×

இமாச்சல் மலைப்பாதையில் பயங்கர நிலச்சரிவு; அரசு பேருந்து, காரில் சென்ற 50 பேர் உயிருடன் புதைந்தனர்: 11 சடலங்கள் மீட்பு

சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் அரசு பேருந்து, கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சிக்கின. இவற்றில் பயணம் செய்த 50 பேர் பாறைகள் மற்றும் மண் குவியலில் புதைந்தனர். இதுவரை 11 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசம், கின்னோர் மாவட்ட மலைப்பகுதியில் நேற்று அரசுக்கு சொந்தமான பேருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. அதேபோல், அந்த பாதையில் கார்கள் உள்ளிட்ட வாகனங்களும் வரிசையாக சென்று கொண்டிருந்தன. அப்போது, வளைவில் திடீரென பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. ஏராளமான பெரிய பாறைகளும், மண்ணும் சரிந்து விழுந்தன. அதில், அரசு பேருந்தும், கார் உள்ளிட்ட இதர வாகனங்களும் சிக்கின. வாகனங்கள் மீது பாறைகளும் மண்ணும் சரிந்ததால் வாகனங்களில் இருந்தவர்கள் உயிருடன் புதைந்தனர். பேருந்தில் மட்டுமே 40 பேர் வரை பயணம் செய்ததாக தெரிகிறது. நிலச்சரிவில் வாகனங்கள் சிக்கியதால் அந்த வழியாக போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் உள்ளூர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தொடர்ந்து, மலையில் இருந்து பாறைகள் விழுந்தபடி இருந்ததால் மீட்பு பணிகளில் தாமதம் நிலவியது.  பின்னர், நிலச்சரிவில் சிக்கிய வாகனங்களில் இருந்தவர்களை மீட்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. நேற்று மாலை வரை 11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும், 50 பேர் வரை பேருந்து மற்றும் கார்களில் சிக்கியிருக்கலாம் அல்லது புதைந்து இருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்களை மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகிறது. இந்தோ-திபெத் படை வீரர்கள் 200 பேர் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் பிரதமர் மோடி, மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். நிலச்சரிவு காரணமாக நிலவும் சூழல் குறித்து விசாரித்தார். மீட்பு நடவடிக்கைகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு செய்து தரும் என்று உறுதியளித்தார். இதேபோல், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் நிலச்சரிவால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முதல்வரிடம் கேட்டறிந்தார். பாறைகள், மண்ணில் ஏராளமானோர் புதைந்து பல மணி நேரமாகி விட்டதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது….

The post இமாச்சல் மலைப்பாதையில் பயங்கர நிலச்சரிவு; அரசு பேருந்து, காரில் சென்ற 50 பேர் உயிருடன் புதைந்தனர்: 11 சடலங்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : himachal hillside ,Shimla ,Himachal Pradesh ,Dinakaran ,
× RELATED நடிகை கங்கனாவுக்கு எதிராக முன்னாள்...