×

காராமணிக்குப்பம் ரோட்டில் பயன்பாடற்ற நிலையில் கிடக்கும் தற்காலிக மீன் மார்க்கெட்

புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பில் மீன் மார்க்கெட் உள்ளது. இங்கு 30க்கும் மேற்பட்டோர் மீன் வியாபாரம் செய்து வருகின்றனர். இதுதவிர மட்டன், சிக்கன் உள்ளிட்ட இதர கடைகளும் இயங்கி வருகின்றன. பாழடைந்த கட்டிடத்தில் இந்த மார்க்கெட் இயங்கும் நிலையில் கடந்தாண்டு 2, 3 முறை கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்ட் காரைகள் இடிந்து கீழே விழுந்தன. அப்போது அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 2 பெண்கள் காயமடைந்த நிலையில், மீன் வியாபாரிகள் ஒன்றுதிரண்டு புதிய மார்க்கெட் கட்டித்தரக்கோரி மறியலில் ஈடுபட்டனர். அப்போது நெல்லித்தோப்பு தொகுதி எம்எல்ஏவாக இருந்த நாராயணசாமி, உடனே சம்பவ இடத்தை பார்வையிட்டதோடு பாழடைந்த கட்டிடத்தை இடித்து புதிய மார்க்கெட் கட்ட நடவடிக்கை எடுப்பதாகவும், அதுவரை காராமணிக்குப்பம் ரோட்டில் சாலையோரம் தற்காலிக மார்க்கெட் இயங்க கூரை அமைத்து தருவதாகவும் உறுதியளித்தார். அதன்பேரில் உடனடியாக தற்காலிக மார்க்கெட் நகராட்சி சார்பில் லட்சக்கணக்கில் செலவிட்டு அமைக்கப்பட்டது. ஆனால் தற்காலிக மார்க்கெட் கட்டி முடிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் நள்ளிரவில் சமூக விரோதிகள் பல்வேறு குற்ற செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இதை ஒட்டி லாரி, கார், சரக்கு வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மறைவான இடத்தில் ரவுடிகள் பல்வேறு அட்டூழியங்களை அரங்கேற்றி வருகின்றனர். இதனால் தற்காலிக மார்க்கெட்டை கட்டியதன் நோக்கமே பாழாகும் நிலை உள்ளது. இது ஒருபுறமிருக்க அபாய கட்டத்தில் உள்ள பழைய மார்க்கெட்டிலேயே மீன் வியாபாரத்தில் பெண்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அங்கு சென்றுதான் பொதுமக்களும் தங்களுக்கு தேவையான மீன்களை சமூக இடைவெளியின்றி நெரிசலில் சென்று வாங்கும் அவலம் உள்ளது. எனவே பெரியளவில் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு தற்காலிக மீன் மார்க்கெட்டிற்கு வியாபாரத்தை மாற்றியமைத்து, பழைய மார்க்கெட்டினை புதுப்பித்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?. …

The post காராமணிக்குப்பம் ரோட்டில் பயன்பாடற்ற நிலையில் கிடக்கும் தற்காலிக மீன் மார்க்கெட் appeared first on Dinakaran.

Tags : Karamanikuppam Road ,Puducherry ,Puducherry Nellithopp ,Mutton ,Fish Market ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி லாஸ்பேட்டையில் கிரிக்கெட் விளையாடிய இளைஞர் உயிரிழப்பு!!