×

கடையநல்லூரில் தொடரும் ஜீவகாருண்யம் இரைக்காக கூட்டம் கூட்டமாக இல்லம் தேடி வரும் சிட்டுக்குருவிகள்

கடையநல்லூர் :  கடையநல்லூர் கொழும்பு தெருவை சேர்ந்தவர் காஜாமைதீன். இவரது மனைவி நூர்ஜகான். புளியங்குடியை பூர்வீகமாகக் கொண்ட இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் கடையநல்லூரில் குடியேறினர். இவர்களது வீட்டிற்கு தற்செயலாக வந்த இரு சிட்டுக்குருவிகளுக்கு சாதம் மற்றும் தண்ணீரில் நனையவைத்த அரிசியை உணவாக அளித்தனர். படிப்படியாக சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் நாள்தோறும் காலை, மதியம் மற்றும் மாலை வேளைகளில் உணவிற்காக காஜா மைதீன் வீட்டை தேடி வருகின்றன. சிட்டுக்குருவிகள் மட்டுமின்றி அணில்கள், மைனா உள்ளிட்டவையும் உணவுக்காக தினமும் வருகை தருகின்றது. அழிந்து வரும் இனமாக கருதப்பட்ட சிட்டுக்குருவிகள் ஒரே இடத்தில் இத்தனை எண்ணிக்கையில் வருகை தருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து காஜாமைதீன் கூறுகையில் ‘‘புளியங்குடியில் இருந்து கடையநல்லூருக்கு வந்து தனியாக இருந்த போது தற்செயலாக வருகைதந்த இரு சிட்டுக் குருவிகளை  உபசரித்து உணவளித்தோம். காலப்போக்கில் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்தது. கிட்டத்தட்ட 3 ஆண்டுகளில் 200க்கும் மேற்பட்ட சிட்டுக்குருவிகள் தினமும் இரை தேடி எங்கள் வீட்டிற்கு வருகை தருகின்றன. தினை அரிசி மட்டுமே விரும்பி உண்ணும் என்று நினைத்த நிலையில் சோறு, தண்ணீரில் நனைய வைத்த அரிசி உள்ளிட்டவற்றை விரும்பி உண்ணுவது மகிழ்ச்சி தருகிறது. அணில்களும், மைனாவும் கூட வருகை தருகின்றன. தற்போது சிட்டுக்குருவிகளை காக்க நாளொன்றுக்கு சில நூறு ரூபாய்களை ஒதுக்கி செலவு செய்கிறேன். பின்அவற்றுக்கு உணவளிப்பது எனக்கு ஒரு சுமையாக தெரியவில்லை. நான் ஊறுகாய் வியாபாரம் மற்றும் எனது மனைவி ஒயர் கட்டில் முடைந்து தயார் செய்து தருவார். அதனையும் வியாபாரம் செய்ததில் இருந்து மாதம் 13 முதல் 15 ஆயிரம் போய் வரை வருவாய் ஈட்டுகின்றேன். ரூ.5 ஆயிரம் வரை குருவிகளுக்காக செலவு செய்கிறேன். இதில் எனக்கு ஒரு மனநிறைவு ஏற்படுகிறது. கடையநல்லூர் தவிர்த்து வேறு எந்த ஊருக்கும் நன்மை தீமை உள்ளிட்ட காரியங்களுக்கு செல்ல இயலவில்லை. ஒரு நாள் சென்று விட்டாலும் நூற்றுக்கணக்கான குருவிகள் ஏமாற்றம் அடைந்து விடும் என்ற எண்ணம் மேலோங்கியதால் வெளியூர் பயணங்களை தவிர்த்து விடுகின்றேன். தற்போது அருகில் உள்ள சில வீடுகளிலும் இதே போன்ற உணவளிக்கும் முறையை பின்பற்றுகின்றனர். அதுவும் வரவேற்கத்தக்க செயல்தான். அழிந்து வருவதாக கூறப்படும் ஒரு பறவை இனத்தை பராமரிக்கும் உணர்வுக்கு ஈடு இணையாக எதுவுமே இல்லை. சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க வனத்துறையும் அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிட்டுக்குருவிகள் மொத்தமாக வருகை தருவதை பார்ப்பதற்கும் பறவை இன ஆர்வலர்கள் பலரும் வருகை தருகின்றனர். மழைக்காலத்தில் தேங்கியிருக்கும் சிறிதளவு நீரில் சிட்டுக்குருவிகள் சந்தோசமாக குளித்து மகிழும் காட்சிகள் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும்’’ என்றார்….

The post கடையநல்லூரில் தொடரும் ஜீவகாருண்யம் இரைக்காக கூட்டம் கூட்டமாக இல்லம் தேடி வரும் சிட்டுக்குருவிகள் appeared first on Dinakaran.

Tags : Kadayanallur ,Kajamaydeen ,Colombo Street, Kadayanallur ,Noorja Khan ,Puliyangudi ,
× RELATED மனைவியை தாக்கிய கணவர் கைது