×

சித்தாமூர் அருகே உபரிநீர் கால்வாய் கரையில் 200 மரங்களை பெயர்த்து எரித்து அட்டூழியம்: இயற்கை ஆர்வலர்கள் வேதனை

செய்யூர்: சித்தாமூர் அருகே தனிநபர் ஒருவர் ஏரியின் உபரிநீர் கால்வாய் கரையில் உள்ள 200க்கும் மேற்பட்ட மரங்களை பெக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி, தீயிட்டு எரித்துள்ளனர். இதனால் வேதனையடைந்த பசுமை ஆர்வலர்கள், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் ஒன்றியம் சிறுக்கரணை கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து உபரிநீர் செல்வதற்காக உபரிநீர் கால்வாய் உள்ளது. இந்த கால்வாயின் கரையோர பகுதியில் சுமார் 30 முதல் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேப்பமரம், பனை மரம் உள்பட பல்வேறு வகைகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன.இந்நிலையில், இந்த ஏரி அருகே விவசாய நிலம் வைத்திருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிலர், தனது நிலத்துக்கு செல்ல பாதை இல்லாததால், உபரிநீர் கால்வாய் கரையில் உள்ள மரங்களை, கடந்த சில நாட்களுக்கு முன் பெக்லைன் இயந்திரம் மூலம் இரவோடு இரவாக மரங்களை பெயர்த்தும், வெட்டியும் போட்டுள்ளனர். மேலும், இந்த மரங்களை தீயிட்டு எரித்துள்ளனர். தனிநபர் தன்னுடைய சுயநலத்துக்காக இதுபோன்று இயற்கை வளங்களை அழித்தது, அப்பகுதி பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து சமூக விரோத செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறுகையில், வீடுகள் தோறும் மரங்கள் நட்டு பராமரிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. பல இடங்களில் சமூக ஆர்வலர்களும், அரசு அதிகாரிகளும் மரக்கன்றுகளை நடுவதை விழாவாக கொண்டாடி வருகின்றனர். இதுபோன்ற கன்றுகள் வளர்ந்து மரமாக மாறுவதற்கு குறைந்தது 5 ஆண்டுகள் ஆகும். ஆனால், வளர்ந்து தழைத்துள்ள மரங்களை அழிக்கும் சிலரால், இயற்கை வளம் பாதிக்கப்படுவதுடன், மழைநீர் சேகரிக்கும் திட்டமும் நாசமாகும் நிலை உள்ளது. எனவே, இதுபோன்ற சுயநலவாதிகள் மீது, மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்….

The post சித்தாமூர் அருகே உபரிநீர் கால்வாய் கரையில் 200 மரங்களை பெயர்த்து எரித்து அட்டூழியம்: இயற்கை ஆர்வலர்கள் வேதனை appeared first on Dinakaran.

Tags : Sitamur ,Dinakaran ,
× RELATED சந்தனத்தின் மருத்துவ குணங்கள்!