×

கன்னிவாடி பேரூராட்சியில் கோயிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை

சின்னாளபட்டி: கன்னிவாடி பேரூராட்சியில் சோமலிங்கேஸ்வரர் கோயிலுக்கு ெசல்லும் தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் கன்னிவாடி பேரூராட்சிக்குட்பட்ட 11ம் வார்டில் மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் சோமலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. கோவிலுக்குச் செல்லும் தார்ச்சாலை கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில் பராமரிக்கப்படவில்லை. இதனால் தார்ச்சாலை சேதமடைந்ததுடன், அதிகளவில் ஆக்கிரமிப்புகளும் உள்ளன. இந்நிலையில் பக்தர்களின் கோரிக்கைகளையேற்று கடந்தாண்டு டிச.9ல் கன்னிவாடி பேரூராட்சி சார்பில் நபார்டு திட்டம் மூலம் 1.5 கிமீ தூரத்திற்கு தார்ச்சாலை அமைக்க  ரூ.65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. சாலை அமைப்பதற்கு முன்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, விரிவுபடுத்த பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் வருவாய்த்துறை மற்றும் நில அளவைத்துறையிடம் மனுக்கள் வழங்கப்பட்டன. ஆனால் வருவாய்த்துறையினர் மற்றும் நில அளவைத்துறையினர் இதனை கண்டுகொள்ளாததால் இதுவரை தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. இதனால் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து பலமுறை திண்டுக்கல் மேற்கு தாலுகா தாசில்தாரிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் அதிருப்தியடைந்த பக்தர்கள் மற்றும் அப்பகுதிமக்கள் கன்னிவாடியில் உள்ள வருவாய்த்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர். இது குறித்து கன்னிவாடி பேரூர் கழக திமுக செயலாளர் சண்முகம் கூறுகையில், ‘‘தார்ச்சாலை அமைக்க வருவாய்த்துறை அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. நில அளவையர்களும் வருவதில்லை. இதனால் சோமலிங்கேஸ்வரர் கோயிலுக்கு செல்லும் பாதையில் தார்ச்சாலை அமைக்க முடியவில்லை. திண்டுக்கல் மேற்கு தாசில்தார் தகுந்த நடவடிக்கை எடுத்து நில அளவையர்களை உடனடியாக அனுப்பி ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும்’’ என்றார்….

The post கன்னிவாடி பேரூராட்சியில் கோயிலுக்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kanniwadi Perrasi ,Chinnanapatti ,Tarsal ,Somalingeswarar ,Kanniwadi Perutism ,Dindukal District ,Kanniwadi Perusie ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி 3வது மண்டலத்தில்...