×

சூனாம்பேடு பகுதிகளில் மீனவ கிராமங்களில் விழிப்புணர்வு குழு: எஸ்பி தொடங்கி வைத்தார்

செய்யூர்: சூனாம்பேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட மீனவ கிராம பகுதிகளில், கிராம விழிப்புணர்வு குழுவை, எஸ்பி விஜயகுமார் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு காவல் நிலையத்துக்கு உட்பட்ட கடப்பாக்கம் குப்பம், தண்டு மாரியம்மன் குப்பம், ஆலம்பரை குப்பம் ஆகிய கிராமங்களை ஒன்றிணைத்து கிராமங்களுக்கென காவல்துறை சார்பில், கிராம விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவுக்கு சிறப்பு எஸ்ஐயை நியமிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. சூனாம்பேடு இன்ஸ்பெக்டர் மதியரசன் வரவேற்றார். மதுராந்தகம் டிஎஸ்பி கவினா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக எஸ்பி விஜயகுமார் கலந்து கொண்டு, கிராம விழிப்புணர்வு குழுவினை தொடங்கி வைத்து, குழுவுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் சுந்தரேசனை நியமித்தார். பின்னர் எஸ்பி பேசியதாவது.விழிப்புணர்வு குழு அமைக்கப்பட்டு, அதன் மூலம் இந்த கிராமங்களில் ஏதேனும் சந்தேகத்திற்குரிய அந்நிய நபர்கள் நடமாடினாலோ, அவர்களால் வேறு ஏதேனும் குற்ற செயல்கள் நடந்தாலோ உடனடியாக இந்த குழுவுக்காக நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு எஸ்ஐயிடம் புகார் அளிக்க வேண்டும். புகார்கள் அளிக்கும் நபர்கள் குறித்து ரகசியம் பாதுகாக்கப்படும். கிராமங்களில், சட்டத்துக்கு புறம்பாக ஏதேனும் குற்றச் செயல்கள் நடந்தால், குற்ற செயலில் ஈடுபடுவோரும், அதற்கு உடந்தையாக இருப்பவர்களும் திருந்தி வாழ முன்வந்தால், அவர்கள் வேறு தொழில் செய்ய காவல்துறை சார்பில் உதவி செய்யப்படும். குற்றச்செயல்கள் ஈடுபடுவோர் மட்டுமின்றி பொதுமக்களுக்கு ஏதேனும் தனிப்பட்ட முறையில் உதவிகள், கல்வி சம்பந்தமான உதவிகள் தேவைப்பட்டால் அவர்களின் தேவைகளை காவல்துறை பூர்த்தி செய்யும். எனவே, இந்த திட்டத்தை இக்கிராம மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என்றார். தொடர்ந்து, வரலாற்று சிறப்புமிக்க ஆலம்பரை கோட்டையை பார்வையிட்ட எஸ்பி விஜயகுமார், கோட்டையின் வரலாற்று சிறப்பை கிராம மக்களிடம் கேட்டறிந்தார்….

The post சூனாம்பேடு பகுதிகளில் மீனவ கிராமங்களில் விழிப்புணர்வு குழு: எஸ்பி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Soonampedu ,SP ,Seyyur ,Vijayakumar ,Soonambedu police ,Soonambedu ,Dinakaran ,
× RELATED ராமநாதபுரத்தில் கலவரம் தடுப்பு குறித்து ‘மாப் ஆபரேஷன்’