×

குறித்த நேரத்தில் இயக்கப்படாததை கண்டித்து பயணிகள் ரயில் மறியல் போராட்டம்: 4 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் வாபஸ்

சென்னை: கும்மிடிப்பூண்டி – சென்னை மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் ரயில் சேவையை தினசரி பல்லாயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். சமீப காலமாக இந்த மார்க்கத்தில் ரயில்கள் குறித்த நேரத்தில் இயக்கப்படாததால் கல்வி, வேலை, மருத்துவமனைகளுக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுபற்றி ரயில்வே நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆத்திரமடைந்த பயணிகள் நேற்று காலை 8 மணிக்கு, பொன்னேரி ரயில் நிலையத்தில், கும்மிடிப்பூண்டி – வேளச்சேரி புறநகர் ரயிலை மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதனால், அவ்வழியே ரயில் சேவை பாதிக்கப்பட்டு புறநகர் ரயில்கள், விரைவு ரயில்கள், சரக்கு ரயில்கள் என ஒன்றன்பின் ஒன்றாக அங்காங்கே நிறுத்தப்பட்டன. தகவலறிந்து பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ரயில்கள் தாமதமாக வருவதால் 1 மணி  நேரத்தில் பயணம் செய்ய வேண்டிய இடத்திற்கு 2மணி நேரம் பயணிக்க வேண்டிய  சூழல் ஏற்படுவதாகவும், குறித்த நேரத்தில் ரயில்கள் இயக்கவும் ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும், என பயணிகள் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார். ஆனால், சென்னை கோட்ட ரயில்வே மேலாளர் நேரில் வந்து உத்தரவாதம் அளிக்க வேண்டும், என பயணிகள் போராட்டத்தை தொடர்ந்தனர்.  இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னை கோட்ட ரயில்வே கூடுதல் மேலாளர் சச்சின் புனிதா, உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தார்.  4 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.  பயணிகளின் போராட்டம் காரணமாக புதுடெல்லி, அகமதாபாத்  உள்ளிட்ட பல்வேறு விரைவு ரயில்கள் கால தாமதமாக சென்றன….

The post குறித்த நேரத்தில் இயக்கப்படாததை கண்டித்து பயணிகள் ரயில் மறியல் போராட்டம்: 4 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின் வாபஸ் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...