×

‘குரைக்கத் தொடங்கிவிட்டார்கள்’: கங்கனாவை விளாசிய பிரகாஷ்ராஜ்

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் மீதான விமர்சனத்திற்கு நடிகர் பிரகாஷ்ராஜ் கங்கனா ரனாவத்தை கடுமையாக சாடியுள்ளார். சமீபத்தில், பாஜக எம்பியான நடிகை கங்கனா ரனாவத், பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். தனது அரசியல் நிலைப்பாடு காரணமாக ‘எமர்ஜென்சி’ படத்திற்காகத் தன்னைச் சந்திக்கக் கூட ஏ.ஆர்.ரஹ்மான் மறுத்துவிட்டதாகவும், அவர் பாரபட்சமானவர் என்றும் கங்கனா கூறியிருந்தார்.

முன்னதாக, இந்தி திரையுலகில் ஒரு குறிப்பிட்ட மதவாதக் குழு இயங்குவதாகவும், அதனால் தனக்கு வாய்ப்புகள் குறைவதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் வேதனை தெரிவித்திருந்தார். ஆனால், கங்கனா அவரை தேசவிரோதி என்பது போலச் சித்தரித்து பேசியது பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், கேரள இலக்கிய விழாவில் பங்கேற்ற பிரகாஷ்ராஜ், இந்த விவகாரம் குறித்து மிகக் கடுமையாகப் பேசியுள்ளார்.

அப்போது அவர் கூறுகையில், ‘இரண்டு முறை ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற இசைக் கலைஞர், வேலைக்காக யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. உண்மையைச் சொன்னதற்காக ஏ.ஆர்.ரஹ்மானை நோக்கி சிலர் (கங்கனா) குரைக்கத் தொடங்கிவிட்டார்கள். ‘எமர்ஜென்சி’ போன்ற பிரசார படத்தில் பணியாற்ற மறுத்ததாலேயே ஏ.ஆர்.ரஹ்மானை வன்மத்துடன் அணுகுவது ஏற்புடையதல்ல’ என்று பிரகாஷ்ராஜ் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.

Tags : Prakash Raj ,Kangana ,Chennai ,Kangana Ranaut ,A.R. Rahman ,BJP ,
× RELATED செல்லமடா நீ எனக்கு விமர்சனம்…