×

சின்ன வெங்காயம் சாகுபடி தொழில்நுட்பங்கள்: புழுதேரி வேளாண். அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி ஆலோசனை

தோகைமலை: கரூர் மாவட்டம் தோகைமலை வட்டார பகுதிகளில் சின்னவெங்காயம் சாகுபடியை ஒருசில விவசாயிகள் தொடங்கி உள்ளனர். சின்னவெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு புழுதேரி இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக வேளாண் அறிவியல் மையத்தின் முதுநிலை விஞ்ஞானி திரவியம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளார். அவர் தெரிவித்து உள்ளதாவது:சின்னவெங்காயம் என்பது ஒரு வெப்ப மண்டல பயிராகும். நன்கு தண்ணீர் தேங்காத வளமான இரு மண்பாங்கான நிலம் சாகுபடிக்கு உகந்தது ஆகும். கோ 1, 2, 3, 4, 5 மற்றும் எம்டி 1 ஆகிய ரகங்கள் சாகுபடி முறைக்கு ஏற்றதாகும்.ஏப்ரல், மே மாதங்கள் மற்றும் அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களில் சாகுபடியை தொடங்கலாம். மண்ணின் கார அமிலம் தன்மை 6 முதல் 7க்குள் இருக்க வேண்டும். நன்கு தண்ணீர் தேங்காத செம்மண் நிலம் அமைந்தால் சாகுபடிக்கு சிறப்பாக இருக்கும். ஒரு ஏக்கருக்கு 1500 கிலோ விதை வெங்காயம் தேவைப்படும். விதை வெங்காயத்தை பார் பாத்தியில் 10 செ.மீ இடைவெளியில் இருபுறமும் நட்டு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதனை தொடர்ந்து 3 நாட்கள் கழித்து உயிர் தண்ணீர் பாய்ச்சிய பிறகு 5 முதல் 7 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும்.நடவுக்கு முன்பு பார் பாத்திகளின் இருபுறமும் 30 கிலோ தழைச்சத்தும், 60 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து உள்ள அடி உரங்கள் இடவேண்டும்.நடவு செய்த 30 நாட்கள் கழித்து 30 கிலோ தழைச்சத்து மேல் உரமாக இட்டு மண் அணைக்க வேண்டும். அதேபோல் நடவு செய்த 30வது நாளில் களை எடுத்து மேல் உரம் இட்டு மண் அனைத்து நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் தேவைக்கு ஏற்ப களை எடுத்து நிலத்தை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். சின்ன வெங்காய சாகுபடியின் போது சாறு உறிஞ்சும் பூச்சிகள், இலைபுள்ளி நோய், கீழ் தண்டு அழுகல், இலைகருகல் ஆகிய நோய்கள் தாக்கும். இதில் சாறு உறிஞ்சும் பூச்சியை கட்டுப்டுத்த மோனோகுரோட்பாஸ் மருந்து 1 சதவீதம் தெளிக்க வேண்டும். இதேபோல் இலைபுள்ளி நோயை கட்டுப்படுத்த இன்டோபில் எம் 45 என்ற மருந்தை 2 சதவீதம் தெளிக்க வேண்டும்.கீழ் தண்டு அழுகல் நோய்கள் ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாக காணப்படும். இதற்கு டிரைக்கோடெர்மா விரிடி 20 கிராம் 5 லிட்டர் கோமியம், 5 கிலோ சாணம் ஆகியவற்றை கலந்து அதனை நன்கு வடிகட்டி ஒட்டும் திரவத்துடன், வயலில் வளர்ந்து உள்ள வெங்காய தாள்கள் நனையும்படி காலை நேரங்களில் 15 நாட்கள் இடைவெளியில் கை தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இதேபோல் இலைகருகல் நோய்க்கு ஆடோமோனாஸ் (0.6 சதம்) 500 கிலோவை 100 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும்.வளர்ச்சி பருவத்தில் அமிர்தகரைசல், பஞ்சகாவ்யா, தேங்காய் மோர் கரைசலில் ஏதாவது ஒன்றை 20 நாட்கள் இடைவெளியில் தெளித்தால் நல்லது. அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன்பு 100 லிட்டருடன் 5 லிட்டர் புளித்த மோரை கரைத்து தெளித்தால் காய் திரட்சியாக நல்ல திறத்துடன் இருப்பதோடு எடையும் அதிகமாக இருக்கும்.சாகுபடி செய்த பருவகாலம் முடியும் தருவாயில் 75 சதவீதம் இலைகள் காய்ந்துவிட்டால் பயிர் முதிர்ச்சி அடைந்து இருக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம். அறுவடை செய்யும் 7 நாட்களுக்கு முன்பு தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் கொத்து அல்லது மண் தோண்டி மூலம் தோண்டி வேர் மற்றும் இலைகளை பறித்து சுத்தம் செய்தல் வேண்டும். அதன் பின்பு நிழலில் காயவைத்து வெங்காயத்தை விற்பனைக்காக பாதுகாக்க வேண்டும். மேற்படி முறைகளில் கடைபிடித்து சாகுபடி செய்தால் ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 டன் வரை மகசூல் கிடைக்கும் என்று விவசாயிகளுக்கு முதுநிலை விஞ்ஞானி ஆலோசனை வழங்கி உள்ளார்….

The post சின்ன வெங்காயம் சாகுபடி தொழில்நுட்பங்கள்: புழுதேரி வேளாண். அறிவியல் மைய முதுநிலை விஞ்ஞானி ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Science Center Masters Scientist Consult ,Dogimalai ,Chinnavengayam ,Dogimalai district ,Karur district ,Putheri ,Science Center Masters Scientist Consulting ,Dinakaran ,
× RELATED கடவூர் மற்றும் தோகைமலையில் சர்க்கரைவல்லிக்கிழங்கு சாகுபடி துவக்கம்