×

கடமலை- மயிலை ஒன்றியத்தில் தடையில்லா மும்முனை மின்சாரம் கிடைக்குமா?

*பயிர்கள் கருகுவதாக விவசாயிகள் புகார்வருசநாடு : கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பளவில் தென்னை, முருங்கை, கரும்பு, வாழை, அவரை உள்ளிட்ட விவசாயம்  நடைபெற்று வருகிறது. பெரும்பாலான விவசாயிகள் தோட்டத்தில் கிணறு அமைத்து அதிலிருந்து மின்மோட்டார் மூலம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இதற்காக மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கடமலைக்குண்டு, குமணன்தொழு, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் நாள் ஒன்றுக்கு 3 மணி நேரம் வரை மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இந்த 3 மணி நேர மும்முனை மின்சாரமும் குறிப்பிட்ட நேரத்திற்கு தொடர்ந்து வழங்கப்படுவதில்லை. இதனால் விவசாயிகள் 3 மணி நேரம் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக நாள் முழுவதும் தோட்டங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் மழையளவு குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் மும்முனை மின்சாரம் கிடைக்காததால் முழுமையாக தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் வெயிலில் கருகுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களில் குமணன்தொழு, கடமலைக்குண்டு உள்ளிட்ட கிராமங்களில் தண்ணீர் பாய்ச்ச முடியாத காரணத்தால் ஏராளமான ஏக்கர் நிலப்பரப்பளவில் வெங்காயம், கத்தரி உள்ளிட்ட செடிகள் வெயிலில் கருகியது. இது தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், “பற்றாக்குறை காரணமாக மும்முனை மின்சாரம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டாலும் தற்போது வழங்கப்படுகின்ற 3 மணிநேர மின்சாரத்திற்கு முறையான நேர வரையறை செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் விவசாயிகள் மின்சாரம் உள்ள நேரங்களில் தோட்டங்களுக்கு சென்று பயிர்களுக்கு முழுமையாக நீர் பாய்ச்ச முடியும். ஏனெனில் கிராமங்களில் மலையடிவாரங்களில் அமைந்துள்ள தோட்டங்களில் இரவு நேரங்களில் கரடி உள்ளிட்ட ஆபத்தான வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் தோட்டங்களில் தனியாக உள்ள விவசாயிகளுக்கு வன விலங்குகளால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. மேலும் மின்சாரம் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் தோட்டங்களில் உள்ள மின் மோட்டார்கள் பழுதடைந்து விடுகிறது. எனவே,  மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தடையில்லாமல் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும்’’ என தெரிவித்தனர்….

The post கடமலை- மயிலை ஒன்றியத்தில் தடையில்லா மும்முனை மின்சாரம் கிடைக்குமா? appeared first on Dinakaran.

Tags : kamalai- manilai ,union ,Kamalai- Manilai Union ,Dinakaran ,
× RELATED மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பிய...