×

தேசிய நெடுஞ்சாலை துறையால் ஆயிரமாண்டு மரத்திற்கு ஆபத்து: பொதுமக்கள் எதிர்ப்பு

ராமேஸ்வரம்:  ராமேஸ்வரத்தில் சாலையை அகலப்படுத்துவதற்காக நெடுஞ்சாலை துறையினர் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பயோபாப் மரத்தை வெட்டுவதற்கு முயுற்சி செய்வதை தடுத்து மரத்தை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆப்பிரிக்க காடுகளில் அதிகளவில் உள்ள பயோபாப் மரங்கள் இந்தியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் ஆங்காங்கே காணப்படுகிறது. 50 அடி உயரத்திற்கு மேல், அதிகப்பட்சம் 30 அடி சுற்றவில் காணப்படும் பயோபாப் மரங்களின் வெளிப்பகுதி தடிமனான சுவர் போன்றும், உள்ளே கூடு போல் வெற்றிடமாகவும் இருக்கும். இதன் இலைகள் கைவிரல்களை விரித்து வைத்தது போன்று ஐந்து இலைகளுடன் காட்சியளிக்கும். இந்த மரத்தில் உள்ள பழுத்த காய்கள் ஒருவித புளிப்பு சுவையுடன் இருக்கும். இம்மரத்தின் இலைகள், காய்களை குதிரைகள் விருப்ப உணவாக உட்கொள்ளும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவிலிருந்து குதிரை வர்த்தகத்திற்காக தமிழகம் மற்றும் இலங்கை பகுதிகளுக்கு வந்த வியாபாரிகள் குதிரைகளுக்கு கொடுப்பதற்காக இந்த மரத்தினை கொண்டு வந்தனர். இந்த மரங்கள் பொந்தன்புளி, ஆனைப்புளி, பெருக்கமரம் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. ராமேஸ்வரம் நகரில் பேருந்து நிலையத்திற்கு செல்லும் வழியில் காட்டுப்பிள்ளையார் கோயில் பகுதியில் சாலையோரத்தில் இடது புறத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பொந்தன்புளி மரம் உள்ளது. சுமார் 30 அடி அகலத்தில் இருக்கும் பொந்தன்புளி மரத்தை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதால், கடந்த 2003ம் ஆண்டில் வனத்துறையினர் இம்மரத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பாதுகாத்து வந்தனர். சுமார் 25 தலைமுறைகள் கண்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த மரத்தை வெட்டுவதற்கு தேசிய நெடுஞ்சாலை துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் தீவில் பாம்பன் பாலம் முதல் தனுஷ்கோடி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணிக்காக கடந்த காலங்களில் நூற்றாண்டுகள் பழமையான பலவகை மரங்கள் வெட்டப்பட்டது. ஆனால் தற்போது வரை தேசிய நெடுஞ்சாலை துறையினரால் புதிய மரங்கள் எதுவம் வளர்க்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது ராமேஸ்வரம் பேருந்து நிலையம முதல் லெட்சுமண தீர்த்தம் பகுதி வரை சாலை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதற்காக சாலையோரத்தில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு வரும் நிலையில் பொந்தன்புளி பகுதியில் உள்ள பழமையான போபியாப் மரத்தையும் வெட்டுவதற்கு தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இப்பகுதி மக்களும், இயற்கை ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பழமையான இந்த மரத்தை ராமேஸ்வரம் வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர். யானை நிற்பது போன்ற தோற்றத்தில் பிரம்மாண்டமாய் காட்சியளிக்கும் இந்த மரம் உள்ளூர் மக்களாலும் அதிசயமாய் பார்க்கப்படும் ஒன்றாக இன்று வரை விளங்கி வருகிறது. இதனால் சாலை அகலப்படுத்துதல் என்ற பெயரில் இந்த மரத்தை வெட்டும் முடிவை கைவிட்டு மரத்தை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், தன்னார்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்….

The post தேசிய நெடுஞ்சாலை துறையால் ஆயிரமாண்டு மரத்திற்கு ஆபத்து: பொதுமக்கள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : millennial ,National Highway Department ,Rameswaram ,
× RELATED ராமேஸ்வரத்தில் முருகன் கோயில் வாசலை...