  தங்களது விளை பொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்பனை செய்யும் வகையில் உழவர் சந்தைகள் இயங்கி வந்தன. அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக உழவர் சந்தைகள் செயல்பாடின்றி  இருந்தது. இந்த நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும், உழவர் சந்தைகளை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி தற்போது பல்வேறு மாவட்டங்களில் உழவர் சந்தைகள் மேம்படுத்தப்பட்டு விவசாயிகள் தங்களது விளை பொருட்களை நேரடியாக விற்பனை செய்து வருகிறார்கள். அந்த வகையில் குமரி மாவட்டத்தில் மயிலாடி பேரூராட்சி அலுவலகத்திற்கு அருகில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை கட்டுப்பாட்டில் உழவர்சந்தை செயல்பட்டு வந்தது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இந்த உழவர் சந்தை தற்போது புனரமைக்கப்பட்டு 60 கடைகளுடன் இன்று (22.8.2021) முதல் செயல்பட உள்ளது. இன்று காலை 8 மணிக்கு, அமைச்சர் மனோ தங்கராஜ், புனரமைக்கப்பட்ட உழவர் சந்தையை திறந்து வைக்கிறார்.   உழவர்சந்தையில் விவசாயிகள் எந்தவித இடைத்தரகர் இல்லாமல் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டலாம். விவசாயிகளுக்கு எந்தவித கட்டணமும் இல்லாமல் கடைகள், எடைத்தராசுகள், எடைகற்கள் வழங்கப்படுகிறது.  மகளிர் சுய உதவிக்குழுக்கள், விவசாய ஆர்வலர் குழுக்கள், விவசாய உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளித்து தங்களின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் மற்றும் உறுப்பினர்களால் விளைவிக்கப்படும் விளைப்பொருட்கள் விற்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.  இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் இயற்கை முறையில் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் பழவகைகளை விற்பனை செய்ய வழிவகை செய்யப்படுகிறது. எனவே விவசாயிகள் அனைவரும் அடையாள அட்டை பெற்று உழவர் சந்தையை பயன்படுத்துமாறு வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) கேட்டுக் கொண்டுள்ளார். உழவர் சந்தையில் விற்பனை செய்வதற்கான விண்ணப்ப படிவத்தினை உழவர்சந்தை வடசேரி மற்றும் மயிலாடி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் பொருட்களை உழவர்சந்தையில் விற்பனை செய்வதற்கு கம்ப்யூட்டர் பட்டா, சிட்டா அடங்கல் (காய்கறி, பழவகைகள்), ஆதார் அட்டை, 2 புகைப்படம், தோட்டக்கலை அலுவலரின் சான்று ஆகியவற்றை அளித்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் கூறி உள்ளனர். …

The post மயிலாடி உழவர் சந்தை இன்று முதல் மீண்டும் செயல்படுகிறது: 60 கடைகளுடன் புனரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Mailadi Farmers Market ,Nagercoil ,Minister ,Mano Thangaraj ,Farmers Market ,Mailadi ,Mayiladi Farmers Market ,Dinakaran ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...