×

ஆவணங்கள், கார்களை எடுத்து சென்றனர் ஆப்கானில் இந்திய தூதரகங்கள் சூறை: தலிபான்கள் அட்டூழியம்

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் அராஜகத்தை தொடங்கி உள்ள தலிபான்கள் ஒவ்வொரு வீடு, வீடாக சென்று சோதனை நடத்தி வருகின்றனர். 2 நகரங்களில் இந்திய தூதரங்களில் நுழைந்து சூறையாடிய தலிபான் தீவிரவாதிகள் அங்கிருந்த முக்கிய ஆவணங்கள், கார்களை எடுத்துச் சென்றுள்ளனர். ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்துள்ள தலிபான் தீவிரவாதிகள், இம்முறை பல்வேறு வாக்குறுதி அளித்துள்ளனர். பெண்களை மரியாதையாக நடத்துவோம், பத்திரிகை சுதந்திரம் காப்போம், உலக நாடுகளுடன் இணக்கமாக இருப்போம் என பேட்டி அளித்தனர். ஆனால் ஆரம்பத்திலேயே இந்த வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டு, மீண்டும் தங்கள் அராஜக கொடுமைகளை அரங்கேற்றி வருகின்றனர். அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுடன் தொடர்பில் இருந்தவர்களை வீடுவீடாகத் தேடிச் செல்கின்றனர் தலிபான்கள். அவர்களுடன் அவர்களின் குடும்பத்தாரையும் குறிவைக்கின்றனர். பெண் பத்திரிகையாளர்களுக்கு தடை விதித்துள்ளனர். ஜெர்மனி பத்திரிகையாளர் ஒருவரை தேடி வரும் தலிபான்கள் அவரது உறவினர் ஒருவரை நடுரோட்டில் வைத்து கொலை செய்துள்ளனர். இந்த சம்பவங்களால் ஆப்கன் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இதுமட்டுமின்றி, இந்திய தூதரங்களையும் தலிபான்கள் சூறையாடி உள்ளனர். ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூல், கந்தகார், ஹிரத், மஜார் இ ஷரிப் ஆகிய 4 நகரங்களில் இந்திய தூதரங்கள் உள்ளன. இந்தியர்களை மீட்கும் பணிக்காக காபூல் தூதரம் மட்டும் மூடப்படவில்லை. மற்ற 3 தூதரங்கள் மூடப்பட்டு அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர். இந்நிலையில், பூட்டப்பட்டுள்ள கந்தகார், ஹிரத் நகர தூதரகங்களில் தலிபான் தீவிரவாதிகள் நுழைந்து சூறையாடியிருப்பதாக இந்திய அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு அலமாரிகளை துழாவிய தீவிரவாதிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர். அதோடு தூதரகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் உள்ளிட்ட வாகனங்களையும் அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். ஏற்கனவே இந்திய தூதரங்களில் இருந்து அதிகாரிகள், ஊழியர்கள் வெளியேறுவதை தலிபான்கள் விரும்பவில்லை. அவர்களுக்கு எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் இருக்காது என கத்தார் அமைப்பு மூலமாக இந்திய அரசிடம் வலியுறுத்தி இருந்தனர். அதையும் மீறி அவர்கள் அனைவரும் இந்தியா அழைத்து வரப்பட்டனர். இது தலிபான்களை ஆத்திரமூட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது.அமெரிக்க ஆயுதங்கள் தலிபான்கள் வசமானது* அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் வெளியிட்ட அறிக்கையில்,  ‘ஆப்கனில் இருந்து இதுவரை 7,000 பேர் மீட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.  இன்னும் 5,200 அமெரிக்க படையினர் காபூலில் உள்ளனர்’ என கூறப்பட்டுள்ளது* பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான விமான நிறுவனம் காபூலில் இருந்து தங்கள் நாட்டு மக்களை மீட்க மீண்டும் விமான சேவையை தொடங்கியது.* அமெரிக்காவின் ஜனநாயக கட்சி எம்பிக்கள் 12 பேர் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் லாய்டு அஸ்டினுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘ஆப்கனில் இருந்து படைகளை வாபஸ் பெறுவதில் அமெரிக்கா செய்த தவறால், அதிநவீன பல கோடி மதிப்பிலான முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க ஆயுதங்கள் தலிபான்கள் வசம் சென்றுள்ளது. இதை வைத்து, தலிபான்கள் சீனா, ரஷ்யா, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் உதவியை பெற வாய்ப்புள்ளது’ என எச்சரித்துள்ளனர்.* உத்தரகாண்ட்டை சேர்ந்த 110 பேர் ஆப்கனில் சிக்கியிருப்பதாக அம்மாநில அரசு ஒன்றிய அரசிடம் விவரங்களை  சமர்ப்பித்துள்ளது.* ஆப்கன் விவகாரத்தில் இந்தியா, அமெரிக்கா தொடர்ந்து இணைந்து செயல்படுவதென இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கின் பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. ஆப்கன் குறித்து ஒரே வாரத்தில் இரு அமைச்சர்களும் 2வது முறையாக ஆலோசித்துள்ளனர்.* தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானுக்கான ரூ.70 ஆயிரம் கோடி நிதி உதவியை அமெரிக்கா நிறுத்தி உள்ளது. ஏற்கனவே உலக வங்கி, சர்வதேச நிதியம் போன்ற சர்வதேச அமைப்புகளும் நிதி உதவியை நிறுத்தி வைத்துள்ளன.குழந்தைகளையாவது காப்பாற்ற துடிக்கும் மக்கள்காபூல் விமான நிலையம் மட்டும் இன்னமும் அமெரிக்க ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கிருந்து மட்டுமே வெளிநாட்டவர்கள் அவரவர் சொந்த நாட்டிற்கு மீட்டு அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி எப்படியாவது வேறு நாட்டிற்கு செல்ல வேண்டுமென ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் தினந்தோறும் காபூல் விமான நிலையத்தை முற்றுகையிட்ட வண்ணம் உள்ளனர். அங்கு அனைத்து நுழைவாயில்கள் மூடப்பட்டு அமெரிக்க ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், தங்களால் செல்ல முடியாவிட்டாலும் தங்கள் குழந்தையையாவது பத்திரமாக வேறு நாட்டிற்கு அனுப்பி வையுங்கள் என குழந்தைகளை ஆப்கன் மக்கள் அமெரிக்க ராணுவ வீரர்களிடம் கொடுக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சின்னச்சிறு பச்சிளம் குழந்தையை சிலர் ராணுவ  வீரர்களிடம் கொடுக்கும் காட்சிகள் பரிதாபத்தை ஏற்படுத்துகிறது.பைடனுக்கு பதிலாக கமலா அதிபராகலாம்!அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிசின் செயல்பாடுகள் குறித்து வாராந்திர கணக்கெடுப்புகள் நடத்தப்படுவது வழக்கம். இதில் 7 மாத ஆட்சியில், ஆப்கான் விவகாரத்திற்குப் பிறகு முதல் முறையாக அதிபர் பைடனின் செல்வாக்கு சதவீதம் 50% க்கு கீழ் சரிந்துள்ளது. அதிபராக இவரது செயல்பாட்டில் 46% அமெரிக்கர்களே திருப்தி தெரிவித்துள்ளனர். அதே சமயம் துணை அதிபர் ஹாரிசுக்கு மவுசு அதிகரித்துள்ளது. பைடனுக்கு பதிலாக இவரே நாட்டை வழிநடத்தலாம் என 43% மக்கள் கூறி உள்ளனர்.நாக்பூரில் 10 ஆண்டு வசித்த தலிபான்ஆப்கானிஸ்தானை சேர்ந்த நூர் முகமது அஜிஸ் முகமது (30) என்பவர் கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டார். 10 ஆண்டாக அவர் சட்ட விரோதமாக நாக்பூரில் வசித்து வந்துள்ளார். ரகசியமாக கண்காணிக்கப்பட்ட பிறகு அவன் நாடு கடத்தப்பட்ட நிலையில் தற்போது நூர் முகமது தலிபான் அமைப்பில் சேர்ந்து துப்பாக்கியுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது….

The post ஆவணங்கள், கார்களை எடுத்து சென்றனர் ஆப்கானில் இந்திய தூதரகங்கள் சூறை: தலிபான்கள் அட்டூழியம் appeared first on Dinakaran.

Tags : embassies ,Afghanistan ,Taliban ,New Delhi ,
× RELATED உ.பி பாஜக அரசை தலிபான் அரசு என்று கூறிய...