×

கல்குவாரி லாரி மோதி தொழிலாளி பரிதாப பலி: போலீசாரை கண்டித்து மக்கள் சாலை மறியல்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அடுத்த பழையசீவரம் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (40). கூலி தொழிலாளி. இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு 14 வயதில் மகன் உள்ளான். அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறான். நேற்று முன்தினம் இரவு சசிகுமார் வாலாஜாபாத்திற்கு பைக்கில் சென்றார். பின்னர், வீட்டுக்கு புறப்பட்டார். சுமார் 9.30 மணியளவில் பழையசீவரம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, மதூர் கிராமத்தில் உள்ள கல்குவாரியில் இருந்து கருங்கல்  சக்கைகளை ஏற்றி கொண்டு வேகமாக சென்ற ஒரு லாரி, சசிகுமார் சென்ற பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர், படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். உடனே டிரைவர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு, தப்பி சென்றார்.இதையடுத்து போலீசாருக்கு, பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். ஆனால் போலீசார், வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மக்கள், சாலையோரம் இருந்த மரக்கிளைகளை உடைத்து சாலையின் குறுக்கே போட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைதொடர்ந்து சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, மேற்கண்ட பகுதியில் உள்ள கல்குவாரிகளால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து உயிர்பலி ஏற்படுகிறது. இதனை தடுக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும், போலீசாரும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கு உடனே தீர்வு காண வேண்டும். விபத்தில் பலியான சசிகுமார் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என கோஷமிட்டனர். அதற்கு போலீசார், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போலீசார், சாலையின் குறுக்கே கிடந்த மரக்கிளைகளை அகற்றி போக்குவரத்தை சீரமைத்தனர். பின்னர் சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடி லாரி டிரைவரை, வலைவீசி தேடி வருகின்றனர். * மின்சாரம் பாய்ந்து வாலிபர் சாவுஉத்தரப்பிரதேச மாநிலம், மிர்சாபூரை சேர்ந்தவர் அபிநய் (20). ஸ்ரீபெரும்புதூர் அருகே எருமையூரில் உள்ள தனியார் கிரஷர் தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட்டர் உதவியாளராக வேலை செய்தார். நேற்று முன்தினம் மெஷின் ஆபரேட்டர் கலியபெருமாள், உதவியாளர் பிரசாந்த், அபிநய் ஆகியோர் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது இயந்திரத்தின் கன்வேயர் பெல்ட் அருகில் உள்ள பள்ளத்தில் அபிநய் தவறி விழுந்தார். இதில், அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதை பார்த்ததும், சக ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து, அபிநயை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அபிநய் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். புகாரின்படி சோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்….

The post கல்குவாரி லாரி மோதி தொழிலாளி பரிதாப பலி: போலீசாரை கண்டித்து மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Kalquarie ,Uttaramerur ,Sasikumar ,Old Seevaram village ,Valli ,Calquary ,Dinakaran ,
× RELATED காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு ஓவிய பயிற்சி முகாம்