×

யுனெஸ்கோ குழுவின் அறிக்கையில் உள்ளபடி தொன்மையான கோயில்களில் புனரமைப்பு பணி: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு

சென்னை: யுனெஸ்கோ குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளபடி ஆகம, சில்ப சாஸ்திர விதிமீறல்கள் இன்றி தொன்மையான கோயில்களில் புனரமைப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என்று அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் அனைத்து மண்டல இணை ஆணையர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள தொன்மையான கோயில்களில் திருப்பணி மேற்கொள்ளுதல் மற்றும் தொன்மையானதும், கலையம்சம் கொண்டதுமான கட்டிடக்கலை அமைப்புகள், சுவரோவியங்கள், பழங்கால பொருட்கள் போன்றவற்றை பாதுகாத்தல் தொடர்பாக கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பல்வேறு வழிகாட்டுதல்களை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி கோயில்களில் அலங்கார வேலைப்பாடுகள் உள்ளவற்றின் தரத்தினை நன்கு பராமரிக்க வேண்டும். கருங்கற்களால் கட்டப்பட்ட அல்லது நிறுவப்பட்ட எந்த பணிகளாக இருந்தாலும் அவற்றை மணல் பீச்சு முறையில் சுத்தம் செய்வதை அறவே தவிர்க்க வேண்டும். யுனெஸ்கோ குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளவாறு, கோயில்களில் புதுப்பித்தல் பணியில் குறைபாடுகளை களைந்தும், ஆகம மற்றும் சில்ப சாஸ்திர விதி மீறல்கள் இன்றியும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு அவ்வாறான விதிமீறல் மற்றும் குறைபாடுகள் இருப்பின் அவற்றை சரி செய்ய வேண்டும். மீண்டும் ஏற்கனவே இருந்த அதன் அசல் நிலைக்கு மீட்டெடுக்க வேண்டுமென அனைத்து அலுவலர்களையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. இது தொடர்பாக ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள செயல் அலுவலர்கள், ஆய்வர்கள், தக்கார், அறங்காவலர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு தக்க அறிவுரைகளை அந்தெந்த மண்டல இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர்கள் வழங்க வேண்டும். கோயில்களில் அவ்வப்போது ஆய்வு செய்து மேற்குறிப்பிட்டுள்ளவைகளை கோயில் நிர்வாகத்தால் முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதை நேரில் கண்டறிந்து இப்பணியில் குறைபாடுகள் ஏதும் இருப்பின் உரிய அறிவுரைகள் வழங்கி அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post யுனெஸ்கோ குழுவின் அறிக்கையில் உள்ளபடி தொன்மையான கோயில்களில் புனரமைப்பு பணி: ஆணையர் குமரகுருபரன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : UNESCO ,Commissioner ,Kumaragurupara ,Chennai ,Kumaraguruparan ,Dinakaran ,
× RELATED புராதன சின்னங்களை பாதுகாப்பது...