×

அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது கோயில் நிலங்கள், கட்டிடங்களை ஆக்கிரமித்தால் 5 ஆண்டுகள் சிறை: ஆணையரிடம் இருந்து செயல் அலுவலர்கள், தக்கார், ஆய்வர்களுக்கு அதிகார பகிர்வு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமாக லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மற்றும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன. இந்த நிலங்களில் பெரும்பாலானவை குத்தகை, வாடகைக்கு விடாமல் அப்படியே போடப்பட்டிருந்தது. இதை பயன்படுத்திக்கொண்டு சமூக விரோதிகள் ஆக்கிரமித்து இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர்களது பெயருக்கு பட்டா மாற்றம் செய்து கோயில் நிலங்களை பயன்படுத்தி வருவதாக தெரிகிறது. இந்நிலையில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பை கண்டறிய சென்னை உயர் நீதிமன்றம் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், கோயில் செயல் அலுவலர்கள், ஓய்வு பெற்ற வருவாய் அலுவலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். இந்த குழு சார்பில் கோயில் நிலத்தை சட்ட விரோதமாக நிலக்கிரயம் செய்யப்பட்டிருக்கும் இனங்கள், மூன்றாம் நபர் அனுபவத்தில் உள்ள இனங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக, அறநிலையத்துறைக்கு இக்குழுக்கள் சார்பில் அறிக்கை அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பேரில், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களை நிலங்களை மீட்கவும், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றம் செய்யவும் நடவடிக்கை எடுக்கவும் ஆணையர் குமரகுருபரன் அனைத்து கோயில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், ஒரு சிலர் வீட்டை காலி செய்யாமல் அதிகாரிகளை மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. அந்த மாதிரியான நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்து அறநிலையத்துறை சட்டம் 79 பி (3)ன் கீழ் ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. கடந்த மாதம் ஆணையர் குமரகுருபரன் தலைமையில் நடந்த கூட்டத்தில் செயல் அலுவலர்கள் தங்களது கருத்தை தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அறநிலையத்துறை உயர்அதிகாரிகள் சட்ட வல்லுனர்களின் கருத்து கேட்டுள்ளனர். இது தொடர்பாக அரசிடம் பரிந்துரை செய்து இருப்பதாக தெரிகிறது. இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இதைதொடர்ந்து, கோயில் செயல் அலுவலர்/தக்கார்/ ஆய்வர் ஆகியோருக்கு அதிகாரப்பகிர்வு வழங்கப்படுகிறது. இவர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைக்கு புகார் மனு அளிக்க முடியும். இந்த புகார் மூலம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்க முடியும் என்று அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இந்து அறநிலையத்துறை சட்டம் 79 பி (3)ன் கீழ் ஆக்கிரமிப்பாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதற்கு ஆணையருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது….

The post அறநிலையத்துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது கோயில் நிலங்கள், கட்டிடங்களை ஆக்கிரமித்தால் 5 ஆண்டுகள் சிறை: ஆணையரிடம் இருந்து செயல் அலுவலர்கள், தக்கார், ஆய்வர்களுக்கு அதிகார பகிர்வு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Hindu Religious Endowment Department ,
× RELATED கோயில் தொடர்பான பொதுநல வழக்கு...