×

பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு ஓபிஎஸ், இபிஎஸ் நேரில் ஆஜராக சம்மன்: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக செய்தி தொடர்பாளராக இருந்த பெங்களூரு புகழேந்தியை கட்சியில் இருந்து நீக்கி ஓபிஎஸ், இ.பி.எஸ், கூட்டறிக்கை வெளியிட்டனர். அதில், அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்சி கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் அதிமுக செய்தி தொடர்பாளர், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் புகழேந்தியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்குவதாக கூறியிருந்தனர். தன்னை நீக்கிய உத்தரவில் தன்னை பற்றிய கருத்துகள் தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க கோரி, புகழேந்தி சென்னை எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, டிடிவி.தினகரன் அணியில் தான் இணைந்ததால் கட்சியில் இருந்து என்னை நீக்கினர். மீண்டும் கடந்த 2020 ஏப்ரலில் அதிமுகவில் இணைத்து கொண்டேன். அதன் பிறகு தேர்தல் பணி உள்ளிட்ட கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த ஜூன் 16ம் தேதி திடீரென கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி, கட்சியில் இருந்து நீக்கி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பளார் இ.பி.எஸ் உத்தரவிட்டனர். என்னிடம் எந்த விசாரணையும் நடத்தாமல், எந்தவொரு காரணமும் இல்லாமல் கட்சியில் இருந்து என்னை நீக்கியதன் மூலம் எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியது, மற்றும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது. எனவே பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை கிரிமினல் அவதூறு சட்டப்பிரிவின்படி தண்டிக்க வேண்டும்’ என்று மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு சென்னையில் உள்ள எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரும் 24ம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்….

The post பெங்களூரு புகழேந்தி தொடர்ந்த அவதூறு வழக்கு ஓபிஎஸ், இபிஎஸ் நேரில் ஆஜராக சம்மன்: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : OPS ,EPS ,Bengaluru ,Pugazhendi ,Chennai ,AIADMK ,Panneerselvam ,Edappadi Palaniswami ,
× RELATED நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்தேன்