×

குற்றங்களுக்கு தண்டனை வாங்கி தரும் துறையாக இல்லாமல் குற்றங்கள் நடக்காமல் தடுக்கிற துறையாக காவல்துறை மாறவேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

* பயிற்சி முடிந்த 86 துணை கண்காணிப்பாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.சென்னை: குற்றங்களுக்கு தண்டனை வாங்கித் தரும் துறையாக இல்லாமல், குற்றங்கள் நடக்காமல் தடுக்கிற துறையாக காவல்துறை மாறவேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காவல் துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக அரசு தேர்வாணையம் மூலம் வெற்றி பெற்று டிஎஸ்பிக்களாக 40 பெண்கள் உட்பட 86 பேர் தேர்வாகினர். அவர்களுக்கு பணி குறித்த பயிற்சி சென்னை அடுத்த ஊனமாஞ்சேரியில் உள்ள தமிழநாடு காவல் துறை பயிற்சி பள்ளியில் அளிக்கப்பட்டது. தேர்வான 86 டிஎஸ்பிக்கள் ஓராண்டு பயிற்சி முடித்தனர். அவர்களுக்கான பயிற்சி நிறைவு விழா மற்றும் சிறப்பாக பயிற்சி முடித்தவர்களுக்கு பதக்கம் வழங்கும் விழா நேற்று ஊனமாஞ்சேரியில் உள்ள காவல் துறையின் பயிற்சி மைதானத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு போலீசார் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் முதல்வர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதைதொடர்ந்து பயிற்சி முடிந்த 86 டிஎஸ்பிக்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினர். ஓராண்டு பயிற்சியின்போது வெற்றி பெற்ற டிஎஸ்பிக்களுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார். ரூ.10.28 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள ஒருங்கிணைந்த சைபர் பயிற்சி வளாகக் கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி சைலேந்திரபாபு, பயிற்சி டிஜிபி பிரதீப் வி.பிலிப் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சியில் பேசியதாவது: புதிதாகக் காவல் களத்தில் இறங்கி உள்ள துணைக் கண்காணிப்பாளர்கள் அனைவருக்கும் முன்னுதாரணமாகச் சொல்லத்தக்க மனிதராக உங்கள் காவல்துறை தலைமை இயக்குநரே இருக்கிறார். 1987ம் ஆண்டு கோபிச்செட்டிபாளையத்தில் உதவிக் கண்காணிப்பாளராகப் பணிக்குச் சேர்ந்த சைலேந்திர பாபு இன்று தமிழ்நாட்டின் காவல்துறையின் தலைமைப் பொறுப்புக்கு வளர்ந்துள்ளார் என்றால் அதற்கு அவருடைய உழைப்பும் முயற்சிகளும் மிக மிக முக்கியமானதாக அமைந்திருக்கிறது. சட்டம் ஒழுங்கு சிறப்பாக அமைந்தால் தான் தொழில் சிறக்கும். முதலீடுகள் பெருகும். கல்வி மேன்மை அடையும். வேலைவாய்ப்புகள் பெருகும். அத்தகைய அமைதியை உருவாக்கும் பணியை நீங்கள் செய்கிறீர்கள். குற்றங்களுக்கு தண்டனை வாங்கித் தரும் துறையாக இல்லாமல், குற்றங்கள் நடக்காமல் தடுக்கின்ற துறையாக காவல்துறை மாறவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. கொலை, ஆதாயக் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, பாலியல் வன்முறைகள் ஆகியவை தான் மிகப்பெரிய குற்றங்களாக அடையாளம் காட்டப்பட்டன. ஆனால் இவை அனைத்தையும் விஞ்சியதாக சைபர் குற்றங்கள் பெருகிவிட்டன. அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் சைபர் குற்றங்களைத் தடுப்பதற்கான மிக நவீன வழிமுறைகளைப் பின்பற்றி வருகின்றன. அத்தகைய நவீன வழிமுறைகளை நாம் முழுமையாக அறியவேண்டும்.2030க்குள் சைபர் குற்றங்கள் நடக்காத நாடாக மாற்றிக் காட்டப் போகிறோம் என்று ஐக்கிய அரபு நாடுகள் அறிவித்துள்ளது. எத்தகைய தொழில் நுட்பத்தை அவர்கள் உருவாக்கப் போகிறார்கள் என்பதைத் தமிழ்நாடு காவல்துறை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு நமது காவல்துறை நவீனமயமாக வேண்டும். காவல்துறையை நவீனமயமாக்கியதில் திமுக அரசுக்கு மிக முக்கியமான பங்கு உண்டு. 1971ம் ஆண்டு காவல்துறையில் கம்ப்யூட்டர் பிரிவு தொடங்கப்பட்டது. காவல்துறையில் கம்ப்யூட்டர் மயமாக்கல் தொடங்கிய முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடுதான் பெற்றது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.* காவல்துறையை நவீனப்படுத்திய கலைஞர்தமிழ்நாட்டில் முதன்முதலாக பெண் காவலர்களை நியமித்தவர் கலைஞர். பெண் துணை ஆய்வாளர்களையும் நியமித்தார்.போலீஸ் பயிற்சிப் பள்ளியைத் திறந்து வைத்தவர் கலைஞர். விரைவு அதிரடிப்படையை உருவாக்கியதும் கலைஞர் தான். காவல்துறையை நவீனப்படுத்துவதற்காக 1969ம் ஆண்டு ஆர்.ஏ.கோபாலசாமி தலைமையில் போலீஸ் கமிஷன் அமைத்ததும் – முன்னாள் தலைமைச் செயலாளர் சபாநாயகம் தலைமையில் 1989ம் ஆண்டு போலீஸ் ஆணையம் அமைத்ததும் கலைஞர்தான். 2006ல் பூர்ணலிங்கம் ஐ.ஏ.எஸ் தலைமையில் மூன்றாம் போலீஸ் கமிஷன் அமைத்தவரும் கலைஞர் தான். இன்றைக்கு வீரதீரச் செயல்கள் புரியும் காவலர்களுக்கு அண்ணா பெயரால் விருது வழங்குவதைத் தொடங்கி வைத்ததும் கலைஞர்தான்.ஆட்சியில் இருக்கும்போது மட்டுமல்ல, திமுக ஆட்சியை பிடிப்பதற்கு முன்பும் கலைஞர் ‘உதயசூரியன்’ என்கிற நாடகத்தை எழுதினார். அது அன்றைய காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்டது. காவல்துறையைச் சேர்ந்த நண்பர்களின் துயரங்களைத்தான் அந்த நாடகத்தில் எழுதினார். எனவே, அவற்றை நாங்கள் தெளிவாக உணர்ந்துள்ளோம். காவல் துறையைச் சேர்ந்தவர்களது விருப்பங்கள், கோரிக்கைகள் அனைத்தையும் விரைவில் நிறைவேற்றித் தருவோம் என்ற உறுதிமொழியை இந்த விழாவில் அளிக்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்….

The post குற்றங்களுக்கு தண்டனை வாங்கி தரும் துறையாக இல்லாமல் குற்றங்கள் நடக்காமல் தடுக்கிற துறையாக காவல்துறை மாறவேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stal ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...