×

சென்னிமலை அருகே மீண்டும் அகழ்வாராய்ச்சி கல்மணிகள், இரும்பு கரண்டி பழங்கால பொருள் கண்டுபிடிப்பு

சென்னிமலை: சென்னிமலை அருகே கொடுமணல் பகுதியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் மீண்டும் அகழாய்வு பணி தொடங்கியது. ஆரம்ப நிலையிலேயே கல்மணிகள் உள்ளிட்ட பல்வேறு பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன.ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடுமணல் கிராமத்தில், தமிழக தொல்லியல் துறை சார்பில் அதன் திட்ட இயக்குநர் ஜெ.ரஞ்சித் தலைமையில் தொல்லியல் பொறுப்பாளர் டாக்டர் கே.சுரேஷ், ஆய்வு மாணவர் பி.அருண்குமார் ஆகியோர் மேற்பார்வையில் 9வது அகழாய்வு பணி மீண்டும் துவங்கி நடந்து வருகிறது. இதில், ஆரம்ப கட்ட ஆய்விலும் பழங்கால பொருட்கள் கிடைத்துள்ளன. இது குறித்து திட்ட இயக்குநர் ஜெ.ரஞ்சித் கூறியதாவது:கடந்த மாதம் 26ம் தேதி முதல் கொடுமணல் அருகே நொய்யல் ஆற்று பகுதியில் அகழாய்வு பணியை தொடங்கி உள்ளோம். தற்போது, 2 இடங்களில் 10 மீட்டர் நீளம் மற்றும் 10 மீட்டர் அகலத்தில் குழிகள் தோண்டி அகழாய்வு செய்த போது 30 செ.மீ. ஆழத்திலேயே பல வகையான கல்மணிகள், அதற்கான மூல பொருட்கள், கண்ணாடி மற்றும் சங்கு வளையல்கள், இரும்பை உருக்கும் உருக்கிகள், மண் பானைகள் செய்யும் போது அதனை வடிவமைப்பதற்கு தேவையான பொருட்கள் மற்றும் கால்வாய் இருந்ததற்கான அடையாளம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மேலும், சுமார் 12 செ.மீ. நீளத்தில் இரும்பினால் ஆன கரண்டி போன்ற பொருள் ஒன்றும் கிடைத்துள்ளது. 30 செ.மீ. ஆழத்திலேயே பழங்கால பொருட்கள் கிடைத்து வருவதால் மிக கவனமாக ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதுவரை நடந்த ஆய்வுகளில் தொழிற்கூடங்கள் மற்றும் கல்லறைகள் ஆகியவை தனியாருக்கு சொந்தமான நிலங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. தற்போதைய அகழாய்வு பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நொய்யல் ஆற்றங்கரையின் வடகரை பகுதியில் நடைபெறுகிறது. தொடர்ந்து, நடைபெறும் ஆய்வில் பழங்கால பொருட்கள் அதிக அளவில் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வரும் செப்டம்பர் வரை இந்த அகழாய்வு பணி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார். …

The post சென்னிமலை அருகே மீண்டும் அகழ்வாராய்ச்சி கல்மணிகள், இரும்பு கரண்டி பழங்கால பொருள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennimalai ,Kodumanal ,Tamil Nadu Archeology Department ,
× RELATED போலீஸ் குடியிருப்பு பகுதியில் தீ விபத்து