×

கடந்த 14 தேர்தல்களில் 28 எம்பிக்களை இழந்துள்ள தமிழகத்துக்கு இழப்பீடாக ஒன்றிய அரசு ஏன் ரூ.5,600 கோடியை வழங்கக்கூடாது?: ஐகோர்ட் நீதிபதிகள் சரமாரி கேள்வி

மதுரை: கடந்த 14 தேர்தல்களில் 28 எம்பிக்களை இழந்துள்ள தமிழகத்துக்கு இழப்பீடாக ஒன்றிய அரசு, ஏன் ரூ.5,600 கோடியை வழங்கக்கூடாது என ஐகோர்ட் நீதிபதிகள் சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளனர். தென்காசி தனி தொகுதியை, பொதுத்தொகுதியாக மாற்ற கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: ஒரு வாக்கு வித்தியாசத்தில் கடந்த 1999ம் ஆண்டு வாஜ்பாய் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் கவிழ்ந்தது. ஒரு எம்பியின் வாக்கு என்பது ஒரு ஆட்சியையே கவிழ்க்கும் அல்லது உருவாக்கும். தமிழகத்தில் கடந்த 1962ல் லோக்சபாவுக்கு 41 எம்பிக்கள் இருந்துள்ளனர். மக்கள்தொகையை கட்டுப்படுத்த வேண்டுமென்ற மத்திய அரசின் கொள்கை முடிவை ஏற்று குடும்ப கட்டுப்பாட்டை தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்கள் தீவிரமாக அமல்படுத்தியதின் விளைவாக தமிழகத்தில் 41 ஆக இருந்த எம்பிக்களின் எண்ணிக்கை 39 ஆகவும், ஆந்திராவில் 42 ஆக இருந்த எம்பிக்களின் எண்ணிக்கை 40 ஆகவும் குறைந்துள்ளன. மொழிவாரி மாநிலங்களை உள்ளடக்கிய இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் அரசியல் அதிகாரம், உரிமைகள் சமமாக இருக்க வேண்டும். மக்கள்தொகையை கட்டுப்படுத்த தவறிய உத்தரபிரதேசம், பீஹார், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் எம்பிக்களின் எண்ணிக்கை அதிகம்.அதேநேரம் மக்கள்தொகையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதால் தமிழகத்தில் கடந்த 1967ம் ஆண்டு முதல் நடந்த 14 லோக்சபா தேர்தல்களில் தலா 2 எம்பிக்கள் வீதம் மொத்தம் 28 எம்பிக்கள் நமக்கு கிடைக்காமல் போய் விட்டனர். இதன்மூலமாக மாநில உரிமை மற்றும் அதன்மூலம் வளர்ச்சிக்கான திட்டங்களை தமிழகம் இழந்துள்ளது. 2050ல் மக்கள்தொகை பெருக்கத்தில் இந்தியா சீனாவை முந்திவிடும் என ஆய்வுகள் கூறுகின்றன. மக்கள்தொகையை கட்டுப்படுத்தினால் மட்டுமே வருங்கால சந்ததி ஆரோக்கியமாக வாழ முடியும். ஆனால், அதேநேரம் மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதன் மூலமாக தொகுதி மறுவரையறை என்பதை காரணம் காட்டி எம்பிக்களின் எண்ணிக்கையை குறைத்தால் அது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயல். அதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.ஒரு எம்பி மூலமாக அந்த மாநிலத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ.200 கோடி நலத்திட்ட பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் என்றால், கடந்த 14 தேர்தல்களில் 28 எம்பிக்களை இழந்துள்ள தமிழகத்துக்கு இழப்பீடாக ஒன்றிய அரசு ஏன் ரூ.5,600 கோடியை வழங்கக்கூடாது?அதேபோல, இனி எதிர்வரும் தேர்தல்களில் மக்கள்தொகையை அடிப்படையாக வைத்து தமிழக எம்பிக்களின் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது என ஏன் தடை விதிக்கக்கூடாது? லோக்சபா எம்பிக்களின் எண்ணிக்கையை குறைத்தால் அதற்கு பதிலாக ராஜ்யசபா எம்பிக்களின் எண்ணிக்கையை ஏன் உயர்த்தக்கூடாது? இந்த கேள்விகளுக்கு மத்திய அரசு 4 வாரங்களில் தகுந்த விளக்கமளிக்க வேண்டும். மேலும் இவ்வழக்கில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, பாமக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளையும் தாமாக முன்வந்து எதிர் மனுதாரர்களாக சேர்க்கிறோம். அவர்களும் இதுதொடர்பாக 4 வாரத்தில் பதிலளிக்க வேண்டும். இவ்வழக்கு தென்காசி தொகுதியை பொதுத்தொகுதியாக மாற்றக்கோரி தொடரப்பட்டுள்ளது. அத்தொகுதியில் வசிக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்களின் எண்ணிக்கை மற்ற சமுதாயத்தவர்களை விட அதிகமாக இருப்பதால் தான் அந்த தொகுதி தனித்தொகுதியாக வரையறை செய்யப்பட்டுள்ளது. எனவே மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்….

The post கடந்த 14 தேர்தல்களில் 28 எம்பிக்களை இழந்துள்ள தமிழகத்துக்கு இழப்பீடாக ஒன்றிய அரசு ஏன் ரூ.5,600 கோடியை வழங்கக்கூடாது?: ஐகோர்ட் நீதிபதிகள் சரமாரி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Union Government ,Tamil Nadu ,Madurai ,ICORT ,Chamari ,
× RELATED பதிவு பெறாமல் வெளிநாட்டு வேலைக்கு...