×

குக்கர் கட்சி விசில் அடிக்காததால் நிர்வாகிகள் மாற்றுத்திட்டம் போட்டிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘குக்கர் கட்சி ஆரம்பித்த நாள் முதல் தென் மாவட்டங்களில் எப்போதும் விசில் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்ததே.. இப்போ பேச்சு மூச்சையே காணோமே..’’ என்று கேலிச்சிரிப்புடன் கேட்டார் பீட்டர் மாமா.‘‘உண்மைதான்..அப்போது ஆளுங்கட்சியாக இருந்த இலைக்கே அல்வா மாவட்டத்தின் குக்கர் கட்சியினர் சவால் விடுத்தனர். ஆனால் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பிறகு குக்கர்  கட்சியினர் ஒருவர் பின் ஒருவராக கட்சியில் இருந்து வெளியேறி விட்டனர். சின்னம்மாவும் டிரிங், டிரிங் என சிறிது காலம் குக்கர் கட்சியின் நிர்வாகிகளுடன் பேசினார். தற்போது அவரது குரலும் ஓய்ந்து விட்ட நிலையில், குக்கரின் விசில் சத்தத்தை எங்கும் கேட்க முடியவில்லை. இருக்கும் கொஞ்சநஞ்ச நிர்வாகிகளும் இந்த கட்சி ஆடி அடங்கி விட்டதே…. இனி எங்கே நமக்கு அரசியல் எதிர்காலம் என யோசிக்கத் தொடங்கி விட்டனர். ஊரக உள்ளாட்சி தேர்தலை சந்திக்க இலை கட்சி கூட ஆலோசனை நடத்தி வரும் நிலையில் குக்கரின் விசில் சத்தமின்றி ஓய்ந்து கிடக்கிறது. இதனால் அந்த கட்சி நிர்வாகிகள் மாற்றுக்கட்சிக்கு ஓடும் திட்டத்தை போட்டு வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.‘‘மெடல் மாவட்டத்தில் வில்லங்கமாமே..’’ என்றார் பீட்டர் மாமா.‘‘ஆமா…மரியாதையில் துவங்கும் பெயர் கொண்ட ஊரின் பதிவு அலுவலக பெண் அதிகாரியாக பூவில் முடியும் பெயர் கொண்டவர் இருக்கிறார். கடந்த 2 ஆண்டுகளாக பணியில் தொடர்கிற இவர், வசூல் மழையால், வளமிகு வாழ்க்கையில் இருக்கிறாராம். அலுவலகத்தின் வெளியே பத்திர எழுத்தரிடம் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக ஊர் பெயரில் துவங்கும் இவரது தோழி பணியாற்றுகிறாராம்… கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, மெடல் நகர் பதிவு அலுவலகத்தில் கீழ்நிலை ஊழியராக இருந்த பூ அதிகாரி, இலைக்கட்சியின் மேல்மட்ட தலைகளின் தயவால், ஐந்தெழுத்து ஊருக்கு அதிகாரியாக பதவியேற்றாராம். இங்கேயே தோழியையும் வரவழைத்து வைத்து, பதவியேற்ற நாள் முதல் வசூல் மழையில் நனைகிறாராம். தோழி மூலமே அத்தனை பணமும் கைமாறுகிறது. வில்லங்க சொத்தை பதிய வேண்டுமென்றால் தோழியை பிடித்தால் தான் கதையாகும். சாதாரண பத்திரத்திற்கு சில ஆயிரம் ரூபாய் என்றால், வில்லங்கச் சொத்திற்கு ‘‘லகரம்’’ வரை வசூல் ஓடுகிறது. பணம் தராவிட்டால் வில்லங்கமென ஒதுக்கி விடுகிறாராம்… இந்த அதிகாரியை மாட்டி விட வேண்டுமென ஒரு கோஷ்டி லஞ்ச ஒழிப்புத் துறையை நாடி இருக்கிறது. ஆனாலும், எந்த அச்சமுமின்றி வசூல் மழை இந்த அலுவலகத்தில் சர்வ சாதாரணமாக பெய்து வருகிறதாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தனிப்பிரிவில் கல்லா கட்டுகிறார்களாமே..’’ என சந்தேகத்துடன் கேட்டார் பீட்டர் மாமா.‘‘வெயிலூர் மாவட்டத்தில அதிமுக ஆட்சி காலத்தில் நியமித்து பல ஆண்டுகளாக போலீஸ்  ஸ்டேஷனில் தனிப்பிரிவில் பணியாற்றி வந்தவர்களை கடந்த சில வாரங்களுக்கு முன்பு எஸ்பி அதிரடியாக இடமாற்றம் செய்தார். ஆனால் அதில் 7 பேர் மட்டும் இன்னும் தனிப்பிரிவில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொடிக்கட்டி பறந்தவர்களாக இருப்பவர்கள். அதுவும் நவரச நாயகன் நடிகர் பெயர் கொண்டவரும், ஜெயமானவரும் உள்ளிட்ட 7 பேர் மட்டும் தனிப்பிரிவில் வேறு காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காட்டன், கஞ்சா, கள்ளச்சாராயம், மணல் கடத்தல், ரவுடியிசம் என அனைத்து தரப்பில் இருந்தும் அவர்களுக்கு வைட்டமின் ‘‘ப’’ தேடி வருகிறதாம். மேலும் காவல் நிலையங்களில் நடக்கும் விஷயங்களை தலைமையிடத்திற்கு தெரிவிக்காமல் இருக்க காவல்நிலையத்தில் இருக்கும் எஸ்ஐகளையும் கையில் போட்டுக்கொண்டு  வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்களாம். உயர்அதிகாரிகளிடம் தாங்கள் நேர்மையான காவலர்கள் போல வெளியில் பில்டப் செய்து கொண்டு உள்ளடி வேலை  செய்வதில் கில்லாடியாம். எனவே காவல்துறை உயர் அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தி நேர்மையாக உள்ள தனிப்பிரிவு காவலர்களை நியமனம் செய்தால் மட்டுமே நேர்மையான, சிறப்பான நிர்வாகம் நடத்த முடியும். இல்லையெனில் தமிழக அரசுக்கு  கெட்ட பெயர் உருவாக்கும் நிலை ஏற்படும். ஆட்சி மாறியும் இவர்களின் காட்சி  மாறவில்லையே என்று வேதனை தெரிவிக்கின்றனர் சக காவலர்கள்’’ என்றார்  விக்கியானந்தா.‘‘குறைகளுக்காக பொதுமக்கள் அலுவலகத்திற்கு எப்போது வந்தாலும் காலி நாற்காலிகள்தான் காட்சியளிக்கிறதாமே..’’‘‘காரை மாவட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.  இங்கு பணியாற்றக்கூடிய அலுவலர்கள் காலை 10.30 மணிக்கு தான் அலுவலகத்திற்குள்ளே நுழைவார்களாம்… அதன் பின்னர் 10.45க்கு வெளியே டீ சாப்பிட செல்பவர்கள் மீண்டும் 11.30 மணிக்கு தான் உள்ளே வருவார்களாம்.. வேலை பார்க்கிறாங்களோ இல்லையோ ஊர் கதை பேசுவதற்கே நேரம் சரியாக இருக்குமாம்.. பின்னர் லஞ்ச் நேரம் வந்ததும் 12.10மணிக்கு எல்லாம் சாப்பிட  சென்று விடுகின்றனர். மதியத்திற்கு மேல் எந்த வேலையும் செய்வதில்லை.  இவர்களுக்கான மாத சம்பளம் 40 ஆயிரம் முதல் 80 ஆயிரம் வரை உள்ளது. இந்த  சம்பளம் பத்தவில்லை என்று சம்பள உயர்வு வேண்டி போராட்டம்  நடத்துகிறார்களாம்… குறைகளுக்காக அலுவலகத்திற்கு பொதுமக்கள் எப்போதும் வந்தாலும் காலியான நாற்காலிகளையே காண முடிகிறதாம்.. இதனால் காலையும் மாலையும்  நீண்ட கியூவில் காத்து கிடக்கும் நிலை ஏற்படுகிறது. ஆனால்… தீர்க்கப்பட வேண்டிய குறைகள் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமலே உள்ளது என மன உளைச்சலோடு மக்கள் திரும்புவது வாடிக்கையாக உள் ளதாம்’’ என்றார் விக்கியானந்தா….

The post குக்கர் கட்சி விசில் அடிக்காததால் நிர்வாகிகள் மாற்றுத்திட்டம் போட்டிருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : Cooker ,Yananda ,
× RELATED 6 பிரஷர் குக்கர் குண்டு பறிமுதல்