×

உரம் தயாரிப்பதற்கேற்ற மண்புழு வகைகள் விவசாயிகளுக்கு வேளாண் பேராசிரியர்கள் ஆலோசனை

மன்னார்குடி : மண்புழு உரம் தயாரிப்பதற்கேற்ற மண்புழு வகைகள் குறித்து விவசாயிகளுக்கு வம்பன் பயறு வகை ஆராய்ச்சி மைய பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியர் ராஜா ரமேஷ், பேராசிரியர் மற்றும் தலைவர் குணசேகரன், நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங் கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன் ஆகியோர் கூறியது:உலகம் முழுவதும் மண்புழுவில் 3,320 வகைகள் இருப்பதாகக் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதில் இந்தியாவில் மட்டும் 509 வகைகள் இருக்கின்றன. மண்புழுக்கள் 2 செ.மீ. நீளம் முதல் 1 மீ. நீளம் வரையிலும் காணப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் 7 மீ. நீளம் கொண்ட மண்புழுக்கள் காணப்படுகின்றன மண்புழுக்கள் நிலத்தில் 2 மீ. முதல் 3 மீ. ஆழம் வரைக்கும் செல்லக்கூடியது. மண்புழுக்கள் தினமும் 100 முதல் 300 மி.கி.,கிராம் உடல் எடைக்கு உணவாக உட்கொள்ளும். மண்புழு இடும் முட்டைகளுக்கு கக்கூன் என்று பெயர். ஒரு கக்கூனில் இருந்து 3 குஞ்சுகள் வெளிவரும். முட்டையில் இருந்து குஞ்சுகள் வருவதற்கு 3 வாரங்கள் வரை ஆகும்.மண்புழுக்கள் கடல், பாலைவனம், பனிப்பிரதேசம் மற்றும் பயிர்கள் வளர முடியாத இடங்களில் காணப்படுவதில்லை. ஒரு கிலோ மண்புழுக்கள் (1000 எண்ணிக்கை) ஒரு நாளில் 5 கிலோ கழிவை உரமாக மாற்றும். 10 கிலோ புழுக்கள் 5 ச.மீ. பரப்பளவில் 1 டன் கழிவை உரமாக மாற்றும்.மண்புழுவின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் காரணிகள்: மண்புழுக்களின் எண்ணிக்கையானது மண்ணின் ஈரப்பதம், மண்ணின் கார அமில நிலை மற்றும் அவ்விடத்திலுள்ள கரிமப் பொருளின் தன்மை மற்றும் அவற்றின் அளவைப் பொறுத்து அமைகின்றது.மண்புழு உரம் தயாரிப்பதற்கு மண்ணின் மேற்புறத்தில் வாழக்கூடிய மண்புழு கீழ்கண்ட மண்புழு இனங்களே சிறந்தவையாகும். யூட்ரில்லஸ் யூஜினியே-ஆப்பிரிக்கன் மண்புழு, எய்சீனியா பெடிடா-சிவப்பு மண்புழு, பிரியானிக்ஸ் எக்ஸ்கவேட்டஸ்-கம்போஸ்ட் மண்புழு.யூடிரில்லஸ் யூஜினியே (ஆப்பிரிக்கன் மண்புழு):  இவற்றின் வாழ்க்கை சுழற்சிக் காலம் சுமார் 60 நாட்கள் ஆகும். நாளொன்றுக்கு 12 மி.கிராம் என்ற அளவில் வளர்ச்சியடைந்து 4 முதல் 5 கிராம் எடையுடையதாக வளர்கிறது. இவை 40 நாட்களில் நன்கு வளர்ச்சியடைந்து இனப்பெருக்கத்திற்கு தகுதியடையும். இனச் சேர்க்கையில் ஈடுபட்ட 5 முதல் 6 நாட்களில் முட்டைக் கூடுகளை இடுகிறது. இந்த மண்புழுக்களால் இடப்படும் முட்டைக்கூடுகளில் 50 முதல் 60 சதவீத முட்டைக்கூடுகளே பொறிக்கும் திறன் பெற்றவையாக இருக்கும். ஒவ்வொரு முட்டைக்கூட்டிலிருந்தும் 2 முதல் 3 மண்புழுக்கள் உருவாகின்றன.மண்புழு மட்கு உரத்தின் நன்மைகள்: சத்துக்கள் பயிர்கள் எடுத்துக் கொள்ளும் நிலையில் இருக்கிறது. மண்ணில் அங்கக பொருட்கள் அதிகமாகின்றது. மண்ணில் நொதிகளின் செயல் அதிகமாகின்றது. நோய்க் கிருமிகள் அகற்றப்படுகின்றன. மண்ணில் ஈரப்பதம் அதிகமாகின்றது. சத்துக்கள் எளிதில் பயிர்களால் கிரகிக்கப்படுகிறது. ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்வது எளிது.பயிர்களுக்கு வேண் டிய வளர்ச்சி ஊக்கிகளான ஆக்சின், சைட்டோ கைனின், ஜிப்ரெலின், இன்டோ அசிட்டிக் அமிலம் போன்றவை இருக்கின்றன. அதனால் பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். நன்மை தரும் நுண்ணுயிர்கள் உள்ளன. மணமற்றதாக உள்ளதால் கையாளுவது எளிது. மண்ணல் உட்புகுந்து செல்வதால் காற்றறைகளை அதிகப்படுத் தும். தண்ணீரை கிரகித்து சேமிப்பது வைத்து மண்ணில் தண்ணீரின் அளவை மேம்படுத்தப்படும்.மண்புழு உரத்தில் உள்ள சத்துக்கள்: கார-அமில தன்மை 6-7 சதம், தழைச்சத்து 1.2- 1.8 சதம், மணிச்சத்து 0.1- 0.2 சதம், சாம்பல் சத்து 0.2-0.4 சதமாகும். இவ்வாறு அவர்கள் கூறினர்….

The post உரம் தயாரிப்பதற்கேற்ற மண்புழு வகைகள் விவசாயிகளுக்கு வேளாண் பேராசிரியர்கள் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Mannargudi ,Vamban ,
× RELATED ‘கூப்பிடும்போது எல்லாம் வரவேண்டும்’...