×

2021-2022ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கை

சென்னை: தமிழக அரசின் 2021-2022ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) நாளை தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்கிறார். மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு தாக்கலாகும் முதல் நிதிநிலை அறிக்கை என்பதால் பொதுமக்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின், கடந்த மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்றுக் கொண்டார். முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும், தலைமை செயலகம் வந்து, கொரோனா நிவாரண நிதியாக சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரம், பெண்களுக்கு அரசு மாநகர பஸ்களில் இலவச பயணம், ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு உள்ளிட்ட 5 திட்டங்களை அறிவித்தார்.  இந்நிலையில், கடந்த ஜூன் 21ம் தேதி 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்றது. அன்றைய தினம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றினார். கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாள் பேரவை கூட்டம் நடைபெற்றது. கவர்னர் உரையில், தமிழக அரசின் பல திட்டங்கள் இடம் பெற்றிருந்தது. முக்கியமாக, விவசாயிகள் பயன்பெறும் வகையில், முதல் முறையாக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 4ம் தேதி சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், 2021-2022ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் 13ம் தேதி (நாளை) தமிழக சட்டமன்ற பேரவையில் தாக்கல் செய்வது குறித்து முடிவு செய்யப்பட்டது. அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் தமிழக சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் கூட்டம் வருகிற 13ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு சென்னை, வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெறும். அன்றைய தினம், 2021-2022ம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையினை பேரவைக்கு அளிக்க வேண்டும் என்று ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்’’ என்று கூறி இருந்தார்.அதன்படி, தமிழக சட்டப்பேரவை கூட்டம் நாளை காலை 10 மணிக்கு சென்னை, சேப்பாக்கம் வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது. அன்றைய தினம், நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 2021-2022ம் ஆண்டுக்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார். அடுத்த நாள், 14ம் தேதி வேளாண் பட்ஜெட்டை, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். முன்னதாக, தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து சபாநாயகர் மு.அப்பாவு தலைமையில் நேற்று முன்தினம் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அந்த கூட்டத்தில், ‘நாளை பட்ஜெட் உரையுடன் தொடங்கும் சட்டப்பேரவை கூட்டம் செப்டம்பர் மாதம் 21ம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெறும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது….

The post 2021-2022ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் நிதிநிலை அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,M.K.Stalin. ,Chennai ,Tamil Nadu government ,Legislative Assembly ,Finance Minister ,BDR Palanivel ,Dinakaran ,
× RELATED தமிழக அரசின் சீரிய திட்டமான இலவச...