×

சென்னையில் 4 கோயில்கள் உட்பட 47 கோயில்களில் ஏற்பாடு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நாளை முதல் அன்னை தமிழில் அர்ச்சனை

* அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்கிறார் * 3 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் அனுமதிசென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நாளை முதல் அன்னை தமிழில் அர்ச்சனை செய்யும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. இதை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 47 பெரிய கோயில்களில் இத்திட்டம் 7 நாட்களுக்குள் செயல்படுத்தப்படுகிறது என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் 44 ஆயிரம் கோயில்கள் உள்ளன. இதில், அதிக வருமானம் வரும் 539 முக்கிய கோயில்கள் அடக்கம்.கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் முருகன்,அம்மன், சிவன் கோயில்களில் 3நாட் களுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மீண்டும் பக்தர்கள் கோயில்களுக்கு அனுமதிக்கப்ட்டனர்.இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கோயில்களில் அன்னை தமிழ் மொழியில் அர்ச்சனை நடத்த வேண்டும் என்பது பக்தர்கள் விருப்பமாக இருந்தது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதையேற்று தமிழகத்தில் முதற்கட்டமாக 47 கோயில்களில் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருந்தார். அதன்படி, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அன்னை தமிழில் அர்ச்சனை செய்ய உள்ள விவரம் குறித்த பதாகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுமுன்தினம் வெளியிட்டார். அதில் குருக்களின் பெயர்களும், அலைபேசி எண்களும் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நாளை கபாலீஸ்வரர் கோயிலில் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்படவுள்ளது. இதில், 8 அடி நீளத்தில், 4 அடி அகலத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்படுகிறது. தொடர்ந்து பொதுமக்கள் அறியும் வகையில் நீண்ட திரையில் டிஜிட்டல் பலகை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. அன்னை தமிழில் அர்ச்சனை திட்டம் முதற்கட்டமாக சென்னையில் வடபழனி ஆண்டவர் கோயில், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில், திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி கோயில் உட்பட 4 கோயில்கள் என மாநிலம் முழுவதும் 47 பெரிய கோயில்களில் 7 நாட்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு தனது டிவிட்டர் பக்கத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அன்னை தமிழில் அர்ச்சனை திட்டத்தின் அறிவிப்பு பலகையை வெளியிட்டார். இதை தொடர்ந்து வரும் 6ம் தேதி (நாளை) கபாலீஸ்வரர் கோயிலில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு, முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட 47 கோயில்களில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு அர்ச்சகர்கள் பெயர், தொலைபேசி எண் பக்தர்களுக்கு தெரிவிக்கப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை திட்டத்தை செயல்படுத்துவதற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.* ‘கோயில் இடங்களில் கல்லூரிகள்’சென்னை எழும்பூரில் உள்ள சீனிவாச பெருமாள் கோயிலின் வளர்ச்சி பணிகள் குறித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். அமைச்சர் கணேசன், எம்எல்ஏ பரந்தாமன், ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் பேட்டியளிக்கையில், ‘‘அறநிலையத்துறையின் மூலம் கல்லூரிகள் கட்ட முதல்வர் ஆலோசனை வழங்கியுள்ளார். சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 50 கிரவுண்ட் இடத்தில் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கல்லூரி அமைக்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான இடங்களில் கல்வி நிலையங்கள் கட்ட அறநிலையத் துறை திட்டமிட்டுள்ளது. அறநிலையத் துறையின் மூலமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 1,2,3 என்கிற தர அடிப்படையில் கல்லூரிகளை கட்ட திட்டமிட்டு உள்ளோம்’’ என்றார்….

The post சென்னையில் 4 கோயில்கள் உட்பட 47 கோயில்களில் ஏற்பாடு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நாளை முதல் அன்னை தமிழில் அர்ச்சனை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mylapur Kapaleeswarar temple ,Minister ,Shekharbabu ,Mylapore Kabaleeswarar temple ,Mylapore Kabaleeswarar ,temple ,
× RELATED மருத்துவமனையில் சிகிச்சை பெற்று...