×

பெட்ரோல் விலை குறைப்பு, 100 நாள் வேலை கூலி உயர்வு உட்பட ஏழை, எளிய மக்களுக்கு ஏற்றம் தரும் பட்ஜெட்

மதுரை : தமிழக அரசின் முதல் இ-பட்ஜெட்டை நேற்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பெட்ரோல் விலை குறைப்பு, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் ஆய்வு, மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி, 100 நாள் வேலைத்திட்டத்தின் நாட்கள், கூலி உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகள், தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.பட்ஜெட் குறித்து மக்கள் குறித்து வருமாறு:பாதிக்காத பட்ஜெட்..விடுதலை வீரன், ஒத்தக்கடை: தமிழக பட்ஜெட் ஏழை எளிய மக்கள் பாதிக்காத வகையில், அவர்களை முன்நிறுத்தி தயார் செய்யப்பட்டிருப்பது சிறப்பாகும். குடும்ப தலைவிகளுக்கு ரூ.ஆயிரம் உதவித்தொகை துவங்கி பல்வேறு அறிவிப்புகளும் மகிழ்ச்சி நிறைக்கிறது.மதுரைக்கு ‘மெட்ரோ’..ராஜேஸ்வரி, கப்பலூர்: மகளிர் சுயஉதவிக்குழுவினர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடியில் கடன்உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மதுரை மாநகரின் நெரிசலை குறைக்க மெட்ரோ ரயில்திட்டம் அறிவிக்கப்பட்டு அதற்குரிய சாத்தியகூறுகளை ஆய்வு செய்வதாக பட்ஜெட்டில் நிதியமைச்சர் அறிவித்துள்ளது மதுரை மக்களாகிய எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.‘100’, 150 ஆனது…நாகஜோதி, கள்ளிக்குடி, ஓடைப்பட்டி: பெட்ரோல் விலையில் ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது நல்லது. புதிய கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. 100 நாள் வேலைதிட்டத்தினை 150 நாளாக உயர்த்தவும், ஊதியத்தை 300 ஆக உயர்த்தவும் ஒன்றிய அரசை வலியுறுத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளது கிராமப்புற பெண்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.கீழடியில் கண்காட்சி…வெங்கடசுப்ரமணியன், கீழடி ஊராட்சி மன்ற தலைவர் : கீழடியில் திறந்தவெளி கண்காட்சி என்பது வரவேற்கத்தக்கது. இதுவரை 7 வருடங்களாக அகழாய்வு நடத்தப்பட்டு வருகிறது. 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பொருட்களை வைத்து அகழ்வைப்பகம் கட்டி வருகின்ற நிலையில் கீழடியில் மேலும் திறந்தவெளி கண்காட்சி அமைப்பது வரவேற்கத்தக்கது.சலுகைகள் தாராளம்…சங்கரநாராயணன், தொழிலதிபர், தேனி : சிப்காட் தொடங்க அனுமதி, டீசல், பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 குறைப்பு, மகளிர் சுயஉதவிக்குழுக் கடன் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, மகளிருக்கு உரிமைத்தொகை அறிவிப்பு என பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ள தமிழக அரசின் பட்ஜெட் வரவேற்புக்குரியது.உயர்கல்வி வளர்ச்சியடையும்…பேராசிரியர் செல்லப்பாண்டியன், அருப்புக்கோட்டை : கடந்த பட்ஜெட்டை விட இந்த பட்ஜெட்டில் உயர்கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது உயர்கல்வியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவும். தற்போது தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. இதனைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் புதிதாக 10 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்க இருக்கும் அறிவிப்பு தமிழ்நாடு அரசின் தொலைநோக்குப் பார்வைக்கு சான்று. காவல்துறையில் 14,317 பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்ற அறிவிப்பு சிறப்பானது.மகளிருக்கு பல சலுகைகள்…தங்கேஸ்வரி, சிவகாசி : பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கதக்கது. குறிப்பாக சுயஉதவி குழுக்களுக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி, மகளிர் இலவச பஸ் பயணத்திற்கு மானியமாக 703 கோடி ரூபாய் ஒதுக்கீடு, குடும்பத் தலைவிகளுக்கு 1,000 ரூபாய் வழங்கும் திட்டம், மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு வழங்கப்பட்ட 2,756 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி போன்ற திட்டங்கள் பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெட்ரோல் விலை குறைப்பால் பொருட்கள் விலை குறையும்கார்த்திகேயன், விருதுநகர் அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் : பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பால், அனைத்து பொருட்கள் விலை உயர்வு கட்டுப்படும். ரேஷனில் தொடர்ந்து பருப்பு, எண்ணெய் விநியோகம் வரவேற்பிற்குரியது. ஏழை, எளிய 8 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும் என்றும், விளையாட்டு வசதியில்லாத தொகுதிகளில் விளையாட்டு திடல், விருதுநகரில் புதிய சிப்காட் தொழிற்பூங்கா என பல நல்ல அம்சங்களை உள்ளடக்கியது இந்த பட்ஜெட்.ஸ்மார்ட் வகுப்பு ‘ஸ்மார்ட்’…கலா பாண்டியன், கல்வியாளர், திண்டுக்கல் : இந்த பட்ஜெட்டில் அடிப்படை கல்வி அறிவு, கணித அறிவை உறுதி செய்ய உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், நடுநிலைப்பள்ளிகளில் கணிணி வகுப்பறைகள் அமைத்தல் என கல்வி வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. மேலும் அரசு பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர், ஆய்வகங்கள் தடையில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டத்தக்கது.பழநி மக்கள் பரவசம்…ஹரிஹரமுத்து, பழநி சித்த மருத்துவ சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர்: திமுக தனது தேர்தல் அறிக்கையில் பழநிக்கு சித்த மருத்துவ கல்லூரி அமைத்து தரப்படும் என கூறியிருந்தது. தற்போதைய பட்ஜெட்டில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரி அமைக்கப்படும் பட்சத்தில், தமிழகத்தில் சித்த மருத்துவத்தின் பயன் அதிகரிப்பதுடன், பழநி நகரமும் வளர்ச்சி அடையும். இது பழநி பகுதி மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி.கல்விக்கும்… கழனிக்கும்…சக்திஜோதி, சமூக ஆர்வலர், பட்டிவீரன்பட்டி : நீர்நிலைகளை சரிசெய்தல், குளங்களை சீரமைத்தல், பருவநிலை மாற்றங்களை கணித்து விவசாயத்தில் மாற்றம் கொண்டு வர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவிலேயே தமிழகம் விவசாயத்தில் தன்னிறைபெற்ற மாநிலமாக மாற வாய்ப்புள்ளது. இந்த பட்ஜெட்டில் பெண்கள், கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். மொழியும், நிலமும் சார்ந்த சிறப்பான பட்ஜெட்.டீசல் விலை குறையுமா…அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம் மாவட்ட தொழில் வர்த்தக சங்க தலைவர் : நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் மீதான வரியை லிட்டருக்கு ரூ.3 குறைக்கும் அரசின் முடிவை வரவேற்கிறோம். இதேபோல் டீசல் மீதான வரியையும் குறைத்தால் காய்கறி உள்ளிட்ட பொருட்களின் விலை கணிசமாக குறைய வாய்ப்புண்டு. லாரி வாடகை குறையும்.கொரோனாவிலும் தரமான திட்டங்கள் கோபாலகிருஷ்ணன், மதுரை: கொரோனா தொற்றுக்காலத்தில் தமிழகம் மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும்போது, இம்மாதிரி நவீனமான இ-பட்ஜெட் வெளியிட்டு, பல்வேறு நல்ல திட்டங்களையும் அறிவித்திருப்பது வரவேற்பிற்குரியது. வரும் காலத்தில் இதுபோன்ற நவீனத்துவத்தை ஒவ்வொரு திட்டத்திலும் நிறைவேற்றி, நலம் வழங்கிட வாழ்த்துகிறோம்….

The post பெட்ரோல் விலை குறைப்பு, 100 நாள் வேலை கூலி உயர்வு உட்பட ஏழை, எளிய மக்களுக்கு ஏற்றம் தரும் பட்ஜெட் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamil Nadu government ,Legislative Assembly ,Finance Minister ,BDR Palanivel Thiagarajan ,Dinakaran ,
× RELATED மதுரை எய்ம்சுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு