×

விமான நிலையம் – கத்திப்பாரா சந்திப்பு வரை சர்வதேச தரத்தில் அழகுப்படுத்தும் பணி: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகரை அழகுப்படுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை மெட்ரோ ரயில், மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குநர் பிரதீப் யாதவ்,சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி ஆகியோர் தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது. கூட்டத்தில், சென்னை மாநகராட்சியுடன் 42 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து மாநகர எல்லைகள் விரிவாக்கம் செய்யப்பட்டு 426 சதுர கி.மீ பரப்பாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள் உட்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் உட்கட்டமைப்புகளை நவீன தொழில்நுட்பத்துடன் சர்வதேச தரத்திற்கு உயர்த்திடும் வகையி,் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள மெட்ரோ ரயில் பாலங்கள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி பாலங்கள், சாலைகள் மற்றும் பூங்காக்கள் ஆகியவற்றை அழகுப்படுத்த பல்வேறு விதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.அதன்படி, விமான நிலையம் முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை, கோயம்பேடு மேம்பாலம், அண்ணா மேம்பாலம், மெரினா கடற்கரை, மெட்ரோ ரயில் நிலையத் தூண்கள், திருமங்கலம் மேம்பாலம் உட்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் சர்வதேச நகரங்களுக்கு இணையாக அழகுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்விடங்களில் வண்ண ஓவியங்கள் வரைதல், மரம், செடிகளை நட்டு பசுமையாக பராமரித்தல், வண்ண ஒளிரும் விளக்குகளால் அழகுப்படுத்துதல், முக்கியச் சந்திப்புகளில் செயற்கை நீரூற்றுகளை உருவாக்குதல் போன்ற பணிகளை மேற்கொள்ள சென்னை மெட்ரோ ரயில், மாநில நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி ஆகிய துறைகளுடன் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் வடிவமைக்கப்பட்ட மாதிரி திட்டங்களின் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. வருங்காலங்களில் மேற்குறிப்பிட்ட பணிகள் மேற்கொள்வது தொடர்பாக மூன்று துறைகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாதந்தோறும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இக்கூட்டத்தில் துணை ஆணையர்கள் பிரசாந்த், விஷூ மஹாஜன், சினேகா, சரண்யா அரி, தலைமைப் பொறியாளர்கள் ராஜேந்திரன் காளிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட வளாக முன்பகுதியில் மெட்ரோ ரயில்  நிறுவனத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் புனரமைப்பு மற்றும்  அழகுப்படுத்துதல் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்….

The post விமான நிலையம் – கத்திப்பாரா சந்திப்பு வரை சர்வதேச தரத்தில் அழகுப்படுத்தும் பணி: மாநகராட்சி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Kathippara ,Chennai ,Chennai Metro Rail ,State Highways Department ,
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...