×

தமிழகத்தில் பழங்கள் உற்பத்தி பரப்பு 3.30 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: சட்டசபையில் நேற்று வேளாண் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது: தமிழ்நாடு மலர்களுக்கும், கனிகளுக்கும், காய்கறிகளுக்கும் புகழ்பெற்ற மாநிலம்.  எண்ணற்ற ரகங்கள் வாழையில் காணப்படுகின்றன. பழங்களின் அரசன் என்று கூறப்படும் மாம்பழம் தமிழ்நாட்டில் உற்பத்தியாவதுடன் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நம் தமிழ்நாட்டில் பத்துக்கும் மேற்பட்ட கீரை ரகங்கள் உள்ளன. அரைக்கீரை, சிறுகீரை, சிவப்புக்கீரை, தண்டுக்கீரை, பண்ணைக்கீரை, பசலை, புளிச்சகீரை,முருங்கை, அகத்தி, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி போன்ற இக்கீரைகள் மருத்துவ குணம் கொண்டவையாகவும் இருக்கின்றன. வெற்றிலை, பாக்கு, மிளகு, இஞ்சி, மஞ்சள் போன்ற தோட்டப் பயிர்களும் தமிழகத்திற்கு வளம் சேர்க்கின்றன. அனைத்து நிலங்களிலும் விளையக்கூடிய தோட்டக்கலைப் பயிர்களை, அதிகப் பரப்பில் சாகுபடி செய்து, உற்பத்தியைப் பெருக்கி, உழவர் நலன் பாதுகாத்திட இவ்வரசு, முனைப்புடன் செயல்படும். தேசிய அளவில் தமிழ்நாடு, பழங்கள் உற்பத்தியில் ஏழாவது இடத்திலும், பரப்பளவில் பதினொன்றாவது இடத்திலும் உள்ளது. தற்பொழுது, 3 லட்சத்து 13 ஆயிரம் ஹெக்டேராக உள்ள பழப்பயிர் சாகுபடி பரப்பு இவ்வாண்டில், 3 லட்சத்து 30 ஆயிரம் ஹெக்டேராக உயர்த்தப்படும். இதற்குத்  தேவையான 80 லட்சம் பல்வகை பழச்செடிகள், அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்படும். இத்திட்டம்  29 கோடியே 12 லட்சம் ரூபாய் செலவில் மாநில, ஒன்றிய அரசின் நிதியுடன்  செயல்படுத்தப்படும்….

The post தமிழகத்தில் பழங்கள் உற்பத்தி பரப்பு 3.30 லட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,M. R. K. Panneirselvam ,Minister ,Dinakaraan ,
× RELATED கழுகுகள் மரணத்துக்கு காரணமாக உள்ள...