×

குமரியில் நாளை சிவாலய ஓட்டம் தொடக்கம்: 11ம் தேதி சிவராத்திரி விழா

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலய ஓட்டம் நாளை தொடங்குகிறது. இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான சிவராத்திரி விழா நாளை மறுதினம் (11ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் சிவாலயங்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். சிவராத்திரியையொட்டி பக்தர்கள் விடிய, விடிய கண்விழித்து, சிவாலயங்களில் தரிசனம் செய்வார்கள்.சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களையும் பக்தர்கள் ஓடியே சென்று தரிசனம் செய்வது வரலாற்று நிகழ்வாகும். சிவாலய ஒட்டமானது முஞ்சிறை அருகே உள்ள திருமலை மகாதேவர் கோயிலில் இருந்து நாளை (10ம்தேதி) மதியம் தொடங்கும். காவி உடை உடுத்தி, கையில் விசறி, இடுப்பில் திருநீற்று பையுடன் பக்தர்கள் கோபாலா, கோவிந்தா என்று அழைத்தவாறு ஓடி செல்வர். அங்கிருந்து திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனைக்கு நாளை நள்ளிரவில் வந்து சேர்வர். பின்னர் நாளை மறுதினம் அதிகாலையில் பன்றிபாகத்திலிருந்து பயணம் தொடங்கும் இவர்கள் கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றியோடு கோயில்களில் வழிபட்டு விட்டு இரவில் திருநட்டாலம் சிவன் மற்றும் விஷ்ணு ஒன்றாக காட்சியளிக்கும் சங்கர நாராயணர் கோயிலில் ஓட்டத்தை நிறைவு செய்வார்கள். சுமார் 110 கி.மீ. ஓடி, ஆலயங்களில் தரிசனம் செய்வார்கள். இதே போல் நாளை மறுதினம் காலையில் இருந்து கார், பைக்குகளிலும் பக்தர்கள் 12 சிவாலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்வார்கள். சிவாலய ஓட்டத்தில் வரும் பக்தர்களுக்கு வழி நெடுகிலும், குளிர்பானங்கள், இளநீர், வாழைப்பழம் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் வழங்குவார்கள். 12 சிவாலயங்களிலும் மின் விளக்கு வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சிவராத்திரியையொட்டி 11ம்தேதி குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை ஆகும்.வரலாறு : ஹரியும், சிவனும் ஒன்று என்பதை விளக்கும் வகையில் சிவாலய ஓட்டம் நடைபெறுகிறது. மனித தலையும், புலி உடலும் கொண்ட புருஷா மிருகம், சிவன் மீது அன்பு நிறைந்தது. சிவனைத் தவிர வேறு இறைவனை ஏற்க மாட்ேடன் என புருஷா மிருகம் பிடிவாதமாக  இருந்தது. ஹரியும், ஹரனும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்த பகவான் கிருஷ்ணன் விரும்பினார். பீமனிடம் 12 ருத்ராட்சங்களை கொடுத்து கோவிந்த நாமத்தை உச்சரித்தபடி சென்று புருஷா மிருகத்திடம் பால் கேட்குமாறும், கோவிந்த நாமத்தை கேட்டதும் புருஷா மிருகம் தாக்க வரும், அப்போது ஒவ்வொரு ருத்ராட்சமாக கீழே போடு, அது லிங்கமாக மாறும். சிவ பக்தரான புருஷா மிருகம் அதை வழிபாடு செய்து தான் அங்கிருந்து விலகும். இவ்வாறு 11 ருத்ராட்சம் முடிந்து 12வது ருத்ராட்சம் விழும் இடத்தில் நானும் சிவனும் இணைந்து காட்சியளிப்போம், என்று கூறினார். பீமனும் அவ்வாறே செய்தான். ருத்ராட்சம் விழுந்த இடங்களில் சிவாலயங்கள் உருவாகின. கடைசி ருத்ராட்சம் விழுந்த இடமான திருநட்டாலத்தில் ஹரியும் ஹரனும் இணைந்த சங்கர நாராயணராக மகாவிஷ்ணு காட்சி தந்து, சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என உணர்த்தினார். சிவனும், விஷ்ணுவும் ஒன்று. அகந்தை கூடாது என்பதை உணர்த்தும் விதத்தில் இந்த சிவாலய ஓட்டம் நடக்கிறது. …

The post குமரியில் நாளை சிவாலய ஓட்டம் தொடக்கம்: 11ம் தேதி சிவராத்திரி விழா appeared first on Dinakaran.

Tags : Shivalaya run ,Kumari: Shivratri festival ,Nagercoil ,Kumari ,Shivratri ,Hindus ,Dinakaran ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...