×

சென்னைக்கு கடத்த முயற்சி ரூ. 2 லட்சம் குட்காவுடன் லாரி பறிமுதல்: 2 டிரைவர்கள் கைது

வேலூர்: வாகனங்கள், போலீஸ் தடுப்புகளை எல்லாம் இடித்து தள்ளிவிட்டு குட்காவுடன் தப்பிய லாரியை பள்ளிகொண்டாவில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதுதொடர்பாக 2 டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். பெங்களூருவில் இருந்து 2 லாரிகள், 2கார்களில் சென்னைக்கு குட்கா, பான்பராக் பொருட்கள் கடத்தப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீசாருக்கு நேற்று இரவு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், மாவட்ட எல்லையான நெக்குந்தியில் போலீசார் தடுப்புகளை வைத்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அதிகாலை சுமார் 1.30 மணியளவில் வந்த ஒரு லாரியும், ஒரு காரும் போலீசார் கை காட்டி நிறுத்தியும் நிற்காமல் போலீஸ் தடுப்புகளை இடித்து தள்ளிவிட்டு ஆம்பூர் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வேகமாக சென்றன. 2வாகனங்களும் டோல் பிளாசாவிலும் நிற்காமல் சென்றது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் விரட்டிச் சென்றனர்.ஆனால் எதற்கும் அசராத லாரி மற்றும் கார் ஓட்டுனர்கள், ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கண்ணில் பட்ட வாகனங்களை எல்லாம் ஆங்கில படங்களை மிஞ்சும் வகையில் இடித்து தள்ளிவிட்டு சென்றனர். ஆனாலும், பள்ளிகொண்டா டோல் பிளாசா அருகே பள்ளிகொண்டா போலீசார் வலுவான தடுப்புகளை அமைத்து அந்த வாகனங்களை மடக்கினர். ஆனால் லாரி மட்டும் போலீசார் பிடியில் சிக்கியது. இந்த லாரியை சோதனையிட்டபோது அதில் ₹2 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்பராக், ஹான்ஸ் என தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது.இதையடுத்து லாரியையும், லாரி டிரைவர்கள் பெங்களூரு லால்பாக் பகுதியை சேர்ந்த ஆர்.முனியன்(35), ஏ.சந்திரசேகர்(41) ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், தங்களுக்கு இங்கு வந்து லாரியை எடுத்து சென்னைக்கு கொண்டு செல்லும்படியும், அங்கு நீங்கள் போன் மூலம் தொடர்பு கொள்ளும் நபர், ஆட்களுடன் குறிப்பிட்ட இடத்தில் சரக்கை பெற்று செல்வார்கள் என்றும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவர்களிடம் இருந்த மொபைல் போனில் பதிவாகியிருந்த தொலைபேசி எண்களை வைத்து குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் பள்ளிகொண்டா போலீசார் இறங்கியுள்ளனர். மேலும் பள்ளிகொண்டாவில் இருந்து தப்பிச் சென்ற காரை தேடி வருகின்றனர்….

The post சென்னைக்கு கடத்த முயற்சி ரூ. 2 லட்சம் குட்காவுடன் லாரி பறிமுதல்: 2 டிரைவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rs ,Vellore ,Pallykonda ,Dinakaran ,
× RELATED இளம் தொழிலதிபரை காரில் கடத்தி ரூ.50...