×

கொடநாடு கொலை வழக்கு சயான் வாக்குமூலம் ஆக.27க்குள் கோர்ட்டில் தாக்கல்

ஊட்டி: கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக சயானிடம் பெறப்பட்ட வாக்குமூலம் தொடர்பான அறிக்கையை வரும் 27ம் தேதிக்குள் மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் தாக்கல்  செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கோத்தகிரி அருகே ஜெயலலிதா, சசிகலாவுக்கு சொந்தமான கொடநாடு  எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 27ம் தேதி சேலத்தை சேர்ந்த  கனகராஜ் தலைமையில் ஒரு கும்பல் கொள்ளையடிக்க சென்றது. அப்போது, அங்கு  காவலில் இருந்த ஓம்பகதூர் என்ற காவலாளியை அக்கும்பல் கொலை செய்தது. அதன்பின்,  பங்களாவிற்குள் சென்ற கும்பல் பல்வேறு பொருட்கள் மற்றும் சொத்து  ஆவணங்களை கொள்ளை அடித்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியான  கனகராஜ் சாலை விபத்தில் மரணமடைந்தார். மற்றொரு முக்கிய குற்றவாளியான சயான்  மற்றும் வாளையார் மனோஜ் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர். இது  தொடர்பான வழக்கு ஊட்டியில் உள்ள செஷன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. குற்றவாளிகள்  அனைவரும் ஜாமீனில் இருந்த நிலையில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு டெல்லியில்  சயான் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி  அளித்தனர். அதில், இந்த கொலை, கொள்ளையில் அதிமுக விஐபி ஒருவருக்கு தொடர்பு  உள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து, இவர்கள் இருவரையும் கோத்தகிரி  போலீசார் மீண்டும் கைது செய்தனர். கடந்த மாதம் சயான் மீண்டும் ஜாமீனில் வெளியில் வந்தார்.  கடந்த 13ம் தேதி ஊட்டி கோர்ட்டில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.  அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல்கள் மீண்டும் இவ்வழக்கை விசாரிக்க  வேண்டும் என நீதிபதியிடம் கோரிக்கை வைத்தனர். அதேபோல் சயானும் தன்னிடம்  விசாரணை மேற்கொள்ள வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி, சயானிடம் நேற்று முன்தினம் நீலகிரி எஸ்பி ஆசிஷ் ராவத் தலைமையில்  போலீசார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.  அப்போது சயான் அளித்த வாக்குமூலத்தில், கொடநாடு எஸ்டேட்டில் ஜெயலலிதாவின் பணம் ரூ.2 ஆயிரம் கோடி, 5 முக்கிய அமைச்சர்களின் பல கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் உள்ளன. அதை எடுத்து வரவேண்டும் என்று முக்கிய விஐபி கூறியதாக கனகராஜ் கூறினார். அதன்படி நாங்கள் சென்றபோது, செக்யூரிட்டி தடுத்ததால் வாளையார் மனோஜ், ஒரு செக்யூரிட்டியை கழுத்தை இறுக்கி கொலை செய்து விட்டார். மற்றொருவரை தாக்கிவிட்டு உள்ளே சென்றோம். பணத்தை கனகராஜ்தான் எடுத்து வாகனங்களில் ஏற்றினார். சொத்து ஆவணங்களையும் எடுத்துக் கொண்டார். சில விலை உயர்ந்த பொருட்கள், குறிப்பாக ஜெயலலிதாவின் வாட்ச் உள்ளிட்ட பொருட்களை நாங்கள் எடுத்துக் கொண்டோம். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றோம். எங்களுக்கு பேசியபடி சில லட்சங்களை கொடுத்தனர். ஆனால் கனகராஜை கொன்றதுபோல என் குடும்பத்தையும் கொன்று விட்டனர். ஆனால், நான் தப்பி பிழைத்தேன். இதனால்தான் இந்த உண்மைகளை கூறுகிறேன். அதிமுகவில் உள்ள மூத்த தலைவர் மற்றும் அதிகாரத்தில் இருந்தவர் பெயரை கனகராஜ் சொன்னார். அதனால்தான் நாங்கள் செய்தோம் என கூறியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.மேலும், கொடநாடு பங்களாவில் இருந்து  எடுத்து செல்லப்பட்ட ஆவணங்கள் சம்பந்தப்பட்ட விஐபியிடம், இறந்துபோன கனகராஜ்  மூலம் வழங்கப்பட்டு விட்டதாக கூறியதாகவும் தெரிகிறது. இதனால் இவ்வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வரும் 27ம் தேதி கொடநாடு கொலை வழக்கு விசாரணை ஊட்டி செஷன்ஸ்  நீதிமன்றத்தில் நடக்கிறது. அதற்குள் சயானிடம் பெற்ற வாக்குமூல அறிக்கையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக  போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த வாக்குமூலத்தை தாக்கல் செய்த பின்னரே யார் மீது சயான் குற்றம் சாட்டியுள்ளார், ெகாடநாடு கொலை மற்றும் கொள்ளை  சம்பவத்திற்கு தொடர்புடையதாக கூறப்படும் அதிமுக விஐபி  யார் என தெரியவரும். அதன்பின்னரே, இவ்வழக்கு மீண்டும் சூடுபிடிக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது….

The post கொடநாடு கொலை வழக்கு சயான் வாக்குமூலம் ஆக.27க்குள் கோர்ட்டில் தாக்கல் appeared first on Dinakaran.

Tags : Saiyan ,Kodanadu ,Sayan ,Dinakaran ,
× RELATED கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு...