×

தண்டராம்பட்டு அடுத்த தா.வேளூர் கிராமத்தில் எஜமானருக்காக உயிர்விட்ட நாயின் நினைவாக அமைக்கப்பட்ட நடுகல் கண்டெடுப்பு: ஆயிரம் ஆண்டுகள் பழமையானது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா, தானிப்பாடி அடுத்த தா.வேளூர் கிராமத்தில், திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த தாசில்தார் ச.பாலமுருகன், மதன்மோகன், தர், பழனிச்சாமி, ராஜா ஆகியோர் ஆய்வு நடத்தினர். அப்போது, மண்ணுக்கடியில் இரண்டு துண்டுகளாக உடைந்து புதைந்து கிடந்த நாய் நடுகல் கண்டெடுத்துள்ளனர். இந்த அரியவகையான நடுகல் குறித்து, வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தெரிவித்ததாவது: மனிதர்களுக்கும், விலங்குகளுக்குமான உறவு மனித பரிணாம வளர்ச்சியின் தொடக்க நிலையிலிருந்தே உள்ளது. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தையும் கடந்து, வரலாற்று காலத்திலும் இதை உறுதிப்படுத்த ஏராளமான இலக்கிய சான்றுகளும், வரலாற்றுச் சான்றுகளும் தமிழகத்தில் கிடைத்துள்ளன.தா,வேளூரில் கண்டெத்த நடுகல், சுமார் 5 அடி உயரம் 4 அடி அகலத்தில் உள்ளது. பன்றியின் வாயை நாய் கவ்வியவாறு இந்த கற்சிற்பம் அமைந்துள்ளது. இந்த நடுகல்லில் கல்வெட்டு ஏதும் இல்லை. நடுகல்லில் செதுக்கப்பட்டுள்ள நாய்,  தன் எஜமானருடன் வேட்டைக்கு செல்லும்போது காட்டு பன்றியுடன் சண்டையிட்டு, பன்றியுடன் தானும் இறந்திருக்கலாம் என தெரிகிறது. எனவே, அதன் நினைவாக அந்த நாயின் எஜமானரால் இந்த நடுகல் எடுக்கபட்டிருக்கலாம். இந்த நடுகல் சிற்பத்தின் அமைப்புகளின்படி, சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கும் என கல்வெட்டு ஆய்வாளர்கள் உறுதிபடுத்தியுள்ளனர். மேலும், இந்த ஊருக்கு அருகில் உள்ள எடத்தனூரில், 7ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லிலும், கோவிவன் என்ற நாய் போரில் எதிரியிடம் சண்டையிட்டு மாண்டு போனதை குறிப்பிடும் நடுகல் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.எனவே, இந்த பகுதி மக்கள் வளர்ப்பு பிராணிகளுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பது உறுதியாகிறது. தமிழகத்திலும் கர்நாடகாவிலும் இதுபோன்ற வளர்ப்பு பிராணிகளுக்கு எடுக்கப்பட்ட நடுகற்கள் சிறப்பு வாய்ந்தவையாக போற்றப்படுகிறது. இதுவரை வெளியில் தெரியாத நிலையில் இருந்த இந்த நடுகல், தமிழக நடுகல் வரலாற்றில் முக்கிய கண்டுபிடிப்பாகும்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்….

The post தண்டராம்பட்டு அடுத்த தா.வேளூர் கிராமத்தில் எஜமானருக்காக உயிர்விட்ட நாயின் நினைவாக அமைக்கப்பட்ட நடுகல் கண்டெடுப்பு: ஆயிரம் ஆண்டுகள் பழமையானது appeared first on Dinakaran.

Tags : Vellore village ,Thandarampatu ,Tiruvannamalai ,Thiruvannamalai District Thandarampatu Taluk ,Tanipadi ,Tha.Velur Village ,Thiruvannamalai District Historical Survey Center ,Tha.Veloor Village ,
× RELATED தண்டராம்பட்டு அருகே விபத்தில்...