பத்து தல படத்தில்கவுதம் கார்த்திக்கிற்கு முக்கியத்துவம் இல்லையா?: சிம்பு பதில்

சென்னை: ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய படங்களை தொடர்ந்து ஒபிலி என்.கிருஷ்ணா இயக்கியுள்ள ‘பத்து தல’ படத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கவிஞர் மனுஷ்யபுத்திரன், கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார். வரும் 30ம் தேதி திரைக்கு வரும் இப்படம் குறித்து செய்தியாளர்களிடம் சிம்பு கூறியதாவது: ‘பத்து தல’ படத்தில் நடித்த ஒவ்வொருவருக்கும் அதிக முக்கியத்துவம் இருக்கும். இப்படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம், கவுதம் கார்த்திக். சினிமாவில் அவர் இன்னும் பல உயரங்களை தொட வேண்டும். படத்தில் அவருக்கு முக்கியத்துவம் குறைத்துவிட்டதாக வெளியான தகவலை நம்ப வேண்டாம். ஷூட்டிங்கில் கவுதம் கார்த்திக் எவ்வளவு கஷ்டப்பட்டாலும், அதை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார். எவ்வளவு கடுமையான வலியையும் ரொம்ப ஜாலியாக எடுத்துக் கொள்பவர்கள் வாழ்க்கையில் தோற்றுப்போக வாய்ப்பே இல்லை. இப்படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் கடுமையாக உழைத்துள்ளார். அவர் எனக்கு காட்பாதர். அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன்.

ஒரு பாடல் காட்சியில் சாயிஷா அருமையாக நடனமாடி இருக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கிய ‘வேட்டை மன்னன்’ படப்பிடிப்பிலேயே ரெடின் கிங்ஸ்லியின் காமெடியை ரசித்தேன். இன்று அவர் பிரபலமாவதற்கு முன்பே அவரது திறமையை அடையாளம் கண்டவன் நான். கவுதம் வாசுதேவ் மேனன் நடிப்பில் பிசியாகிவிட்டதால், அவரது இயக்கத்தில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் 2ம் பாகத்தில் நான் நடிக்க முடியுமா என்று தெரியவில்லை. ‘தம்’ படத்தில் நடித்து முடித்த பிறகு ஒபிலி என்.கிருஷ்ணா டைரக்‌ஷனில் நான் நடித்திருக்க வேண்டும். ஏதேதோ காரணங்களால் அது நடக்கவில்லை. தற்போது நாங்கள் இணைந்துள்ள ‘பத்து தல’ படம் உருவாகியுள்ளது.

Related Stories: