×

உருமாறிய வைரசுக்கு 2 புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு: உலகெங்கும் இந்தாண்டு 200 கோடி ‘டோஸ்’ சப்ளை..! கொரோனா காலத்தில் சூப்பராக ‘கல்லா’ கட்டும் சீனா

பீஜிங்: உலகெங்கும் உள்ள நாடுகளுக்கு இந்தாண்டு 200 கோடி தடுப்பூசிகளை சப்ளை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.  சீனாவின் வூஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ், கடந்த 2 ஆண்டாக உலகையே புரட்டி போட்டுள்ளது. இந்த விசயத்தில் பல முன்னணி நாடுகளும் தடுப்பூசி தயாரித்து மக்களுக்கு போட்டு வந்தாலும், உருமாறிய வைரஸ் தொற்றுகள் வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கை விடப்படுகின்றன. இந்நிலையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘இந்தாண்டில் 2 பில்லியன் (200 கோடி) டோஸ் கொரோனா தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு சப்ளை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும், உலகளாவிய தடுப்பூசி விநியோகத் திட்டம் (கோவாக்ஸ் ) என்ற சர்வதேச அமைப்பிடம், 100 மில்லியன் டாலர் (ரூ. 741 கோடி) நன்கொடை  வழங்கவுள்ளோம்.  உலகம் முழுவதும் 770 மில்லியனுக்கும் (77 கோடி) அதிகமான தடுப்பூசி மருந்துகளை மற்ற நாடுகளுக்கு சீனா வழங்கியுள்ளது’ என்றார். சீனத் தடுப்பூசி சப்ளையர்களில் ஒன்றான ‘சினோவாக்’ பயோடெக் (SVA.O) நிறுவனம் தடுப்பூசி உற்பத்திக்காக 20 நாடுகளுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. அதன் உற்பத்தியானது 90 கோடி டோசாக இருக்கும் என்று அதன் தலைமை நிர்வாகி யின் வீடாங் கூறியுள்ளார். மேலும், உள்நாட்டு தேவைக்கான உற்பத்தி போக, இந்தோனேசியா, பிரேசில், துருக்கி, மலேசியா, எகிப்து ஆகிய நாடுகளில் உள்ள சினோவாக் நிறுவனத்தின் கூட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பூசி உற்பத்தி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அதேநேரம், உலகளாவிய உருமாறிய டெல்டா, காமா வைரஸ்களின் வீரியத்தை கட்டுப்படுத்தும்விதமாக, மாற்றியமைக்கப்பட்ட இரண்டு புதிய தடுப்பூசியை ‘சினோவாக்’ நிறுவனம் தயாரித்து வருவதாக கூறியுள்ளது. உருமாறிய கொரோனாவுக்கு பூஸ்டர் தடுப்பூசி தயாரித்து, அதனை சில நாடுகள் மக்களுக்கு போட்டு வரும் நிலையில், சீனாவும் அதற்கான வேலையில் இறங்கியுள்ளது. மேலும், புதிய தடுப்பூசி பிஸினசையும் தீவிரப்படுத்தி உள்ளது. சீனாவில் இருந்து கொரோனா பரவியதாக சர்ச்சைகள் நீடிக்கும் நிலையில், அதற்கான தடுப்பூசி உற்பத்தி செய்து அதன் மூலம் வருவாய் ஈட்டுவதிலும் அந்நாடு தீவிரமாக செயல்பட்டு வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்….

The post உருமாறிய வைரசுக்கு 2 புதிய தடுப்பூசி கண்டுபிடிப்பு: உலகெங்கும் இந்தாண்டு 200 கோடி ‘டோஸ்’ சப்ளை..! கொரோனா காலத்தில் சூப்பராக ‘கல்லா’ கட்டும் சீனா appeared first on Dinakaran.

Tags : India ,China ,Corona ,Beijing ,President ,Dinakaran ,
× RELATED இந்தியா வருவதை தவிர்த்த எலான் மஸ்க் திடீர் சீன பயணம்