×

தொழுவூர் ஊராட்சியில் பள்ளி வளாக பகுதியில் ஆபத்தாக உள்ள மின்மாற்றி: அகற்றகோரி கலெக்டரிடம் மனு

திருவள்ளூர்: தொழுவூர் ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளி வளாகத்தில் ஆபத்தாக உள்ள மின்மாற்றியை உடனே அகற்றக்கோரி அப்பள்ளியின் ஆசிரியர்கள் சார்பில் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீசிடம் கோரிக்கை மனு அளித்தனர்.  கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸிடம் திருவள்ளூர் ஒன்றியம் தொழுவூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதன் விவரம் வருமாறு: திருவள்ளூர் ஒன்றியம் தொழுவூர் ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளி 1932ம் ஆண்டு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் பழமையான பள்ளியாகும். தற்போது குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளி வளாகத்திற்கு உட்பட்ட பகுதியில் மின்சார வாரியத்துறையினர் புதியதாக மின்மாற்றியை அமைத்துள்ளனர். இந்த மின்மாற்றி மாணவர்களின் கழிவறை மற்றும் பள்ளி சத்துணவு சமையல் அறையின் பக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புதியதாக அமைக்கப்பட்டுள்ள மின்மாற்றியால் மாணவர்களின் பாதுகாப்பிற்கு கேள்விக்குறியாக உள்ளது. இதை அமைக்கும் போதே தலைமையாசிரியரும், அனைத்து ஆசிரியர்களும் ஊராட்சி மன்ற தலைவர், மின்சார வாரிய இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோரிடம் பள்ளி வளாக பகுதியில் புதிய மின் மாற்றியை அமைப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பலமுறை புகார் கொடுத்துள்ளோம். ஆனால் எதையும் பொருட்படுத்தாமல் தற்பொழுது பள்ளி வளாக பகுதியில் மின்சார வாரியத் துறையினர் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மின்மாற்றியை அமைத்துள்ளனர்.இதனால் மழைக்காலங்களிலும், காற்று வேகமாக வீசும்போதும், சத்துணவு சமைக்கும்போதும், மாணவர்கள் கழிவறையை பயன்படுத்தும்போதும் மாலை நேரங்களில் பள்ளி வளாகத்தினுள் மாணவர்கள் விளையாடும் போதும் மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் அச்சமும், பயமும் உள்ளது. எனவே தாங்கள் தயவு கூர்ந்து இப்பிரச்னை குறித்து விசாரணை நடத்தி மின்மாற்றியை பள்ளி வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தி மாணவர்களின் உயிருக்கும், பாதுகாப்புக்கும் உத்தரவாதம் அளித்து யாருக்கும் இடையூறு இல்லாமல் மின்மாற்றியை அமைத்துத் தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்….

The post தொழுவூர் ஊராட்சியில் பள்ளி வளாக பகுதியில் ஆபத்தாக உள்ள மின்மாற்றி: அகற்றகோரி கலெக்டரிடம் மனு appeared first on Dinakaran.

Tags : Neuvur ,Thiruvallur ,Chowuvur Puradasi ,
× RELATED கலெக்டரின் உத்தரவு காற்றில்...