×

கர்நாடகாவில் ஜார்கிஹோளியை தொடர்ந்து அடுத்த பரபரப்பு ஆபாச வீடியோவில் மேலும் 6 அமைச்சர்கள்? அவசர அவசரமாக தடை உத்தரவு பெற்றதால் அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடகாவில் பாஜ அரசு நடக்கிறது. இதன் முதல்வராக எடியூரப்பா பதவியேற்ற நாள் முதல், பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். பிற கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சரவையில் 50 சதவீத்திற்கு மேல் இடம் வழங்கியுள்ளது மூலமாக, சொந்த கட்சி மூத்த எம்எல்ஏ.க்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ளார். பெலகாவி மாவட்டத்தில் பலமான தலைவர்களில் ஒருவராக இருப்பதுடன், மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்து, எடியூரப்பா தலைமையில் பாஜ ஆட்சி அமைய காரணமாக இருந்தவர் ரமேஷ் ஜார்கிஹோளி. இவர், ஓட்டலில் இளம்பெண் ஒருவருடன் உல்லாசமாக இருக்கும் வீடியோ கடந்த 2ம் தேதி சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதையடுத்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், பல்லாரி மாவட்டத்தை சேர்ந்த ராஜசேகர் முலாலி என்பவர் அமைச்சர்கள் உள்பட 19 பேரின் பாலியல் லீலைகள் தொடர்பான வீடியோக்கள்  தன்னிடம் உள்ளதாகவும், அதை விரைவில் வெளியிடப் போவதாகவும் சமீபத்தில் அறிவித்தார். அவர்கள் யார் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் மக்கள் உள்ள நிலையில், ஆபாச வீடியோ விவரங்களை கொடுக்கும்படி முலாலிக்கு பெங்களூரு கப்பன்பூங்கா போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால், பயந்து போன பாஜ அமைச்சர்கள் சிவராம் ஹெப்பார், எஸ்.டி.சோமசேகர், டாக்டர் கே.சுதாகர், பி.சி.பாட்டீல், பைரதி பசவராஜ் மற்றும் கே.ஆர்.நாராயண கவுடா ஆகிய 6 பேர், அவசர அவசரமாக, பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், தாங்கள் தொடர்புடைய வீடியோவை வெளியிடுவதற்கு ஊடகங்கள், சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கும்படி கோரினர். அதை ஏற்ற நீதிபதி விஜயகுமார், வரும் 30ம் தேதி வரை வீடியோவை வெளியிட தடை விதித்துள்ளார்.ஏற்கனவே அமைச்சர் பதவியை ரமேஷ் ஜார்கிஹோளி இழந்துள்ள நிலையில், மேலும் 6 அமைச்சர்கள் இப்படி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த 7 பேருமே காங்கிரஸ், மஜத கட்சிகளில் இருந்து விலகி, பாஜ.வில் இணைந்தவர்கள். இவர்களுக்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் கொடுத்துள்ளதால் ஏற்கனவே முதல்வர் எடியூரப்பா மீது கடும் அதிருப்தியில் இருக்கும் மூத்த பாஜ எம்எல்ஏ.க்கள், இப்பிரச்னையை அஸ்திரமாக கையில் எடுத்து போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.ரமேஷ் ஜார்கிஹோளியின் செயலால் கடும் அதிருப்தியில் இருக்கும் பாஜ தலைமைக்கு, தற்போது மேலும் 6 அமைச்சர்கள் நீதிமன்றத்தை நாடியது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘மடியில் கனமில்லை என்றால், அமைச்சர்கள் ஏன் பயப்பட வேண்டும்,’ என்று எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, ஆளும் கட்சி தலைவர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏற்கனவே பல நெருக்கடிகளை சந்தித்து வரும் எடியூரப்பா, இதை எப்படி சமாளிப்பார் என்பது தெரியவில்லை. சட்டப்பேரவை பட்ஜெட் தொடர் இன்று கூடும் நிலையில், இந்த ஆபாச வீடியோ விவகாரத்தை எதிர்க்கட்சிக் கிளப்பி பெரும் அமளியில் ஈடுபடும் என கருதப்படுவதால் கர்நாடகா அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.* நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல்‘ஆபாச வீடியோவில் உள்ளதாக கூறப்படும் அமைச்சர்கள் அனைவரும், மோக வலை வீசப்பட்டு சிக்க வைக்கப்பட்டார்களா? என விசாரிக்கப்படும்,’ என மாநில உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இதற்கிடையில், அமைச்சர்கள் மீதான ஆபாச வீடியோ  புகாரை கிண்டலடிக்கும் வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் புகைப்படத்தை போட்டு, ‘இது பிஜேபி அல்ல.. புளு ஜேபி,’ என்று குறிப்பிட்டுள்ளார்.* புகார் திடீர் வாபஸ்இளம்பெண்ணுடன் உல்லாசமாக இருந்த ரமேஷ் ஜார்கிஹோளி, அமைச்சர் பதவியை இழப்பதற்கு காரணமாக இருந்தவர் சமூக ஆர்வலர் தினேஷ் கல்லஹள்ளி. இவர்தான், இளம்பெண் சார்பில் போலீசில் புகார் அளித்தார். கமிஷனர் கமல்பந்த் உத்தரவின் பேரில், கப்பன்பார்க் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து இதை விசாரித்து வருகின்றரன். இந்நிலையில், தனது புகாரை வாபஸ் பெறுவதாக போலீசாரிடம் தினேஷ் கல்லஹள்ளி நேற்று திடீரென மனு அளித்துள்ளார். இது, பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மஜத தலைவர் குமாரசாமி கூறுகையில், ‘தினேஷ் கல்லஹள்ளி எதற்காக புகார் அளித்தார். தற்போது எதற்காக வாபஸ் பெற்றார் என்பது மர்மமாக உள்ளது,’’ என்றார்….

The post கர்நாடகாவில் ஜார்கிஹோளியை தொடர்ந்து அடுத்த பரபரப்பு ஆபாச வீடியோவில் மேலும் 6 அமைச்சர்கள்? அவசர அவசரமாக தடை உத்தரவு பெற்றதால் அதிர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Jhargiholi ,Karnataka ,Bangalore ,Baja Govt ,Etuarapa ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவில் 30 ஆண்டுகளுக்கு முன்னாள்...