×

மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் நீதிபதிகளுக்கு மிரட்டல்.. சிபிஐயோ, போலீஸோ கூட உதவுவதில்லை : தலைமை நீதிபதி வேதனை!!

டெல்லி: மத்திய புலனாய்வு அமைப்போ, உளவுப் பிரிவோ நீதிபதிகளுக்கு உதவுவதில்லை என உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் நகரில் மாவட்ட மற்றும் கூடுதல் நீதிபதியாக இருந்தவர் உத்தம் ஆனந்த். கடந்த வாரம் காலை 5 மணியளவில் நடை பயிற்சி சென்ற போது, ஆட்டோ ஏற்றி கொல்லப்பட்டார். ஆனால், அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்தில் இறந்தார் என்று போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதற்கிடையில், திட்டமிட்டு நீதிபதி மீது ஆட்டோ ஏற்றி கொலை செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த நிலையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு, ஜார்க்கண்ட் நீதிபதி கொலை விவகாரத்தை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது. மேலும், நீதிபதி கொலை குறித்து ஒரு வாரத்துக்குள் முழு அறிக்கை சமர்ப்பிக்க ஜார்க்கண்ட் மாநில தலைமை செயலருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து வழக்கு இன்று தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் விசாரணைக்கு வந்த போது ஆஜரான ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், ‘நீதிபதிகளுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டும்.தாக்குதல்களில் இருந்து நீதிபதிகள் பாதுகாக்கப்பட வேண்டும்.தாக்குதலுக்கு உள்ளான நீதிபதிகளின் பட்டியல் என்னிடம் உள்ளது,’என்றார்.இதை கேட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, மத்தியப் புலனாய்வு அமைப்போ, உளவுப் பிரிவோ நீதிபதிகளுக்கு உதவுவதில்லை என்று காட்டமாக தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது, ‘நீதிபதிகள் பலமுறை உளவியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். சமூக விரோதிகள், தாதாக்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் போது நீதிபதிகள் மிரட்டப்படுகின்றனர்.சமூகத்தில் பிரபலமானவர்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் போதும் நீதிபதிகள் மிரட்டப்படுகின்றனர். மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் நீதிபதிகள் மிரட்டப்படுகின்றனர்.வாட்ஸ் அப் தகவல் மூலமும் குறுஞ்செய்திகள் மூலமும் கூட நீதிபதிகளுக்கு மிரட்டல்கள் வருகின்றன. ஒருவருக்கு பாதகமான தீர்ப்புகளை வழங்கும் போது, நீதிபதிகள் பற்றி அவதூறு பரப்பும் போக்கு உருவாகியுள்ளது. தங்கள் மிரட்டப்படுவது குறித்து சிபிஐயிடமோ, போலீசிலோ புகார் அளித்தாலும் அவர்கள் நடவடிக்கை எடுப்பதில்லை.சிபிஐயின் அணுகுமுறையில் எந்த மாற்றமும் இல்லை. நீதித்துறைக்கு எந்த விதமான உதவியும் கிடைப்பதில்லை,’என்றார்.மேலும் நீதிபதி உத்தம் ஆனந்த் மரணம் குறித்த விசாரணை அறிக்கையை ஒரு வாரத்திற்குள் தாக்கல் செய்ய ஜார்கண்ட் அரசு தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. …

The post மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் நீதிபதிகளுக்கு மிரட்டல்.. சிபிஐயோ, போலீஸோ கூட உதவுவதில்லை : தலைமை நீதிபதி வேதனை!! appeared first on Dinakaran.

Tags : CBI ,Chief Justice ,Anguish ,Delhi ,Supreme Court ,Central Intelligence Agency ,Intelligence Unit ,Jharkhand ,
× RELATED PET-CT ஸ்கேன் எடுக்க வேண்டியுள்ளதால்...