×

144 தடை உத்தரவால் ‘செக்ஸ் ஒர்க்கர்ஸ்’ ஆர்ப்பாட்டம்: சில இடங்களுக்கு ‘சீல்’ வைத்ததால் பரபரப்பு

மும்பை: கங்கா ஜமுனா பகுதியில் போலீசாரின் 144 தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து செக்ஸ் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் கங்கா ஜமுனா எனப்படும் சிவப்பு  விளக்குப் பகுதியில் சுமார் 500 முதல் 700 செக்ஸ் தொழிலாளர்கள் வசித்து  வருகின்றனர். இவர்களில்  பெரும்பாலானவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து  வரும் இளம் பெண்கள் ஆவர். இந்த பகுதியில் பல அங்கீகரிக்கப்படாத வீடுகளில்,  பாலியல் தொழில் நடப்பதால், அப்பகுதியில் குற்றச்சம்பவங்களும் அதிகரித்து  வந்தன. இந்நிலையில், கங்கா ஜமுனா சிவப்பு விளக்கு பகுதியில் வசிக்கும் செக்ஸ் தொழிலாளர்கள் சங்கத்தினர் (சிஎஸ்டபிள்யூ) திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘கங்கா ஜமுனா பகுதியில் சிஆர்பிசி பிரிவு 144-இன் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், வெளியாட்கள் இப்பகுதியில் நுழைவதைத் தடுப்பதற்காக காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து, செக்ஸ் தொழிலாளர்கள் சிலர் போலீசாரால் போடப்பட்ட சாலை தடுப்புகளை அகற்றினர். இப்பகுதியில் நடக்கும் சட்டவிரோத செயல்கள் குறித்து, தொடர்ந்து பல குடியிருப்பாளர்கள் புகார் அளித்ததால், குறிப்பிட்ட சில இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது’ என்றனர். இதுகுறித்து சிஎஸ்டபிள்யூ சங்கத் தலைவர் ஜ்வாலா தோதே கூறுகையில், ‘எனது தலைமையில் 100க்கும் மேற்பட்ட செக்ஸ் தொழிலாளர்கள், போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். எங்களது பகுதிக்கு மக்கள் வருவதை தடுக்க, தடை விதிக்கப்பட்டு தடுப்புகளை வைத்துள்ளனர். அதனால் அவற்றை அப்புறப்படுத்தினோம். சிலர் குறிப்பிட்டப் பகுதியை ஆக்கிரமிக்கிறார்கள் என்றால், அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விடுத்து, எங்களுக்கு எதிராக போலீசார் நடந்து கொள்கின்றனர். இதன் மூலம், நிலத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபடுவோருக்கு போலீசார் உதவுகின்றனர்’ என்றார். செக்ஸ் ஒர்க்கர்சின் திடீர் போராட்டத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. …

The post 144 தடை உத்தரவால் ‘செக்ஸ் ஒர்க்கர்ஸ்’ ஆர்ப்பாட்டம்: சில இடங்களுக்கு ‘சீல்’ வைத்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Mumbai ,Ganga Jamuna ,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 913 புள்ளிகள் உயர்வு..!!