×

புதிய சர்ச்சை

டெல்லி புதிய போலீஸ் கமிஷனராக குஜராத் கேடர் ஐபிஎஸ் அதிகாரி ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டு இருப்பது  அரசியல் அரங்கில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. 1984ம் ஆண்டு  ஐபிஎஸ் அதிகாரியான அஸ்தானா எல்லை பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரலாக  இருந்தார். ஜூலை 31ம் தேதியுடன் அவர் ஓய்வு பெற வேண்டும். ஆனால் ஜூலை 27ம் தேதி டெல்லி புதிய போலீஸ் கமிஷனராக திடீரென நியமிக்கப்பட்ட அவர் 28ம் தேதி உடனடியாக பதவி ஏற்றுக்கொள்கிறார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது. போலீஸ் மறுசீரமைப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2018ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி வழங்கிய தீர்ப்பில், ‘குறைந்தபட்சம் 2 ஆண்டுகளாவது பணியில்  இருக்கும் வகையில் உள்ள நபரை டிஜிபியாக தேர்வு செய்ய வேண்டும் என்று உத்தரவு வழங்கியிருந்தது.ஆனால் ஓய்வு பெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்பு திடீரென டெல்லி புதிய காவல்துறை தலைவராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதும், மக்கள்  நலன் கருதி அவருக்கு மேலும் ஒரு ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கியதாக ஒன்றிய  உள்துறை அறிவிப்பு வெளியிட்டதும் சர்ச்சைக்கு வித்திட்டது. கோத்ரா வழக்கு, புருலியா ஆயுத கொள்முதல் வழக்குகளை விசாரித்தவர். 2014ல் பா.ஜ ஆட்சி மத்தியில் அமைந்த போது குஜராத் மாநிலத்தில் இருந்து சிபிஐ சிறப்பு இயக்குனராக  அஸ்தானா மாற்றப்பட்டார். சிபிஐ இயக்குனராக இருந்த அலோக் வர்மா இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மோதல் வெடித்தது. லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியதால்  அஸ்தானா மட்டுமல்லாமல் அலோக்வர்மாவும் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.  2018  ஆம் ஆண்டில்  சிபிஐயிலிருந்து  நீக்கப்பட்டு 2019 ஜனவரியில் சிவில் ஏவியேஷன்  செக்யூரிட்டி  டைரக்டர்  ஜெனரலாக நியமிக்கப்பட்டார். அதன்பின் இரண்டு லஞ்ச வழக்குகளில்  இருந்து சிபிஐ அவரை விடுவித்தது. அதன்பிறகு தான் எல்லை பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரலாக  நியமிக்கப்பட்டு விட்டு தற்போது டெல்லி போலீஸ் கமிஷனராக  நியமிக்கப்பட்டுள்ளார். 2  மாதங்களுக்கு முன்பாக  சிபிஐ இயக்குநர் பதவிக்கான தேர்வு பட்டியலில் அஸ்தானாவும் இருந்தார். பிரதமர் மோடி  தலைமையிலான தேர்வுக்குழு கடந்த மே  மாதம் கூடி சிபிஐ புதிய இயக்குநரை  தேர்வு செய்ய ஆலோசித்தபோது,சிபிஐ  தலைமை பொறுப்புக்கு பரிசீலிக்கப்படும்  நபரின் பணிகாலம் குறைந்தது 6 மாத காலம் இருக்க வேண்டியது அவசியம் என்கிற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை தலைமை நீதிபதி எஸ்.வி.ரமணா சுட்டிக்காட்டியதால் பட்டியலில் இருந்து அஸ்தானா பெயர் நீக்கப்பட்டது.  அப்படிப்பட்டவருக்கு எப்படி டெல்லி போலீஸ் கமிஷனர் பதவி வழங்கலாம் என்பது  எதிர்க்கட்சிகள் வாதம். அதே தகுதி குறைபாடு இப்போதும் இல்லையா என்பது  அவர்களின் கேள்வி. சிபிஐ இயக்குனர் பதவிக்கு அஸ்தானா தகுதி இல்லை என்று  யார் சுட்டிக்காட்டினாரோ அவர் முன்பு இப்போது வழக்கு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. அப்போது தான் தெரியும் அஸ்தானாவுக்கு அங்கீகாரம் கிடைக்குமா அல்லது நியமனம் அஸ்தமனம் ஆகுமா என்று!…

The post புதிய சர்ச்சை appeared first on Dinakaran.

Tags : Gujarat ,Rakesh Asthana ,Delhi ,
× RELATED அப்பாவி உயிர்கள் போன பிறகு செயல்படும்...